தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சரிவர செயல்படாத நான்கு அமைச்சர்களை பதவியிறக்கம் செய்யவும், அதிருப்தியில் உள்ள அமைச்சர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த ஓராண்டில், ஒரு அமைச்சரை கூட நீக்கவில்லை. ஆனால், அதிகாரி ஒருவரை ஜாதியின் பெயரைச் சொல்லி திட்டியதாக எழுந்த புகாரில், ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்து துறை மட்டும் பறிக்கப்பட்டு, முக்கியத்துவம் இல்லாத பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. அதுவரை, அந்தத் துறையின் அமைச்சராக இருந்த சிவசங்கருக்கு, போக்குவரத்து துறை தரப்பட்டது.
திட்டமிட்டார்
இம்மாதம் 10ம் தேதி, சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும், ஓராண்டில் சரிவர செயல்படாத அமைச்சர்களை பதவியிறக்கம் செய்யவும், சில அமைச்சர்களிடம் உள்ள கூடுதல் துறைகளை பறிக்கவும், சிலரை வேறு துறைகளுக்கு மாற்றவும், முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டார்.
இந்நிலையில், ஊட்டியில் முகாமிட்டிருந்த முதல்வர், இரண்டு விஷயங்கள் குறித்து, அங்கு ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகி உள்ளது. ஒன்று, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்; மற்றொன்று அமைச்சரவை மாற்றம் என அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனைக்கு பின், அதிகாரிகள் மாற்றத்திற்கான பட்டியல், ஓரிரு நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு பற்றியும், கொலை, கொள்ளைகள் அதிகரிப்பு பற்றியும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதனால், ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தவிர்க்க, அதிகாரிகள் மட்டத்தில் அதிரடி மாற்றங்கள் செய்ய ஸ்டாலின் விரும்புகிறார்.அதற்கேற்ப ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக, அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
உதயநிதி
அதன் தொடர்ச்சியாக, அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்தின் போது, தன் மகனும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியை, அமைச்சராக்க வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். கருணாநிதி பிறந்த நாளான, ஜூன் 3ம் தேதியன்று, அவர் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சியினர் விரும்புகின்றனர்.
அதேநேரத்தில், அவர் அமைச்சரான பின், தொடர்ந்து சினிமாவில் நடிக்கக் கூடாது என்றும் முதல்வர் தடை போட்டு விட்டார். அதன் காரணமாக, உதயநிதி தற்போது ஒப்பந்தமாகி உள்ள படங்களின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. அடுத்த மாதம் இறுதி வரை படப்பிடிப்பு இருக்கலாம் என, உதயநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால், அவருக்காக அமைச்சரவை மாற்றத்தை தள்ளி வைக்கலாமா அல்லது திட்டமிட்டபடி இப்போது சில மாற்றங்களை செய்யலாமா என, ஊட்டியில் முதல்வர் ஆலோசித்துள்ளார்.
இதற்கிடையில், அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் யார் யார் சிறப்பாக பணியாற்றினர்; யார் சிறப்பாக பணியாற்றவில்லை என்பதை ஆய்வு செய்து, முதல்வரிடம் அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காகவே, தனி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு இருந்தது. அதில், செயல்பாடு இல்லாமல், பெயருக்கு அமைச்சராக இருக்கிற கொங்கு மண்டல பெண் அமைச்சர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். இவருக்கு பதிலாக, தென் மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் அமைச்சர் ஒருவர், மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது.
ஜாதி பெயரை சொல்லி சர்ச்சையில் சிக்கி, இலாகா மாற்றத்துக்கு ஆளான அமைச்சர், மாவட்ட அளவில் கட்சி நிர்வாகிகளிடம் மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதாக புகார் உள்ளது. அதனால், அவரை மாற்றி விட்டு, புதுமுகத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
அதிருப்தி
'ஆடியோ' வாயிலாக மிரட்டல் விடுத்துள்ள தென் மாவட்ட அமைச்சரிடம் இருந்து, ஒரு இலாகா மட்டும் பறிக்கப்படுவது உறுதியாகி உள்ளது. அதிகாரிகளை கட்டுப்படுத்தி, வேலை வாங்கும் நிர்வாகத் திறமை இல்லாத, டெல்டா மாவட்ட அமைச்சரை பதவியிறக்கம் செய்யவும், அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, அந்த பதவியை வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர், எதிர்பார்த்த இலாகா கிடைக்காமல் கடும் அதிருப்தியில் உள்ளார். சென்னையில் அவருக்காக ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவுக்கு கூட செல்லாமல் உள்ளார். அவரை திருப்திபடுத்த, கூடுலாக ஒரு இலாகா தரப்படும் என தெரிகிறது. இதற்காக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சரிடம் உள்ள இரண்டு, 'பவர்புல்' இலாகாவில் ஒன்றை பறிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக, கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment