அப்பாவிகளின் நிலங்களை மோசடியாக பத்திரப்பதிவு செய்ய துணை போகும் அதிகாரிகள், தண்டனை இன்றி தப்பி விடுவது மட்டுமின்றி, உரிய நேரத்தில் பதவி உயர்வும் பெற்று பணியாற்றும் கொடுமை, பத்திரப்பதிவு துறையில் நடக்கிறது.
திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காற்றாலைகள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்படுகின்றன. இந்த தொழிலில் ஈடுபடும் வடமாநிலத்தவர்கள், மொத்தமாக நிலம் பெறுவதற்கு இங்குள்ள புரோக்கர்களை நம்புகின்றனர். பல ஆண்டுகளாக எந்த பதிவும் இல்லாமல் இருக்கும் நிலங்களை குறிவைத்து, சில புரோக்கர்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்த 87 வயது முதியவர் செந்தில் ஆறுமுகம், தனது பூர்வீக இடம் எனக்கூறி 2,500 ஏக்கரை, கோவையை சேர்ந்தவருக்கு பவர் பத்திரம் செய்து கொடுத்தார். துாத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை சார் பதிவாளர் மோகன்தாஸ் இதை பதிவு செய்தார். இந்த தகவல் தெரியவந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், சார் பதிவாளர் மோகன்தாஸ் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். செந்தில் ஆறுமுகம் பவர் பத்திரத்தை ரத்து செய்தார்.
ஏற்கனவே புதுக்கோட்டை பகுதி தளவாய்புரத்தில், 1,300 ஏக்கர் நிலம் தமக்கு சொந்தமானது எனக்கூறி, விளாத்திகுளம் அருகே புதூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில், கேரளாவைச் சேர்ந்த பென்னி, பாத்திமா சம்சுதீனுக்கு 2019ல் செந்தில் ஆறுமுகம் விற்பனை செய்தார். அந்த நிலமும் விவசாயிகளுக்கு சொந்தமானது. இதுகுறித்து தளவாய்புரம் ஊராட்சி தலைவர் ஆனந்தகுமார், அப்போதைய அமைச்சர் வேலுமணியிடம் புகார் அளித்தார். இதையடுத்து, அந்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது.
நில மோசடியில் ஈடுபடும் புரோக்கர்கள், அவர்களுக்கு ஏற்ற அதிகாரிகள் வருவதற்காக காத்திருக்கின்றனர். சார் பதிவாளராக மோகன்தாஸ் பொறுப்பேற்றதும், தற்போதைய மோசடியை நிறைவேற்றியுள்ளார் செந்தில் ஆறுமுகம். தமது பூர்வீக நிலம் என அவர் கூறியதால், பதிவு செய்ததாக சார் பதிவாளர் தரப்பில் கூறப்படுகிறது. பூர்வீக நிலம் என்றால், ஏன் அவர் சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
பத்திரபதிவு நடந்தது வெளியே தெரியாமல் போயிருந்தால், இந்த நிலம் பல கைகள் மாற்றப்பட்டு வடமாநிலத்தவர்களுக்கு விற்கப்பட்டிருக்கும்.சேலத்தை பூர்வீகமாக கொண்ட சார் பதிவாளர் மோகன்தாஸ், கடந்த ஆண்டு தென்காசி மாவட்டம், கடையத்தில் பணியாற்றிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் இரவில் நடத்திய சோதனையில் லஞ்சப்பணம் 1.50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த பிரச்னையில் மோகன்தாஸ் மீது இடமாறுதல் நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டது. தற்போது 2,500 ஏக்கர் பதிவுக்கு அவருக்கு ஒரு பெரும் தொகை தரப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
நில அபகரிப்பு தடுப்பு போலீசார், புகார் தருவோரையும், மோசடி செய்தவரையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து பேசி, நிலங்களை மீட்டு ஒப்படைக்கின்றனர்.இதனால் நில மோசடியில் ஈடுபட்டவர் யார் என, வெளி உலகத்துக்கு தெரியாமல் போகிறது. அவர்கள் இத்தகைய மோசடியை தொடர்கின்றனர். நில மோசடியில் ஈடுபடுபவர்கள், துணைபோகும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை, தண்டனை கிடைக்காத பட்சத்தில் நில மோசடிகள் தொடரத்தான் செய்யும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பத்திரப்பதிவு துறையில் மோசடி அதிகாரிகள் தப்பிவிடுவது வழக்கமாக நடக்கிறது. துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த திடீர் சோதனையில், 3.49 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அவர் இன்னமும் பணியில் தான் உள்ளார். அதேபோல், துாத்துக்குடியில் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கில் சிக்கியவர் பதவி உயர்வு பெற்று பணியாற்றுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment