"சார் ஐநூறு ரூபாய்க்கு சில்லறை கிடைக்குமா?"
"சில்லரை கொடுத்து டிக்கட் வாங்கவும்"
"உங்கள் காணிக்கைகளை உண்டியலில் போடவும்"
இது போன்ற பேச்சு மற்றும் வார்த்தைகள் காணாமல் போய்விடும் இனி வரும் காலங்களில். ஏனென்றால் இப்போது இருக்கும் ரூபாய் நோட்டுகளும் சில்லரையும் புழக்கத்தில் இருக்காது.இதைத்தான் "கேஷ்லெஸ்" சொசைட்டி என்கிறார்கள். அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா?
கீழே படியுங்கள்.
இந்த மாதம் அதாவது டிசம்பர் 1 2022 அன்று நமது ரிசர்வ் வங்கி "டிஜிடல் ருபாய்" என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு இன்னொரு பெயர் ஈ-ருபாய் அதாவது (e₹ ). நம் மணிபர்ஸில் இருக்கும் ரூபாயும் டிஜிடல் ரூபாயும் ஒன்றே,ஒரே வித்தியாசம் நம் பர்ஸில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறையை நாம் கையில் தொடலாம்.ஆனால் டிஜிடல் ரூபாய் அதற்கென்றே உள்ள ஒரு வால்லெட்டில் இருக்கும்.நம் கையால் தொடமுடியாது . ஆனால் சீரியல் நம்பர்கள் கொண்ட டிஜிடல் ரூபாய் நோட்டுகளை நாம் பார்க்கமுடியும். இரண்டுக்கும் ஒரே மதிப்பு. பர்ஸில் 10 ரூபாய்நோட்டு இருக்கிறது டிஜிட்டல் வேலட்டில் 10 e ரூபாய் இருக்கிறது. எப்போதும் இரண்டும் சமம். இப்போது புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளைப் போலவே டிஜிடல் ரூபாய் நோட்டுகளும் வெளியிடப்படும். ₹ 1, ₹ 2, ₹ 10, ₹ 20, ₹ 50, ₹ 100 , ₹ 500, ₹ 2000, and even 50 பைசா நாணயம் உட்பட.
பர்ஸில் இருக்கும் ரூபாய் கிழிந்து போகலாம்,தொலைந்து போகலாம்,தீயி்ல் எரிந்து போகலாம், அல்லது கள்ள நோட்டாக இருக்கலாம்,பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் பணம் வாஷிங் மெஷினில் சுற்றலாம்.ஆனால் டிஜிட்டல் ரூபாய்க்கு ஓன்றும் ஆகாது. தீர்காயுசு.ரூபாய் நோட்டு அச்சு அடிக்க, சில்லரைக்காசுகளை தயாரிக்க,அவற்றை பத்திரமாக பாதுகாக்க மற்றும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச்செல்ல என்று பல வகையான செலவு இருக்கிறது.ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களை
அச்சிட 2016 ஆம் ஆண்டு ரூபாய் 7965 கோடி செலவாகியிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது.டிஜிட்டல் ரூபாயில் இந்தப்பிரச்சினைகள் இல்லை.
அது சரி.நம்மைப்போன்ற சாதாரண மக்கள் எப்படி இதைப் பெறுவது எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போம்.
நாம் டிஜிடல் ரூபாய் வாங்க முதலில் இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட "டிஜிட்டல் ஆப்" ஐ நம் மொபைல் போனில் டெளன்லோட் செய்யவேண்டும். இதை நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கி மூலம் பெறலாம். நமக்கு எவ்வளவு டிஜிடல் ரூபாய் வேண்டுமோ அவ்வளவு ரூபாய் நம் வங்கிக் கணக்கிலிருந்து டிரான்ஸ்பர் செய்தால் அதே தொகை நம் டிஜிடல் வாலட்டில் கிரெடிட் ஆகிவிடும்.
உதாரணமாக நமக்கு 5774 டிஜிடல் ரூபாய் வேண்டுமானால் 500 × 10 200×3 100×1 50×1 10×2 1 ரூபாய் காயின் 4 என்று கேட்க வேண்டும். நான் ஒரு மளிகைக்கடைகாரருக்கு 274 டிஜிடல் ரூபாய் கொடுக்க வேண்டுமானால் அவரும் அவருடைய மொபைல் போனில் டிஜிடல் ரூபாய் வேலட் டவுன்லோடு செய்திருக்கவேண்டும். நான் அவருக்கு என் டிஜிடல் வாலட்டிலிருந்து 200×1 50×1 10×2 1×4 டிரான்ஸ்பர் செய்யவேண்டும். இந்த ரீடைல் டிஜிட்டல் ரூபாய் வாயிலான பேமெண்ட்-ஐ தற்போது UPI சேவை போல் QR கோடு வாயிலாக எளிதாகச் செய்ய முடியும்.
நாம் நம் பர்ஸில் வைத்திருப்பதுபோல் டிஜிடல் வாலட்டிலும் எல்லா டினாமினேஷன் நோட்டுகளும் வைத்திருக்கவேண்டும். டிஜிடல் வாலட்டில் இருக்கும் பணத்தை நம் வங்கிக்கணக்குக்கு டிரான்ஸ்பர் செய்யலாம். இதேபோல் டிஜிடல் வாலட் வைத்திருக்கும் மற்றவர்களிட மிருந்து நாமும் நம் டிஜிடல் வாலட்டில் பணம் பெறலாம்.இப்போது நாம் உபயோகிக்கும் ரூபாய் நோட்டுக்களைப்போலவே டிஜிடல் ரூபாயை வெளியிடுவதும் அதை வாங்கி அதற்கு சமமான தொகையைக் கொடுப்பதும் ரிசர்வ் வங்கியின் வேலை. அதை டிஜிடல் வாலட் மூலமாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பது மற்ற வங்கிகளின் வேலை. டிஜிடல் வாலட்டில் இருக்கும் பணத்திற்கு ரிசர்வ் வங்கி பொறுப்பு. டிஜிடல் வாலட்டில் இருக்கும் பணத்திற்கு வட்டி கிடைக்காது.
டிஜிடல் ரூபாயை பயன்பாட்டை ரிசர்வ் வங்கி டிசம்பர் 1 2022 அன்று சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளது. மொத்த விற்பனைக்கான டிஜிட்டல் ரூபாயை (e₹-W) நிதி நிறுவனங்களுக்கு இடைப்பட்ட வங்கித் தீர்வுகளுக்கும், சில்லறை வணிகத்திற்கும் நுகர்வோர் மற்றும் வணிகப் பரிவர்த்தனைகளுக்குமான டிஜிட்டல் ரூபாயை (e₹- R) ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி யிருக்கிறது.
தற்போது டெல்லி, மும்பை, பெங்களூரு, புபனேஷ்வர் ஆகிய நான்கு நகரங்களில் மட்டும் சிறு பரிவர்த்தனை களுக்கு டிஜிட்டல் ரூபாய் கொண்டு வரப்பட்டுள்ளது. எஸ்பிஐ, ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி ஐசிஐசிஐ வங்கி, எஸ் வங்கி, ஆகிய வங்கிகள் டிஜிட்டல் ரூபாயை கையாளுகின்றன. தற்போது நான்கு நகரங்களில் முதற்கட்ட சோதனை நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்ட சோதனையில் கூடுதலாக ஒன்பது நகரங்களில் சில்லறை பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இது முழுமையாக அமலுக்கு வந்தபின்னரே நாம் எல்லோரும் டிஜிடல் ரூபாயை உபயோகிக்க முடியும்.
No comments:
Post a Comment