ஒரு நகரத்தில் ஒரு செல்வந்தர் ஒரு நாள் ஒரு இலட்சம் ரூபாயை தர்மம் செய்யப்போவதாக விளம்பரம் செய்தார். விளம்பரத்தை அறிந்த மக்கள் கிட்டத்தட்ட இலட்சம் பேர் குழுமி விட்டனர். யாரையும் வெறுங்கையோடு அனுப்ப விரும்பாத செல்வந்தர் இலட்ச ரூபாயையும் பிரித்து குறைந்தது ஒரு ரூபாயாவது தந்தனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஒற்றை ரூபாயைத் தானமாக பெற்றவர்கள் 'இந்த ஒற்றை ரூபாய் தர்மத்திற்காகவா இவ்வளவு விளம்பரம்! ஆர்ப்பாட்டம்' என்று தூற்றினர். செல்வந்தருக்கு வருத்தம்.
இரண்டாவது முறை மற்றுமொரு இலட்சரூபாயை தர்மத்துக்காக ஒதுக்கி குறைவாக மனிதர்கள் வந்தால் நிறைவாக இருக்கும் என்று அளவாக அறிவிப்பு செய்தார். அப்பொழுதும் ஆயிரம் பேர் குவிந்து விட்டனர். ஆளுக்கு நூறு ரூபாய் வீதம் பிரித்துக் கொடுத்தனுப்பினார். பெற்றவர்கள் பெரிய மகிழ்ச்சி ஒன்றும் அடையவில்லை. மீண்டும் செல்வந்தருக்கு ஏமாற்றம்.
மூன்றாவது முறையாக ஒரு இலட்சம் ரூபாயை ஒதுக்கி விளம்பரமாக இல்லாமல் தகவல்களைச் சொல்லி தர்மத்துக்கு நாள் குறித்தார். அன்றைக்கு சுமார் நூறு பேர்கள் கலந்து கொண்டு ஆளுக்கு ஆயிரம் பெற்றுச் சென்றனர். ஆயிரம் பெற்றவர்களும் ஆசீர்வாதம் செய்யாமல் இதென்ன பெரிய தர்மமோ என்று ஏதும் சொல்லாமல் சென்று விட்டனர். மீண்டும் செல்வந்தருக்கு ஏமாற்றம்.
நான்காவது முறையாக அறிந்த தெரிந்த ஏழைகள் பத்துப் பேரை அழைத்து ஆளுக்கு பத்தாயிரம் வீதம் பகிர்ந்து கொடுத்ததுப் பார்த்தார். பெற்றவர்கள் “பரவாயில்லை” என்றார்களே தவிர பரவசமாய் பாராட்ட வில்லை.
முறை ஒரு இலட்சம் ரூபாயையும் ஒருவருக்கே உதவினால் நலம் பயக்கும் என்று முடிவு செய்தார்.
முன்னேற வேண்டும் என்று முனைப்பாயுள்ள, ஒரு இளைஞரை அழைத்து இலட்ச ரூபாயையும் தந்தார். இலட்சத்தைப் பெற்ற இளைஞர் முன்னேற வழி பிறந்தது என்று மகிழ்ந்தார். செல்வந்தரை நன்றியோடு வாழ்த்தினார்.
எண்ணிக்கையை குறைக்க குறைக்க பெறுபவர்களின் 'பணச்சக்தி' அதிகரிக்கிறது.
அதுபோல மனித மனத்தில் உருவாகிற இலட்சம் வகையான எண்ணங்களையும் இலட்சம் விசயங்களில் செலுத்தினால் 'ஒற்றை ரூபாய் சக்தி' தான். மனோ சக்தியும் மலிந்தும் நலிந்தும் போகிறது.
பதவி வேண்டும், வீடு வேண்டும், நிலம் வேண்டும், வாகனம் வேண்டும், பணம் வேண்டும், புகழ் வேண்டும் என்று பல இலட்சியங்களையும் அடைய வேண்டும் என்று எண்ணங்களை சிதறடிப்பதைவிட எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒன்றை மனதிலே நினைத்து அந்த ஒன்றில் மட்டுமே எண்ணத்தைக் குவித்தால் வலிமையான எண்ணம் உருவாகும். எண்ணியதை எண்ணியவாறு அடையும் சூட்சுமம் இரகசியம் இதுதானே.
எண்ணச் சிதறல் எண்ணியதை அடைய உதவாது. எண்ணக் குவிப்பு (Concentration) திண்ணிய மனிதராக்கும்.
No comments:
Post a Comment