'நாடு முழுதும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்ந்துள்ளது. வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதைக் கண்டித்து, இந்திய கம்யூ., -- மார்க்சிஸ்ட் கம்யூ., - விடுதலை சிறுத்தைகள் உட்பட பல கட்சிகள் இணைந்து, வரும் 26, 27ல் தமிழகம் முழுதும் போராட்டம் நடத்த உள்ளன' என்று அறிவித்திருக்கிறார், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன்.
இந்தப் போராட்டம் அறிவிப்பிற்கான காரணங்களில் ஒன்று, வேலையின்மை அதிகரித்து வருகிறது என்பதாகும். தமிழகத்தில், விவசாய வேலைகளை செய்ய கூலியாட்கள் கிடைக்காமல், வட மாநிலத்தவரை அழைத்து வந்து தங்களின் பணிகளை செய்கின்றனர் விவசாயிகள்.
அதுமட்டுமின்றி, கட்டுமான தொழில், ஹோட்டல் தொழில், துப்புரவு முதல் சாலை போடும் பணிகள் வரை அத்தனை வேலைகளுக்கும், தமிழகத்தில் ஆட்கள் கிடைக்கவில்லை; வட மாநிலத்தவரே, இந்த வேலைகளில் பெருமளவு ஈடுபட்டுள்ளனர். இதன்படி பார்த்தால், தமிழகத்தில் யாருமே வேலையில்லாமல் இல்லை. ஒவ்வொருவருக்கும் வேலை இருக்கிறது.
அதனால் தான், வட மாநில தொழிலாளர்கள், இங்கு பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். கம்யூனிஸ்ட்களின் போராட்ட அறிவிப்புக்கான மற்ற காரணங்கள், அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வாகும்.
ஆம்... பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்ந்து தான் உள்ளது; மறுக்கவில்லை. விலை உயர்ந்துள்ளதால், யாரும் வாகனங்களுக்கு எரிபொருள் போடாமல், அவற்றை வீட்டின் மூலையில் நிறுத்தி வைத்து, பஸ்சில் பயணிக்கின்றனரா? பெட்ரோல் 'பங்க்'குகளில் கலெக் ஷன் குறைந்துஉள்ளதா... எந்த வீட்டிலாவது, 'டெலிவரி'க்கு வரும் காஸ் சிலிண்டரை வாங்க பணம் இல்லை என்று, திருப்பி அனுப்பி இருக்கின்றனரா?
இது தொடர்பான விபரங்கள் இருந்தால் தாருங்கள், மிஸ்டர் முத்தரசன்! நாட்டின் பொருளாதாரம் நிலை கூடி இருக்கிறதா, குறைந்து இருக்கிறதா என்பதை, 'டாஸ்மாக்' கடைகளின் விற்பனை வாயிலாகவே புரிந்து கொள்ள முடியும். மக்களிடையே பணப்புழக்கம் இல்லை என்றால், டாஸ்மாக்கில் கூட்டம் அலைமோதுமா?
மக்களிடம் பணம் இல்லை என்றால், நகைக் கடைகளிலும், துணிக் கடைகளிலும் கூட்டம் பிதுங்கி வழியுமா? ஆக, மக்கள் சுபிட்சமாகவே இருக்கின்றனர். முத்தரசன் அவர்களே... உங்கள் கட்சியை பொறுத்தமட்டில், போராட்டம் நடத்த, ஒரு காரணம் வேண்டும். கம்யூனிஸ்ட்களின் ரத்தத்தில் ஊறிப் போயிருக்கிறது போராட்ட குணம்; போராடாமல் தவிர்த்தால், அது சிதைந்து விடும். உங்கள் கட்சியினர் சிந்தாமல், சிதறாமல் இருக்கவே இந்தப் போராட்டம்... மக்களுக்காக அல்ல. வாழ்க உங்கள் போராட்டம்... வளர்க பொருளாதாரம்!
No comments:
Post a Comment