வட அமெரிக்காவில் உள்ள சில சமூகங்கள் பாவத்திற்கு பரிகாரமாகவும், பேரழிவுகளைத் தடுக்கவும் உண்ணாவிரதம் இருந்தன. பெருவின் இன்காக்கள் மற்றும் மெக்சிகோவின் பூர்வீக அமெரிக்கர்கள் தங்கள் கடவுள்களை திருப்திபடுத்த விரதங்களை அனுசரித்தனர்.
அசிரியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் போன்ற முன்னாள் நாட்டினர் உண்ணாவிரதத்தை தவம் என்று கருதினர். யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் பாவநிவாரண நாள் என்று உண்ணாவிரதத்தை சுத்திகரிப்பு மற்றும் தவம் செய்வதாகக் கடைப்பிடிக்கின்றனர். இந்த நாளில் உணவு மற்றும் பானங்கள் அனுமதிக்கப்படாது.
ஞானஸ்நானம் மற்றும் புனித ஒற்றுமைக்கான சடங்குகளைப் பெறுவதற்கும் பாதிரியார்களின் நியமனத்திற்காகவும், கிறிஸ்துவ தேவாலயம் உண்ணாவிரதத்தை தன்னார்வத் தயாரிப்பாகச் செய்தது. பின்னர் அவை கட்டாயமாக்கப்பட்டன மற்றும் பிற நாட்கள் பின்னர் சேர்க்கப்பட்டன.நோன்பு, 6ம் நுாற்றாண்டில் 40 நாட்களுக்கு விரிவாக்கப்பட்டது. அங்கு, ஒவ்வொரு நாளும் ஒரு உணவு அனுமதிக்கப்பட்டது.
ஹிந்து மதத்தினரும் ஏராளமான விரதங்களையும், நோன்புகளையும் அனுஷ்டிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுதும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் நோன்பு இருக்கின்றனர்.நோன்பு இருக்கும் போது நம் உடலுக்கு என்னவெல்லாம் நிகழ்கின்றன என்பதை உடல் கூறுமருத்துவர்கள் கூறியதாவது:
எடுத்தவுடனே நம் உடலானது நோன்பு நிலைக்கு சென்று விடாது. கடைசியாக நாம் உண்ட உணவின் சத்துகளானது, உடலில் தங்கி இருக்கும். இது, முதலில் உடல் இயக்கத்திற்கு உதவி புரியும். பின், நம் கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட குளுக்கோசில் உடல் இயங்கும்.இந்த குளுக்கோஸ் தீர்ந்த பின் கொழுப்பானது, நம் உடல் செயல் இயக்கத்திற்கு பயன்படும். கொழுப்பில் உடல் இயங்கும் போது, உடல் எடை குறைய துவங்கும்; கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
ஆனால், அதே நேரம் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது, உடலை பலவீனப்படுத்தும். இந்த காலகட்டத்தில் நீங்கள் தலைவலி, தலைச் சுற்று மற்றும் குமட்டல் ஆகியவற்றை உணரலாம். பசி அளவு மிக அதிகமாக இருக்கும் போது, நிச்சயம் இவற்றை உணரலாம். நோன்பின் மூன்றாவது நாளிலிருந்து, உடல் வறட்சி குறித்து கவனம் கொள்ளல் வேண்டும். தொடர்ந்து நாம் நோன்பு இருக்கும் போது, கொழுப்பு உடைந்து கரைந்து ரத்தம் சர்க்கரையாக மாற்றம் அடையும்.
இரண்டு நோன்புகளுக்கிடையே ஆகாரம் உண்ணும் காலகட்டத்தில், நீராகாரம் நிறைய எடுத்துக் கொள்ளல் வேண்டும். இல்லை எனில், தொடர்ந்து வியர்ப்பது உடல் வறட்சிக்கு வழிவகுக்கும். நோன்பு காலக்கட்டம் இடையே நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில், சரியான அளவில் கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு இருத்தல் வேண்டும்.
