அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து ஒரு வழியாக பா.ம.க., விலகி விட்டது. ஆனால் அதற்கு அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சொல்லும் காரணங்கள் தான் நகைக்கத்தக்கவை.'அ.தி.மு.க., தலைமை சரியில்லை; கூட்டணியால் பா.ம.க.,வுக்கு எந்த லாபமும் இல்லை; கூட்டணி தர்மத்தை காக்க அ.தி.மு.க., தவறி விட்டது...' இப்படி அடுக்கடுக்கான காரணங்களை செப்பியிருக்கிறார் ராமதாஸ்.இதிலிருந்தே, ராமதாசுக்கு மனசாட்சியே இல்லை என்பது தெரிகிறது.
பா.ம.க.,வின் நிர்பந்தம் காரணமாக, வன்னியருக்கு 12.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தது, அ.தி.மு.க., அரசு தான்.காரியம் முடிந்ததும், அ.தி.மு.க., தலைமைக்கு, 'பெப்பே' காட்டியுள்ளார், ராமதாஸ். அ.தி.மு.க., தலைமைக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.கூட்டணியில் சேர ஒரு காரணமும், விலக வேறொரு காரணமும், டாக்டர் ராமதாசின், 'பாக்கெட்'டில் எப்போதும் தயாராக இருக்கும்.
சட்டசபையில் தி.மு.க.,வை பா.ம.க., 'ஆஹா ஓஹோ...' என புகழ்ந்து தள்ளுவதில் இருந்தே மருத்துவர் ராமதாசின் கபட நாடகம் அம்பலமாகி விட்டது.உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதால், ஓரிரு இடங்களில் மட்டுமே பா.ம.க., வெற்றி பெற முடியும். ராமதாசின் முடிவு, யானை தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட கதையாக உள்ளது.
'அடுத்த சட்டசபை தேர்தலில் 150 இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும்' என, அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதில் இருந்தே தெரிகிறது, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து அக்கட்சியும் 'கழன்று' கொள்ள போகிறது என்பது.இந்த, 'தில்லாலங்கடி' வேலை எல்லாம் தெரிந்து தான், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்டு, ஆட்சியை பிடித்தார்.அந்த தைரியம் எல்லாம் இப்போது இருக்கும் அ.தி.மு.க., தலைமைக்கு இல்லை.
No comments:
Post a Comment