தற்போதைய நிலையில் திமுகவுக்கு 4 உறுப்பினர்கள் கிடைக்கும் என்ற நிலையில் ஒரு இடம் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற மேல்சபையில் (மாநிலங்களவை) தி.மு.க.வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வை சேர்ந்த நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேர் எம்.பி.க்களாக உள்ளனர். இவர்கள் 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
இதையடுத்து இந்த 6 இடங்களுக்கும் அடுத்த மாதம் (ஜூன்) 10ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 24ந்தேதி தொடங்குகிறது.
தற்போதைய நிலையில் ஒரு எம்.பி. வெற்றிபெற 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவைப்படும். அதன்படி பார்த்தால் தி.மு.க.வுக்கு 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே தி.மு.க.வுக்கு 4 எம்.பி. பதவிகள் கிடைக்கும். அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே அ.தி.மு.க.வுக்கு 2 எம்.பி. பதவிகள் கிடைக்கும்.
இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்.பி. பதவி வழங்கப்படலாம் என்று பேசப்பட்டு வந்தது.
இதையடுத்து மேல்சபை எம்.பி. பதவிகளை கைப்பற்றிட தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்குள் கடும் போட்டி ஏற்பட்டு வந்தது. எம்.பி. பதவியை கைப்பற்ற பலர் கட்சி தலைமையிடம் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் மேல்சபை எம்.பி. தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். தி.மு.க. சார்பில் 3 இடங்களுக்கு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மற்றொரு இடம் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
2022 ஜூன் 10 அன்று நடைபெற இருக்கும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் தி.மு.க. கூட்டணிகளுக்கான 4 இடங்களில் இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 3 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், தி.மு.க. வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே மேல்சபை எம்.பி.யாக இருக்கும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமாருக்கு தி.மு.க. சார்பில் மீண்டும் மேல்சபை எம்.பி. பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வை சேர்ந்த மேல்சபை எம்.பி. வைத்திலிங்கம் ஒரு ஆண்டு பதவி இருந்த நிலையில் ராஜினாமா செய்துவிட்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார்.
அந்த இடத்துக்கு நடந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ராஜேஸ்குமார் தேர்வு செய்யப்பட்டார். மிக குறைந்த காலமே அவர் எம்.பி.யாக இருந்ததால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கும் வகையில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் ஏற்கனவே எம்.பி.யாக உள்ள டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
No comments:
Post a Comment