என் நண்பனின் கல்யாண ரிசப்ஷன். தாமதமாக சென்றேன். மண்டபம் கிட்டத்தட்ட காலியாக இருந்தது. மணமக்களின் குடும்பத்தினர் இருந்தார்கள்.
"இப்போ தான் சாப்பிட்டோம். நீங்க சாப்பிட்டு வாங்க"
வரிசைகள் காலியாக இருந்தது. கேட்டரிங் பணியாளர் ஒருவர் இலை போட்டார்.
போட்டோ , வீடியோக்காரர்கள் 4 பேர் என் பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள்.
"சும்மா வெக்கப்படாம வாடா "
ஒரு சிறுவனை அழைத்தார்கள். அவன் தயங்கி தயங்கி உட்கார்ந்தான். அவன் வயது 8 அல்லது 9 இருக்கக்கூடும்.அவனுக்கும் இலைப் போட்டு பரிமாறத் தொடங்கினார்கள்.
சாப்பிடத் தொடங்கினான். .
எங்கள் இலைகளில் மைசூர்பாக்கு வைத்தார்கள்.
"வீடியோ எடுக்க கத்துக்கொடுங்க அண்ணானு கேட்டுட்டே இருந்தான். சரிடா தம்பி எங்க கூட வந்து வேடிக்கை பாத்து கத்துக்கோடானு கூட்டிட்டு வந்துட்டோம். எங்க ஸ்டூடியோ பக்கத்துல தான் பையன் வீடு "
சிறுவன் ஆமோதிப்பது போல் தலை ஆட்டினான்.
"நல்லா கத்துக்கிட்டியா " என்றேன்.
மீண்டும் தலை ஆட்டினான்.
"உன் பேர் என்ன ?"
"சதீஷ் "
"எந்த க்ளாஸ் படிக்கிற "
"4 "
சாப்பிட்டு முடித்து இருந்தான்.
"சாப்பாடு வைக்கவா "
""போதும் அண்ணா "
அவன் இலையில் மைசூர்பாக்கு மட்டும் சாப்பிடாமல் வைத்து இருந்தான்.
தன் சட்டைப்பையில் ஒரு செய்தித்தாள் பகுதி எடுத்து கிழித்து வைத்திருந்தான்.அதில் மைசூர்பாக்கை மடித்தான்.
"இங்க சாப்பிட மாட்டியா "
"தம்பிக்குணா . நான் தான் இங்கே நிறைய சாப்ட்டுட்டேனே "
கேட்டரிங் நபர் இன்னொரு மைசூர்பாக்கை அவன் இலையில் வைத்தார்.
"அதை தம்பிக்கு கொடு . இதை நீ சாப்பிடு " என்றார்.
அவன் அதையும் பேப்பரில் மடித்தான் ,
"தம்பிக்கு ஒன்னு கொடுத்துடுவேன் , இதை புட்டு நானும் அம்மாவும் சாப்பிடுவோம் "
அவன் அப்பாவை பற்றி கேட்க நினைத்தேன். அநாகரீகம் என்று எண்ணியதால் கேட்கவில்லை. விருப்பம் இருந்தால் அவன் சொல்லட்டும்.
கேட்டரிங் நபர் இன்னும் ஒரு மைசூர் பாக்கு வைத்தார் .
"அம்மாக்கு ஒன்னு ,தம்பிக்கு ஒன்னு கொடு . இதை நீ இங்க சாப்பிடு "
"வீட்டுக்கு போயி மூணு பேரும் சேர்ந்து சாப்பிடறோம் அண்ணா. நான் ரெண்டு எடுத்துட்டு போனா அம்மா வேண்டாம்னு சொல்லிடுவாங்க.நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்கனு எங்க கிட்டயே கொடுத்துடுவாங்க. கல்யாண மண்டபத்துல கொடுத்தாங்க னு சொன்னா அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க "
அவன் மூன்றையும் பேப்பரில் மடித்தான்.
கேட்டரிங் நபர் மேலும் ஒன்றை வைத்தார்.
"நான் எப்படி 2 சாப்பிடுவேன் . இதை நாளைக்கு காத்தால ஸ்கூல் போறதுக்கு முன்னாடி நானும் தம்பியும் பாதி பாதி சாப்பிடுகிறோம் அண்ணா "
நான்கையும் பேப்பரில் மடித்தான்.
கேட்டரிங் நபர் ஒரு மைசூர்பாக்கை எடுத்தார். இரண்டாக உடைத்தார்.
"இது என்னோடதுடா, இது தான் லாஸ்ட் . பாதி நான் சாப்பிடறேன் .நீ பாதி மைசூர்பாக்கை இங்கேயே என்னோட கண்ணு முன்னாடி சாப்பிடுடா "
சதீஷ் பாதி மைசூர்பாக்கை சாப்பிட்டான் .
"ரொம்ப டேஸ்ட்டா ,சூப்பரா இருக்குணா "
இன்னொரு பாதி எடுத்து அவனிடம் கொடுத்தார்.
"இந்த பீஸ் கூட நீயே சாப்பிடுடா . ம்ம்ம் சும்மா சாப்பிடுடா "
சாப்பிட்டான். முகத்தை மூடி வேறு பக்கம் திருப்பி கண்களை துடைத்தான்.
"அழுவறியா சதீஸு "
"இல்லேண்ணா ,கண்ல ஏதோ தூசி விழுந்துடுச்சுணா " என்றான்.
No comments:
Post a Comment