நோன்பு துவங்கி எட்டாம் நாளிலிருந்து, உங்கள் உடல் நோன்பிற்கு ஏற்றாற் போல் உடல் முழுமையாக தகவமைத்துக் கொள்ளும். நாம் சாதாரண நாட்களில் அதிகளவிலான கலோரிகள் எடுத்துக் கொள்வோம். இது, நம் உடலானது பிற பணிகள் செய்வதிலிருந்து தடுக்கும். குறிப்பாக, உடல் தம்மை தாமே சரி செய்துக் கொள்வது இதனால் தடைபடும்.
ஆனால், நோன்பு காலக்கட்டத்தில் குறைவாக கலோரிகள் எடுத்துக் கொள்வதால், இந்த குறையானது சரியாகும். நோன்பானது நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், நோய் தொற்றுகளுக்கு எதிராக போராடவும் பேருதவி புரிகிறது. நோன்பின் இறுதி, 15 நாட்கள் நோன்பு செயல்முறைக்கு உங்கள் உடல் முற்றும் முழுதுமாக தகவமைத்துக் கொள்ளும். உங்கள் பெருங்குடல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் தோல் ஆகியவை இந்த காலக்கட்டத்தில், உடல் நச்சுகளை அகற்ற துவங்கும்.
இந்த தருணத்தில், உங்களுடைய உடல் உறுப்புகள் உச்சபட்சமாக செயல்படும்; அதன் பழைய நிலைக்கு திரும்பும். உங்களது நிறைவாற்றல் கவனிக்கும் திறன் மேம்படும். நம் உடலானது புரதத்தை ஆற்றலாக மாற்றக் கூடாது. முற்றும் முழுதுமாக பட்டினி கிடக்கும் போதுதான், இது நிகழும். அதாவது, பல வாரங்கள் சாப்பிடாமல் பசியுடன் இருக்கும் போது இது நிகழலாம். ஆற்றலுக்காக தசைகளை பயன்படுத்திக் கொள்ள நேரலாம்.
ஆனால், ரமலான் மாதத்தில் சூரியன் உதிக்கும் மற்றும் அஸ்தமிக்கும் காலக்கட்டத்திற்கு இடையே தான், நாம் நோன்பு இருக்கிறோம். பின், ஆரோக்கியமான உணவு மற்றும் நீர் ஆகாரங்களை உண்கிறோம்; இது, நம் தசைகளை காக்கும். நோன்பு இருத்தல் உடல்நலத்திற்கு நல்லது. நாம் என்ன சாப்பிடுகிறோம், எப்போது சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க, இது உதவி செய்கிறது. ஒரு மாத காலம் நோன்பிற்கு சிறந்தது தான் என்றாலும், தொடர்ந்து நோன்பு இருத்தல் அறிவுறுத்தத்தக்கது இல்லை என்கிறார்.
தொடர்ந்து நோன்பு இருக்கும் போது, கொழுப்பு ஆற்றலாக மாறுவது நின்று, நம் உடலானது தசைகளை ஆற்றலாக மாற்றும் நிலைக்கு செல்லும்; இது, பசி பட்டினி நிலை. இது, உடல்நலத்திற்கு நல்லது அல்ல என்கிறார் மருத்துவர். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் நோன்பு திறக்காமல் தொடர் நோன்பு வைத்தனர். மக்களும் அவ்வாறு தொடர் நோன்பு வைத்தனர்.
இது, மக்களுக்குச் சிரமமாக இருந்தது. அப்போது நபி (ஸல்) மக்கள் தொடர் நோன்பு நோற்கத்தடை விதித்தார். நபித்தோழர்கள், 'நீங்கள் (மட்டும்) தொடர் நோன்பு நோற்கிறீர்களே!' என்று கேட்டனர்.
நபி (ஸல்) அவர்கள், 'நான் உங்களைப் போன்றவன் அல்லன் (இறைவன் தரப்பிலிருந்து ) உண்ணவும், பருகவும் எனக்கு வழங்கப்படுகிறது!' என்று பதிலளித்தார். (ஸஹீஹ் புகாரி 1922)'காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்கவே இல்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்.(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)நுால்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)கடந்த சில ஆண்டுகளாக வடதுருவத்தில் கோடை காலத்தில் தான் ரமலான் நோன்பு வருகிறது. அதாவது, இந்த காலக்கட்டத்தில் வெம்மையான வானிலையும், பகல்பொழுது நீளமானதாகவும் இருக்கும்.அப்படியானால், நார்வே போன்ற சில நாடுகளில் ஒரு நாளுக்கு, 20 மணி நேரத்திற்கு மேல் நோன்பு இருத்தல் வேண்டி இருக்கும். பின்லாந்தில் கோடைக்காலத்தில் நள்ளிரவிலும், சூரியன் வானில் தென்படும்.
பின்லாந்தின் தலைநகர் ஹெல்சின்கிக்கு, 800 மைல் வடக்கிலிருக்கும் ரொவானியெமி நகரம் கடுமையான இயற்கைச் சூழல் கொண்ட இடம் என்று தான் சொல்ல வேண்டும். ஆர்க்டிக் வடதுருவ வட்டத்தை ஒட்டியிருக்கும் இந்த இடத்தில், குளிர் மிகவும் கடுமையாக இருக்கும். தவிர, இங்கு குளிர்காலத்தில் சூரியன் சொற்ப நேரத்துக்குத் தான் வெளியில் தலைகாட்டும். அதுவே, வெயில் காலம் என்றால் ஒரு நாளில், ௨௦ மணி நேரத்துக்கும் கூடுதலாக சூரியன் வானில் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
முஸ்லிம்கள் நோன்பிருக்க வேண்டிய ரமலான் மாதத்தில், பகல் பொழுது மிகவும் நீளமாக இருப்பதென்பது, அந்த ஊரில் வாழக்கூடிய முஸ்லிம்களுக்கு ஒரு பெரிய பிரச்னை. இங்கு இரவு, 12:00 நெருக்கத்துக்கு தான் அஸ்தமித்த சூரியன் பிறகு ஒரு சில மணி நேரங்களில் மீண்டும் உதயமாகி விட்டிருந்தது. இங்கு, நோன்புப் பிடிக்கும் முஸ்லிம்கள், இந்த குறுகிய இரவுப் பொழுதில் மட்டுமே நீரருந்தவோ, உணவு உண்ணவோ முடியும்.
ரொவானியெமி நகரில் வாழும் வங்கதேசப் பிரஜையான மியா மசூத் ஒரு நாளில், 20 மணி நேரம் நோன்பு வைப்பதால், மிகவும் சோர்ந்து போவதை ஒப்புக் கொள்கிறார். ஆனால் பசியையும், சோர்வையும் பொறுத்துக் கொண்டு நோன்பு வைப்பதிலும், ஒரு திருப்தி இருப்பதாக இவர் கூறுகிறார்.வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு வைக்காதவர்களின் நாள் எப்படிச் செல்கிறது?
வளைகுடா நாடுகளில் நோன்பு காலத்தில், பொது இடங்களில் உணவு உண்பதற்கும், பானங்கள் அருந்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாராவது அந்தக் கட்டுபாட்டை மீறினால், அவர் உடனே நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.ஏனெனில், இஸ்லாமிய நாடுகளில் பெரும்பாலான மக்கள் இஸ்லாமியர்களாக இருப்பதால், தவிர்க்க முடியாத காரணம் இல்லாத பட்சத்தில், ரமலான் நோன்புகள் அனைத்தையும் தவறாமல் அனைவரும் வைப்பர். அங்கு கட்டுப்பாடுகளும் அதிகம்.
இது போன்ற நிலைமையில், அங்கு வசிக்கும் மற்ற மதத்தினர் வேலைக்காக அங்கு சென்றவர்களாகவே இருப்பர். துபாயில் சிஸ்டம் அனலிஸ்டாக பணிபுரியும் துஷ்யந்த் சிங், முஸ்லிம் அல்லாதவர்களின் நிலை குறித்த தன் எண்ணங்களை பகிர்ந்துக் கொள்கிறார். இந்தியாவில் புலந்த்ஷகரைச் சேர்ந்த துஷ்யந்த் மூன்று ஆண்டுகளாக துபாயில் பணிபுரிகிறார். 'அதிகாலையில் நோன்பு துவங்கிய பின் நாங்கள் காபி, டீ அல்லது உணவுப் பொருட்கள் எதையும் எடுத்துக் கொண்டு பொது இடத்திற்கு வரமுடியாது.
வெளியிடங்களில் உணவுப் பொருட்கள் விற்பதற்கும், உண்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காலையில் நோன்பு துவங்கிய பின்பும், மாலையில் நோன்பு துறப்பதற்கு முன்பும், எங்கள் அறைக்குள் தான் சாப்பிட வேண்டும். பொது இடங்களில் சாபபிடுவது மட்டுமல்ல... சிகரெட் புகைப்பதும், குளிர்பானம் அருந்துவதும் கூட தடை செய்யப்பட்டது. உணவகங்களுக்கு உள்ளே சென்றும் சாப்பிட முடியாது; ஆனால், அவை மூடியிருக்காது. அங்கிருந்து உணவுகளை வாங்கி வீட்டில் வைத்து சாப்பிடலாம்.
சில உணவகங்களில் உள்ளே அமர்ந்து சாப்பிடலாம்; ஆனால், வெளியில் சாப்பாட்டுப் பொட்டலங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். மூடிய வாகனங்களுக்குள் அமர்ந்து சாப்பிடலாம். இந்தக் கட்டுப்பாடுகளால் எங்களுக்கு பிரச்னைகள் ஏதும் இல்லை. சொல்லப்போனால் நோன்பு காலம் எங்களுக்கு மிகவும் பிடித்தமானது. எங்களது வேலை நேரமும் குறைந்து விடும். நோன்பு வைத்திருப்பவர்களின் முன் சாப்பிட, நாங்களும் விரும்புவதில்லை. தவறுதலாக சாப்பிட்ட கையோடு அவர்கள் முன் சென்று விட்டால், அது எங்களுக்கு உறுத்தலாக இருக்கும். இவ்வாறு தெரிவிக்கிறார் துஷ்யந்த்.
'ஆதமுடைய வழித்தோன்றல்களுக்கு ஒவ்வொரு நற்செயலுக்கும் அது போன்ற 10 முதல் 700 பிரதி பலன்கள் வரை அதிகரிக்கப்படுகிறது-. நோன்பைத் தவிர, ஏனெனில் நோன்பு எனக்குரியது.'எனவே, அதற்குரிய பலனை நானே அளிப்பேன். காரணம், எனக்காகவே நோன்பாளி தன் இச்சைகளையும், உணவையும் விட்டொதுங்குகிறான்' என்று அல்லாஹ் கூறுகிறான்.
'நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சி, அவர் நோன்பு திறக்கும்போது ஒரு மகிழ்ச்சி (நிலை)யும், தன் இறைவனைச் சந்திக்கும் போது ஒரு மகிழ்ச்சி (நிலை)யும் உண்டு!''நோன்பாளியின் வாயில் ஏற்படும் வாடை இறைவனிடம் கஸ்துாரியின் மணத்தை விட மிகவும் மேலானதாகும்' என்றும் ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்.நோன்பின் காலத்தில் தன்னடக்கம், வெகுளாமை, நாவடக்கம், உணவுக்கட்டுப்பாடு, சமூக நலம் பேணுதல் போன்ற நல்ல விளைவுகள் ஏற்படுகின்றன. இவற்றால் நோன்பு நோற்கும் ஒவ்வொரு ஆன்மாவும் துாய்மை அடைகிறது. ரமலான் நோன்பின் பலன்கள் குறித்து திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம், 183ம் வசனத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
'இறை நம்பிக்கை கொண்டோரே... உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் துாய்மையுடையோர் ஆகலாம்' என்பதே அந்த வசனம்.இங்கு துாய்மை என்று குறிப்பிடப்படுவது உடல் துாய்மை மட்டுமல்ல... ஆன்மாவும் துாய்மையடைகிறது. மொத்தத்தில் ரமலான் நோன்புகள் மனிதகுலத்திற்கு இறைவன் கொடுத்த வரமாகும்.
No comments:
Post a Comment