Monday, February 24, 2020

274 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்.

1. கோயில் (சிதம்பரம், தில்லை)
சிவஸ்தலம் பெயர்
சிதம்பரம்
இறைவன் பெயர்
கனகசபை - சபாநாயகர், திருமூலட்டானம் - திருமூலநாதர்
இறைவி பெயர்
கனகசபை - சிவகாமி, திருமூலட்டானம் - உமையம்மை
தேவாரப் பாடல்கள்
சம்பந்தர்
1. கற்றாங் கெரியோம்பிக்
2. ஆடினாய்நறு நெய்யொடு
அப்பர்
1. செஞ்சடைக் கற்றை
2. பத்தனாய்ப் பாட மாட்டேன்
3. பாளையு டைக்கமு
4. கருநட்ட கண்டனை
5. அன்னம் பாலிக்குந்
6. பனைக்கை மும்மத
7. அரியானை அந்தணர்தஞ்
8. மங்குல் மதிதவழும்
சுந்தரர்
1. மடித்தாடும் அடிமைக்கண்.
மாணிக்கவாசகர்
1. கீர்த்தித் திருஅகவல்
2. திருவண்டப் பகுதி
3. போற்றித் திருஅகவல்
4. திருப்பொற்சுண்ணம்
5. திருக்கோத்தும்பி
6. திருத்தெள்ளேணம்
7. திருச்சாழல்
8. திருப்பூவல்லி
9. திருஉந்தியார்
10. திருதோணோக்கம்
11. திருப்பொன்னூசல்
12. அன்னைப்பத்து
13. குயில்பத்து
14. திருத்தசாங்கம்
15. திருப்பள்ளியெழுச்சி
16. கோயில்மூத்ததிருப்பதிகம்
17. கோயில்திருப்பதிகம்
18. கண்டபத்து
19. அச்சப்பத்து
20. குலாப்பத்து
21. எண்ணப்பத்து
22. யாத்திரைப்பத்து
23. திருப்படையெழுச்சி
24. திருப்படையாட்சி
25. ஆனந்தமாலை
26. அச்சோப்பதிகம்
எப்படிப் போவது
சென்னையில் இருந்து ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சிதம்பரம் சென்று அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 240 கி.மி. தொலைவில் சிதம்பரம் இருக்கிறது. காவிரியின் வடகரை சிவஸ்தலங்களை தரிசிக்க சிதம்பரத்தை ஒரு நுழைவாயில் என்று கூட சொல்லலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு நடராஜர் திருக்கோவில்
சிதம்பரம் அஞ்சல் கடலூர் மாவட்டம்
PIN – 608001
கடலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04144 - 231166, 094439 86996.
மாநிலம் : தமிழ் நாடு
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தல வரலாறு
'கோயில்' என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமானின் கோயிலைத்தான் குறிக்கம். ஊர்ப்பெயர் தில்லை; கோயிலின் பெயர் சிதம்பரம், இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.
தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது. (இம்மரங்கள் தற்போது சிதம்பரத்தில் இல்லை; ஆனால் இதற்கு அண்மையிலுள்ள பிச்சாவரத்திற்குப் பக்கத்தில் உப்பங்கழியின் கரைகளில் காணப்படுகின்றன.)
இக்கோயிலுள் 'திருமூலட்டானம்' என்னும் தனிக்கோயில் ஒன்றுள்ளது. அர்த்தசாம வழிபாடு முடிந்தபின் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக ஐதீகம்.
சிற்றம்பலம் உள்ளே செல்வதற்கு ஐந்துபடிகள் - பஞ்சாக்கரப்படிகள் உள்ளன; இப்படிகளின் இரு புறமும் யானை உருவங்கள் உள்ளன. பதினான்கு சாஸ்திரங்களில் ஒன்றை இப்படியில் வைத்தபோது, இப்படிகளிலுள்ள யானைகளில் ஒன்று தன் தும்பிக்கையால் அந்நூலையெடுத்து நடராசப்பெருமான் திருவடியில் வைத்தமையால் அந்நூல் 'திருக்களிற்றுப்டியார்' என்ற பெயர் பெற்றது.
