கடும் நிதி நெருக்கடி இருப்பதால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கால தாமதம் ஆகும் என, தி.மு.க., அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாயில் நினைவிடம் அமைக்க போவதாக, தி.மு.க., அரசு அறிவித்துள்ளது.
இன்றைய சூழலில் கொரோனா தொற்று காரணமாக, சுகாதார துறைக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. மக்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் போது, நினைவிடம் அமைப்பது இப்போது தேவையா?பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், கொரோனா மற்றும் நிதி நெருக்கடி குறைந்த பின், தன் தந்தை கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கலாமே. இப்போது என்ன அவசரம்?
முந்தைய அரசு செய்த ஊதாரி செலவுகளை கண்டித்த தி.மு.க.,வினர், இப்போது அதையே செய்யலாமா? கருணாநிதிக்கு நினைவிடம் உடனே அமைத்தாக வேண்டும் என்றால், தி.மு.க.,விடம் குவிந்துள்ள பணத்தில் இருந்து அதை கட்டி, கட்சியின் கவுரவத்தை காக்கலாமே! தேர்தல் காலத்தில் அரசியல் ஆலோசனை சொல்வதற்காக மட்டும், பிரசாந்த் கிஷோருக்கு 360 கோடி ரூபாய் கொடுக்க முடிந்த தி.மு.க.,வால், கருணாநிதியின் நினைவிடத்துக்கு 39 கோடி ரூபாய் கொடுக்க முடியாதா?
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னம் போல் அமைக்கப்பட்ட நுழைவு வாயிலை அகற்ற வேண்டும் என, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.ஆனால் இன்று அதே தி.மு.க., கருணாநிதி நினைவிடத்தில் உதயசூரியன் உதிப்பது போல கட்டுமானம் செய்கிறது.இதிலிருந்து தி.மு.க., இன்னும் திருந்தவில்லை என்பது நன்கு புரிகிறது!
No comments:
Post a Comment