அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.
உலகம் முழுதும் அதிர மதுரை மண்ணின் புகழ் ஒங்க பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் கள்ளழகர் எழுந்தருளும் மாபெரும் பெருவிழா
தன் தங்கை ஸ்ரீமீனாட்சிக்கும் ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் கல்யாணம் நடக்கும் போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீஅழகர், கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபவத்தைப் பார்க்க அழகர் மலையில் இருந்து இறங்கி சகல கோலாகலகங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார். வரும் வழி எங்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால் தங்கையின் திருமணத்தை காணமுடியாமல் போய்விடுகிறது. 420 மண்டகப்படியில் நின்று காட்சி தருகிறாராம் அந்த சோகத்துடன் வைகையில் எழுந்தருகிறார் என்கிறது புராண கதை.
அது ஓரு புறம் இருக்க, சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் கூறுகின்றன.
மீனாக்ஷி சித்திரை திருவிழா- கள்ளழகர் சித்திரை திருவிழா என்று சைவ - வைணவ பிரிவாக இருந்த சித்திரை திருவிழாவை திருமலை நாயக்கர் தான் ஒன்றாக சேர்த்தார் என்று வரலாறு கூறுகிறது.
அழகரின் ஆடையில் என்ன விஷேசம்
அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா, என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தினம் அணிவிக்கப்படும்.
பச்சைப் பட்டு
அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும் என்கின்றனர்.
வெண்பட்டு
வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் 'ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். எனக்கு தெரிந்து கடந்த சில ஆண்டுகளாகவே பச்சைப் பட்டுதான் உடுத்திதான் ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்.
ஆண்டாள் மாலை
தல்லாகுளம் பெருமாள் கோயிலிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் வைகையை நோக்கி புறப்படும் முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சூடிக் கொடுத்த நாச்சியராகிய ஸ்ரீ ஆண்டாளின் மாலையை சாற்றிக் கொள்கிறார். ஸ்ரீஅழகர் ஆற்றுக்குச் செல்லும் பொழுது முதலில் வெட்டி வேர் சப்பரத்திலும், பிறகு மைசூர் மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளும் காட்சியை காண கண் கோடி வேண்டும்.
தங்கக்குதிரை வாகனத்தில் அழகர்
தல்லாகுளத்தை விட்டு தங்கக்குதிரை கள்ளழகர் கிளம்பியதுமே வைகை ஆற்றில் காத்திருக்கும் பக்தர்களின் ஆரவாரம் ஆரம்பமாகிவிடும். வைகையில் ஓடும் நீரில் நின்று கொண்டு தன்னை தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கும் பக்தர்களைக் காண ஆடி, அசைந்து வருவதைக் காண்பதே தனி அழகுதான்.
No comments:
Post a Comment