திருமால், பிரம்மன், முதலியோர் இசைக்கருவிகளை ஒலிக்கக் கூத்தபிரான் என்றும் திருநடனம் புரிகிறான். அம்மை சிவாகம சுந்தரி இத்திரு நடனத்தை இடைவிடாது ரசிக்கிறாள்.
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம்
தரிசிக்க முக்தி தரும் தலம்
பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம்
ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம்
அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக்க் காட்சி தரும் தலம்
நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம்
சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலம்
இத்தகைய பெருமைகளைப் பெற்றிருக்கும் தலம் தான் சிதம்பரம். இந்த சிதம்பரம் கோவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கருங்கற்களால் கட்டப்பட்ட மதிற்சுவர்களுடனும், விண்ணை முட்டும் நான்கு இராஜ கோபுரங்களுடனும் நன்கு அமைந்திருக்கிறது. கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. கிழக்கு மேற்கு கோபுரங்களில் 108 நடன பாவங்களையும் அறிவிக்கும் சிறபங்கள் அழகிய முறையில் அமைக்கப்பட்டுள்ளன. சமயக்குரவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் ஒவ்வொரு வாயில் வழியாக தில்லை சிதம்பரம் கோவிலுக்குள் எழுந்தருளினர் என்று வரலாறு கூறுகிறது. மேற்குக் கோபுர வாயில் வழியாக திருநாவுக்கரசரும், தெற்குக் கோபுர வாயில் வழியாக திருஞானசம்பந்தரும், வடக்கு கோபுர வாயில் வழியாக சுந்தரரும், கிழக்குக் கோபுர வாயில் வழியாக மாணிக்கவாசகரும் வந்து தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.
தில்லை சிதம்பரத்தில் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருப்பெயர் மூலட்டானேஸ்வரர் (திருமூலநாதர்). அர்த்தசாம வழிபாடு முடிந்தவுடன் எல்லக் கோவில்களிலுமுள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதால் இந்த பெயர் அமைந்தது. திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவி திருப்பெயர் உமையம்மை.
நடராஜப் பெருமானுக்கு உள்ள திருச்சபைகள் ஐந்தில் சிதம்பரம் தலம் கனகசபையாகும். மற்றவை 1) திருவாலங்காடு - இரத்தினசபை, 2) மதுரை - வெள்ளிசபை, 3) திருநெல்வேலி - தாமிரசபை, 4) திருக்குற்றாலம் - சித்திரசபை.
இவையன்றி தில்லை சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமானுக்கு இக்கோவிலேயே ஐந்து சபைகள் இருக்கின்றன. அவை முறையே சிற்சபை (சிற்றம்பலம்), 2) கனகசபை, 3) இராசசபை, 4) தேவசபை, 5) நிருத்தசபை ஆகியவையாகும்.
1. சிற்சபை (சிற்றம்பலம்) நடராஜப் பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடமாகும். முதலாம் ஆதித்த சோழனுடைய மகன் முதல் பராந்தக சோழன் இச்சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்தான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் "லெய்டன்" நகரப் பெரிய செப்பேடுகளும் கூறுகின்றன.
2. கனகசபை (பொன்னம்பலம்) சிற்றம்பலத்திற்கு முன் அமைந்துள்ளது. இங்கு ஸ்படிக லிங்கத்திற்கு நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்த சோழன், கொங்கு நாட்டிலிருந்து கொண்டுவந்து உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று தெய்வச் சேக்கிழார் "இடங்கழி நாயனார்" வரலாற்றில் கூறுகின்றார். தில்லைக் கோயில் கல்வெட்டுப்பாடலொன்று சிறந்த சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான காளிங்கராயன் என்பவன் இப்பொன்னம்பலத்தைப் பொன்னால் வேய்ந்தான் என்று கூறுகின்றது. சிதம்பரம் நடராஜர் கோவிலின் விமானத்தின் கூரையில், 21 ஆயிரம் பொன் ஓடுகளை, 72 ஆயிரம் பொன் ஆணிகளால் அடித்துப் பொருத்தி இருக்கின்றனர். நாம் தினம், 21 ஆயிரம் தடவை மூச்சு விடுவதாகவும், நம்முடைய உடம்பில், 72 ஆயிரம் நரம்புகள் இருப்பதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.
