முல்லை பெரியாறு அணையில் நம் உரிமைகளை கேரள அரசு பறிப்பதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், மதுரையில் அளித்த பேட்டி:
பெரியாறு அணையில் கேரள பகுதிக்கு தற்போது திறந்து விடப்பட்டுள்ள நீர், வீணாகக் கடலில் கலக்கிறது. விவசாயத்திற்கு பயன்பட போவதில்லை.
மவுனம் சாதிக்கிறார்
ஆனால், ஆண்டிப்பட்டி பகுதியில் தற்போதும் சில கிராமங்களில் குடிநீர் பிரச்னை உள்ளது. மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள், பெரியாறு அணை நீரையே நம்பியுள்ளனர்.
பெரியாறு அணை நீர் திறப்பு குறித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து வருகிறார். தற்போது அணை திறந்த போது, தமிழக அதிகாரிகள் இருந்ததாக கூறியுள்ளார். இதன் மூலம் கேரள அரசுடன் தி.மு.க., அரசும் கூட்டு சேர்ந்திருப்பதை ஒப்புக் கொள்கிறாரா?
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், பெரியாறு அணையில் 136 அடி இருக்கும் போதே கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் நீர் திறந்து விட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் மவுனம் சாதிக்கிறார். நீர்ப்பாசன அமைச்சர் துரைமுருகன் சப்பைகட்டு கட்டுகிறார்.பெரியாறு அணையில் தமிழக உரிமை பறிபோவதை கண்டித்து, தேனி கலெக்டர் அலுவலகம் முன், நவ., 8ல் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
*
அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில தலைவர் பாண்டியன்:
நம் நிர்வாக கட்டுப்பாட்டில் பெரியாறு அணை இருக்கும் போது, தமிழக அமைச்சர்கள் அணைப் பகுதிக்கு செல்லாத நிலையில், கேரள அமைச்சர்கள் எந்த அடிப்படையில் சென்றனர். அரசியலமைப்பு சட்டத்தையே கேரள அரசு மீறுகிறது. பெரியாறு அணைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசின் தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைக்க வேண்டும். இதை வலியுறுத்தி நவ., 14ல் ஐந்து மாவட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்.
* காங்., முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி:
இப்போதே, கேரளாவில் அணைக்கு சொந்தம் கொண்டாடுவது போல் செயல்படுகின்றனர். இப்படியே விட்டால் நாளை அணையை இடிக்கக் கூட தயங்க மாட்டார்கள். எனவே, கேரள அரசுக்கு புத்தி புகட்ட, இங்கிருந்து அம்மாநிலத்திற்கு செல்லும் காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் நிறுத்த, ஐந்து மாவட்ட விவசாயிகள் முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment