Monday, May 2, 2022

முன்கூட்டியே? ராஜ்யசபா தேர்தல்...

 தமிழகத்தைச் சேர்ந்த ஆறு எம்.பி.,க்கள் உட்பட, 20 ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் வரும் ஜூனில் முடிவுக்கு வருகிறது. ஜூலையில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து,

காலியாகும் ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலை ஒரு மாதம் முன்கூட்டியே நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


20 பேரின் பதவிக்காலம்



முன்கூட்டியே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவுக்கு வருவதை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஜூலையில் நடக்க உள்ளது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஓட்டளித்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பர்.

இந்நிலையில், ராஜ்யசபாவில் தமிழகத்தை சேர்ந்த தி.மு.க., எம்.பி.,க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ்குமார், அ.தி.மு.க., எம்.பி.,க்கள் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார் உள்ளிட்ட ஆறு பேரின் பதவிக்காலம், ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இவர்களுடன், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மேலும் 14 ராஜ்யசபா எம்.பி.,க்களையும் சேர்த்து, மொத்தம் 20 பேரின் பதவிக்காலம், ஜூன் இறுதியில் முடிவுக்கு வருகிறது.



சுஷில் சந்திரா ஆலோசனை



எனவே, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக, இந்த 20 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலை நடத்தி முடிக்க, தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா தலைமையில், தேர்தல் ஆணையர்கள் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.

அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடந்த இந்தக் கூட்டத்தில், ராஜ்யசபா தேர்தலை ஜூன் முதல் வாரத்திலேயே நடத்தி முடிப்பது குறித்து அதிகாரிகள் விவாதித்ததாக, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த விவகாரம் குறித்து, நாளை அல்லது நாளை மறுநாள் முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், ஜூன் முதல் வாரத்தில் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தல் தேதிகள், இந்த வார கடைசிக்குள் அறிவிக்கப்படக் கூடும் என, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை, ஜனாதிபதி தேர்தல் நடக்கும் வரை, காலியாகும் 20 ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால், இந்த எம்.பி.,க்களின் ஓட்டு வீணாகிவிடும். இதை தவிர்ப்பதற்காகவே, ராஜ்யசபா தேர்தலை முன்கூட்டியே நடத்தி முடிக்க, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...