தலைநகர் டில்லி நேற்று, அதகளப்பட்டது. ஒரு பக்கம், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புக் கலவரமும், மற்றொரு பக்கம், தீவிரவாதத்தை வேரறுக்க, நம் நாட்டுப் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டதுமாக அல்லோகல்லோலப் பட்டது.
கலவரங்களைத் தடுக்க அமல்படுத்தப்படும், குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு, 144, டில்லியில் கலவரம் நடக்கும் பகுதிகளில் அமலாகி உள்ளது. அதேபோல், தீவிரவாதத்துக்கு, 144 தடை உத்தரவு போடும் வகையில், அமெரிக்கா மற்றும் இந்திய தலைவர்கள் நேற்று, 'நாற்கர நாடுகள் சேர்ந்து, தீவிரவாதத்தை வேரறுக்க, தீவிர முயற்சி மேற்கொள்வோம்' என, கூட்டாக அறிவிப்பு வெளியிட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, டில்லியின் வடகிழக்கு பகுதியில், இரண்டு நாட்களாக கலவரம் நடந்து வருகிறது. பொதுமக்கள், போலீசார் என, இரு தரப்பிலும் உயிர் பலிகள் நிகழ்ந்துள்ளன.கலவரத்தைக் கட்டுப்படுத்த, துணை ராணுவப் படை முதல், பல விதமான காவல் படைகளும் களமிறங்கி இருந்தாலும், கலவரம் கட்டுப்படவில்லை.
இதற்கு காரணமான பிரச்னை மற்றும் நபர்கள் குறித்து, சமூக ஊடகங்களில் தகவல்கள் வேகமாக பரவுவதால், வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு, டில்லியின், கோகுல்பூர், மாவுஜ்பூர் சாந்த்பாக், குரேஜி காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில், வாகனங்கள், வீடுகள், கடைகள் நேற்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இதுவரை, ஒன்பது பேர் பலியாகி உள்ளனர்.வன்முறை பரவாமல் தடுக்க, கலவரம் நடக்கும் இந்தப் பகுதிகளில், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவான, 144 தடை உத்தரவு போடப்பட்டுஉள்ளது.
இது ஒரு புறம் இருக்க, இரண்டு நாள் பயணமாக, இந்தியா வந்துள்ள, அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று இரண்டாவது நாளாக, பிரதமர் மோடியை, டில்லியில் சந்தித்துப் பேசினார். இருவரும் நடத்திய இந்த தனிச் சந்திப்பின்போது, ராணுவ ஒப்பந்தம், தீவிரவாதத்தை வேரறுப்பது ஆகியவை குறித்து, மிக விரிவாகப் பேசினர். பின், இருவரும் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டனர்.
அப்போது, டிரம்ப் பேசுகையில், ''எங்கள் தனிப்பட்ட விவாதத்தின்போது, அடிப்படைவாத இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து, நம் நாட்டு மக்களைக் காப்பது குறித்துப் பேசினோம். தீவிரவாதத்தை தன் சொந்த மண்ணில் செயல்படுத்துவதைத் தடுக்க, பாகிஸ்தான் பிரதமருடனும் ஆக்கபூர்வமாகப் பேசி வருகிறேன்.
''இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் இணைந்து, தீவிரவாதம், மின்னணு தகவல் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு ஆகியவை குறித்து, பல நடவடிக்கைகளை முன்னெடுப்போம்,'' என, கூறினார்.
No comments:
Post a Comment