உச்ச நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவுக்கு முரணாக, பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற, அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை தெரிவிக்கும் படி, தலைமை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த, வழக்கறிஞர் எம்.லோகநாதன் என்பவர் தாக்கல் செய்த மனு: கோவையில், அவினாசி சாலை - டாக்டர் பாலசுந்தரம் சாலை சந்திப்பில், உச்ச நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் உத்தரவுகளில் கூறப்பட்ட நடைமுறைகளை பின்பற்றாமல், மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவின் சிலைகளை, சட்டவிரோதமாக நிறுவி உள்ளனர்.
மறைந்த முதல்வர் அண்ணாதுரை சிலை அமைக்கப்பட்ட பீடத்தின் அளவை விரிவுபடுத்தி, அதில், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா சிலைகளை நிறுவி உள்ளனர். சிலைகள் அமைக்க அரசிடம் இருந்து உத்தரவு எதுவும் பெறப்படவில்லை; நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை.பொது சாலை, நடைபாதை, பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள பகுதிகளில் சிலைகள் நிறுவ, கட்டுமானம் மேற்கொள்ள, மாநில அரசு அனுமதி அளிக்கக் கூடாது என, 2013 ஜனவரியில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இந்த உத்தரவை பொருட்படுத்தவில்லை; அதை மீறியுள்ளனர்.மதுரை, கே.கே.நகரில், மாவட்ட நீதிமன்ற ரவுண்டானாவில், ஜெயலலிதாவின் சிலை, 2019ல் திறக்கப்பட்டது.தஞ்சாவூர் ரயில் நிலையம் முன், ஏற்கனவே நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர்., சிலையுடன், 2018ல் ஜெயலலிதா சிலை நிறுவப்பட்டது. மன்னார்குடியில், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா சிலைகள், 2020 ஜனவரியில் திறக்கப்பட்டன.
அரசின் அனுமதி பெறாமல், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, இந்த சிலைகள் நிறுவப்பட்டு உள்ளன. உச்ச நீதிமன்றம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவுகளை மீறி, சட்டவிரோதமாக நிறுவப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டும். அரசின் அனுமதியின்றி, சிலைகள் நிறுவ அனுமதிப்பதற்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜயன், அரசு தரப்பில், அரசு பிளீடர் முத்துக்குமார் ஆஜராகினர்.விசாரணையின் போது, 'அனைத்து தலைவர்களும் மரியாதைக்கு உரியவர்கள்; யாரையும், அவமரியாதை செய்யவில்லை. ஆனால், அரசு நிலத்தை, சிலைகள் நிறுவ பயன்படுத்தக் கூடாது. 'அரசின் அனுமதியின்றி சிலைகள் அமைப்பதை, தடுக்க வேண்டும்' என, முதல் பெஞ்ச் தெரிவித்தது.
தொடர்ந்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:பொது இடங்கள், அரசு நிலங்களில், அரசியல் தலைவர்களின் சிலைகளை நிறுவுவது தொடர்பான வழக்கு இது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.இவ்வழக்கில், தமிழக அரசு, கோவை மாநகராட்சி பதில் அளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசின் உத்தரவுக்கு முரணாக, பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலர் பதில் அளிக்க வேண்டும்.
நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் கலெக்டர் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் எப்படி தெரிவிக்கப்பட்டது என்பதையும், பதில் மனுவில், தலைமை செயலர் குறிப்பிட வேண்டும்.நான்கு வாரங்களில், பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை, டிச.,15 க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment