40 வருடங்களுக்கு முந்தைய ரஜினி ஒரு நெருப்பாக இருந்தார், இன்றிருக்கும் பக்குவமும் நிதானமும் அன்று அவரிடம் இல்லை
சினிமா கடலில் விழுந்த அந்த படகு எப்படி கரையேற என தவித்து கொண்டிருந்த காலமது, வில்லனா,காமெடியனா, நாயகனா? எந்த கரம் தன்னை கரையேற்றும் என அது தவித்து கலங்கிய காலமது
காலதேவன் தன்னை மின்னவைப்பான் என்றோ, மாபெரும் சக்தியாக தான் உருவெடுப்போம் என்றோ அவர் கனவிலும் நினையா காலமது
"ராஜ்ஜியம் இல்லை ஆள, ராணியும் இல்லை வாழ, அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகின்றேன் நாளும்..." என அவர் உண்மையில் புலம்பியது அந்த காலத்தில்தான்
அன்று கமலஹாசனுக்கு பெரும் பெண்கள் பட்டாளம் இருந்தது, ஆண் ஜோதிலட்சுமி எனும் அளவு அவர் மொய்க்கபட்டார்
ரஜினி சிடுமூஞ்சியும் பெண்கள் நெருங்க அச்சபட்டவராகவும் இருந்த காலமது, குடி புகை என எல்லா வழக்கமும் இருந்தது, காதலின் தோல்வியும் இருந்தது
நீங்கள் குடிப்பீர்களா, பெண் தொடர்பு உண்டா என எங்காவது கேள்வி எழும்பினால் "உன் காசில் குடிக்கல , குடும்பத்து பெண் மேல என் விரல் நுனி கூட பட்டதில்ல போடா" எனும் அளவு அவரின் கடுமையான பதில் இருந்த நேரமது
யாரையும் எளிதில் பகைப்பவரும், விளைவுகளை பற்றி கவலைபடாதவருமாய் அவர்போக்கில் சர்ச்சையில் சிக்கிய காலமது
ஏதோ ஒரு பத்திரிகையாளர் கூட்டமது, அப்பொழுது கல்லூரி மாணவியாயிருந்த லதாவும் ஒரு பத்திரிகையாளராக இருந்தார், ஏதோ பத்திரிகையாளரிடம் ரஜினி வம்பிழுத்து சிக்கிய சர்ச்சையில் அவரும் கோபத்தில் இருந்த நேரம்
"உங்கள் திருமணம் எப்பொழுது" என அந்த மாணவி லதா கேட்க சட்டென கொதித்த ரஜினி "ஏன் நீ கட்டிக்க போறியா" என திருப்பி கேட்க விஷயம் வெடித்தது
அதன் பின் அது திருமணத்தில் முடிந்தது
திருமணம் பற்றி அறிவிக்க பத்திரிகையாளரை அழைத்தார் ரஜினி ஆனால் ஒரு நாற்காலி கூட போடபடவில்லை, ரஜினி சொன்னது சில வார்த்தைகள் "எனக்கும் லதாவுக்கும் திருப்பதியில் கல்யாணம், எவனாவது பத்திரிகையாளர்னு அங்கே வந்தா தொலைச்சிடுவேன்..."
அதை சொல்லத்தான் அவர்களை அழைத்தார், அக்கால ரஜினிக்கு அந்த எம்.ஆர் ராதா சாயலும் இருந்தது
சாதாரண குடும்பத்து லதாவுக்கு, அஜித் மனைவி ஷாலினி போல அல்லது சோனியா காந்தி போல பேரதிருஷ்டம் இருந்தது
லதா வந்தபின் தன் வாழ்வின் வெற்றிபடிகளில் மிக வேகமாக ஏறினார் ரஜினி, லதாவினை திருமணம் செய்தபின் சூப்பர்ஸ்டாரானார்
அந்த இடம் இன்றுவரை நீடிகின்றது
வெகு சில பெண்களுக்கே வாய்க்கும் அந்த அதிஷ்டம் லதாவுக்கும் வாய்த்தது.
நிச்சயம் தமிழ் சினிமாவின் ஆதர்சன தம்பதிகள் வரிசையில் அவர்களுக்கு இடம் உண்டு
ரஜினி எனும் காட்டாற்று வெள்ளம் லதா வந்தபின்பே ஒடுங்கி நடந்தது, அந்த காட்டுகுதிரையினை அவர்தான் கட்டுபடுத்தி அதன் பலம் புரிய வைத்தார்
திருமணத்துக்கு முந்தைய ரஜினியின் குணாதிசயங்களையும் அதற்கு பின்னரான ரஜினியின் குணங்களையும் கண்டால் அது நன்கு புரியும், அதன் பின்பே மாபெரும் ஆன்மீகவாதியானார் ரஜினி
அடிக்கடி தம்பதிகள் சர்ச்சையில் மாட்டும் திரையுலகில் 40 ஆண்டுகளாக ரஜினி தம்பதி சிறு சலசலப்பும் வதந்தியுமின்றி ஒன்றாகவே சுற்றிவருவது ரஜினியினை எந்த அளவு அவர் புரிந்து வைத்திருக்கின்றார் என்பதை காட்டுகின்றது
ரஜினி எங்கு சென்றாலும் லதாவுடனே வருவார், அது எந்த மேடையானாலும் சரி
அங்கெல்லாம் புன்னகை பூக்க லதா அமர்ந்திருப்பாரே தவிர, தேவையற்ற பேச்சோ சர்ச்சையோ அகங்காரமோ எதுவும் இருப்பதாக யாரும் கண்டிருக்க முடியாது
ரஜினி நோயுற்ற நேரம் திருப்பதியில் மொட்டை போட்ட அந்த லதாவினை ரஜினி அன்றே தேர்ந்தெடுத்தது ரஜினி செய்த முன் ஜென்ம புண்ணியம்
ரஜினி ஒருவகையில் அதிர்ஷ்டசாலி, அவருக்கு எல்லாமே இப்பிறவியில் நன்றாய் அமைந்தது அதில் மிகபெரும் வரம் மனைவி
ஒருவனுக்கு கடவுள் அருளும் முதல் வரம் நல்மனைவி என்பது யூதமொழி, பூர்வ ஜென்ம புண்ணியமும் கடவுளின் அருளும் நல்மனைவி அமைய அவசியம்
வியட்நாம் வீடு படத்தில் வரும் உன் கண்ணில் நீர்வழிந்தால் எனும் பாடல் வரிகள் ரஜினிக்கும் பொருந்தும், யாருக்கும் புரியா ரஜினியின் மனதை முழுக்க புரிந்த ஒரே மவுன சாட்சி அவர்தான்.
1980களின் ரஜினி ஒருமாதிரியானவர், அவரை திருமணம் செய்வது என்பது மகா சவாலான விஷயமான ஒன்றாகவே இருந்தது. லதாவின் உள்ளுணர்வு மிக சரியான முடிவினை அவருக்கு சொல்லியிருப்பது அவரின் நல்விதி.
அந்த புக்கிலேஸ் குதிரையினை அடக்கி சவாரி செய்த அலெக்ஸாண்டர் போல ரஜினி எனும் ஒரு வித்தியாசமான காட்டுகுதிரையினை அடக்கிய சாகசக்காரர் அவர்.
ஒருமாதிரி சென்சிட்டிவ் மனிதரான ரஜினி லதாவினை தவிர வேறு பெண்ணை மணந்திருந்தால் இந்த உயரம் எட்டியிருப்பாரா என்பதும் எட்டினாலும் சதா காலமும் நிலைத்திருப்பாரா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்
திரையுலகில் நல்ல கணவன் மனைவியாக விளங்கும் தம்பதி இவர்கள், ஒரு வகையில் எடுத்துகாட்டானவர்கள்
அதை ரஜினியின் கொடிய எதிரி கூட மறுக்க முடியாது.
இன்று ரஜினியின் 39ம் ஆண்டு திருமணநாள், திருப்பதி பெருமாளும் ராகவேந்திரரும் இன்னும் இமயமலைவாழ் ரிஷிகளும் அரூபிகளும் தவமுனிகளும் அவர்களை ஆசீர்வதிக்கட்டும்.
No comments:
Post a Comment