3. இராசசபை என்பது ஆயிரங்கால் மண்டபம். ஆண்டுதோறும் ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் நாள் திருவிழாக்களில் நடராஜப் பெருமான் இரவில் இம்மண்டபத்தில் எழுந்தருளி மறுநாள் காலை பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.
4. தேவசபை பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இதன் விமானம் செம்பினால் செய்யப்பட்டுள்ளது.
5. நிருத்தசபை நடராஜப் பெருமானின் கொடிமரத்திற்குத் தென்புறம் மிகவும் அற்புதமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. ஊர்த்துவ பெருமானின் திருமேனி இங்கு உள்ளது.
சிதம்பர ரகசியம்: சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும். அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றுக்கு ஒரு மிகச் சிறந்த தலம் சிதம்பரம் என்ற தில்லையாகும்.
திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்றும்; சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அதன் பின்னரே தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி அமைக்கப்பட்டு வழிபாட்டில் சிறப்புடன் விளங்குவதாகவும் சிலர் கூறுவர். சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நிகழும் ஆருத்ரா தரிசனமும், ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தில் நடக்கும் விழாவும் இங்கு நடக்கும் இரு சிறப்பு வாய்ந்த பெரும் விழாக்களாகும்.
சைவ, வைணவ சமய ஒற்றுமைக்கு சிதம்பரம் கோவில் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் கோவிந்தராஜப் பெருமாள் கோவில் தில்லை சிதம்பரம் கோவிலின் உள்ளே அமைந்திருக்கிறது. நடராஜப் பெருமானின் சந்நிதிக்கு நேர் எதிரே நின்றுகொண்டு நடராஜரை தரிசனம் செய்தபிறகு இடதுபுறம் திரும்பி நின்றால் கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியைக் காணலாம். இரண்டு சந்நிதிகளும் அருகருகே அமைந்திருப்பது தில்லை கோவிலின் சிறப்பாகும்.
சிறப்புகள்
இறைவன் - விராட்புருஷனின் வடிவத்தில் திருவாரூர் மூலாதாரமாகவும், திருவானைக்கா 'உந்தி 'யாகவும், திருவண்ணாமலை 'மணிபூரக'மாகவும், திருக்காளத்தி 'கழுத்தாகவும்', காசி 'புருவமத்தி'யாகவும், சிதம்பரம் 'இருதயஸ்தான'மாகவும், சொல்லப்படும்.
பஞ்சபூத தலங்களுள் இது 'ஆகாயத் ' தலம்.
பஞ்சசபைகளுள் இது கனகசபை, பொற்சபை, சிற்சபை ஆகும்.
இக்கோயிலுள், இறைவனின் ஐந்து சபைகளாகிய 1. சிற்றம்பலம், 2. பொன்னம்பலம் (கனகசபை), 3. பேரம்பலம், 4. நிருத்தசபை, 5. இராசசபை என ஐந்து மன்றங்கள் உள்ளன.
"சிற்றம்பலம்" நடராசப்பெருமான் திருநடனம்புரிந்தருளும் இடம் - 'தப்ரசபா' எனப்படும் இவ்வம்பலத்திற்கு முதலாம் ஆதித்தசோழனின் மகன் முதற்பராந்தகசோழன் பொன்வேய்ந்தான் என்று திருவாலங்காட்டு செப்பேடுகளும் 'லெய்டன்' நகரப் பெரிய செப்பேடுகளும் கூறுகின்றன. இவனுக்கு முன் இரண்யவர்மன், பொன்வேய்ந்தான் என்று கோயிற்புராணம் தெரிவிக்கின்றது.
"பொன்னம்பலம் (கனகசபை)" நடராசப்பெருமான் அபிஷேகம் கொண்டருளும் இடம். இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்தசோழன், கொங்குநாட்டிலிருந்து கொண்டுவந்த உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று சேக்கிழாரும், தில்லைக்கோயில் கல்வெட்டுப்பாடலொன்று சிறந்த சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான காளிங்கராயன் என்பவன் பொன்வேய்ந்தான் என்றும் கூறுகின்றது.
"பேரம்பலம்" இது தேவசபை எனப்படும். மணவில் கூத்தனான காளிங்கராயன் விக்கிரமசோழன் காலதில் இச்சபையைச் செம்பினால் வேய்ந்தான் என்று தில்லைக்கோயில் பாடலால் அறிவதோடு, பின்பு இப்பேரம்பலத்திற்கு பொன் வேய்ந்தவன் மூன்றாங்குலோத்துங்கச் சோழன் ஆவான்.
"நிருத்த சபை" ஊர்த்தவ தாண்டவம் செய்தருளிய இடம் இதுவே.
"இராச சபை" இஃது ஆயிரக்கால் மண்டபமாகும். சோழ மன்னர் மரபில் முடிசூடப் பெறுபவர்களுக்கு இம்மண்டபத்தில் முடிசூட்டு விழா நடைபெற்று வந்தன.
வியாக்ரபாதர் (புலிக்கால்முனிவர்) மிகுதியான பற்றினால் பூசித்த ஊராதலின் பெரும்பற்றப்புலியூர் என்றும்; சித்+ அம்பரம் (அறிவு - வெட்டவெளி) = சிதம்பரம் ஞானகாசம் என்றும்; பூலோக கயிலாயம், புண்டரீகபுரம், சிதாகாசத்தலம் எனவும் இதற்குப் பலபெயர்களுண்டு.
வைணவத்திலும் 'திருச்சித்திரக்கூடம்' என்று புகழ்ந்தோதப்படும் திருப் பதி.
சந்தானாசாரியர்கள் முத்தி பெற்ற சிறப்புடையதுமாகிய பழம்பதி.
மாணிக்கவாசகர் புத்தரை வாதில் வென்று ஊமைப் பெண்ணைப் பேசுவித்த பெரும்பதி.
திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணங்களாகக் கண்டது இப்பதியில் தான்.
திருநீலகண்ட நாயனார் அவதரித்து வாழ்ந்தப்பதி.
அவதாரத் தலம் : தில்லை (சிதம்பரம்).
வழிபாடு : சங்கம வழிபாடு.
முத்தித் தலம் : திருப்புல்லீச்சரம் (தில்லை - சிதம்பரத்தில் உள்ள ஒரு தலம்).
குருபூசை நாள் : தை - விசாகம்.
உமாபதிசிவம் 'கொடிக்கவி' பாடிக் கொடியேற வைத்த அதிசய தலம்.
திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப்பட்ட தேரை ஓடச்செய்த மந்திரத்தலம்.
இராசராசன் வேண்டுதலின்பேரில் நம்பியாண்டார் நம்பிகளால் பொல்லாப்பிள்ளையாரின் துணைக்கொண்டு, திருமுறைகளை வெளிப்படுத்திய தெய்விகத் தலம்.
சேக்கிழார் பெருமானுக்குத் திருத்தொண்டர் புராணம் பாட அடியெடுத்துத்தந்து, அரங்கேற்றச் செய்யப்பட்ட அருமையான தலம்.
நடராச சந்நிதிக்கான கொடிமரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும்.
சிற்றம்பலம் - சிற்சபை நடராசப் பெருமானுக்குப் பக்கத்தில் 'சிதம்பர ரகசியம் ' உள்ளது.
அர்த்த ஜாம அழகர் :
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில், சங்கூதிப் பிள்ளையாருக்கு வலது புறத்தில், அர்த்தஜாம அழகர் கோயில் கொண்டுள்ளார். இரவு பத்து மணி அளவில் நடந்தேறும் அர்த்தஜாம பூஜையில் ஸ்ரீ நடராஜர், பள்ளியறை தீபாராதனைகளைத் தொடர்ந்து, நிறைவாக அர்த்தஜாம அழகர் எனும் இத்திருக்கோலத்திற்கு மஹா தீபாராதனையோடு அன்றைய பூஜைகள் நிறைவுறும். அமர்ந்த வடிவில், தூக்கிய இடது கையும், வலது கையில் கதை ஆயுதமும், பெயருக்கு ஏற்றார் போல் மிக மிக அழகிய வடிவினராக அருள்கிறா
ர்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...