காவல் நிலையங்களில், 'லாக் - அப்' மரணத்தை தவிர்க்க, கைதானவர்களிடம் இரவு நேரங்களில் விசாரணை நடத்த, போலீசாருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 'மாலைக்குள் விசாரணையை முடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றவாளிகளை சிறையில் அடைக்க வேண்டும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னல் அருகே, ஏப்., 19 இரவு, எஸ்.ஐ., புகழும்பெருமாள், போலீஸ்காரர் பொன்ராஜ், ஊர்க் காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆட்டோவில் வந்த, பட்டினப் பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், 25, மற்றும் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ், 28, ஆகியோரை மடக்கினர். சோதனையில், ஆட்டோவில் கஞ்சா மற்றும் கத்தி இருப்பது தெரியவந்தது.
இருவரும், போலீசாரை கத்தியால் வெட்ட முயன்றதாகக் கூறப்படுகிறது.இருவரையும் போலீசார், தலைமைச் செயலகக் குடியிருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த விசாரணையின்போது, விக்னேஷை போலீசார், அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், மறுநாள் வாந்தி மற்றும் வலிப்பு ஏற்பட்டு, விக்னேஷ் இறந்தார். இதை மூடி மறைக்க, விக்னேஷ் குடும்பத்தாருக்கு போலீசார், 1 லட்சம் ரூபாய் கொடுத்தாகவும் புகார் எழுந்தது. 'விக்னேஷ், சுரேஷ் ஆகியோர் மீது, கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. இவர்கள் குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் தான்' என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 'அதற்காக அடித்து கொன்று விடுவீர்களா?' என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது தொடர்பாக, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், விக்னேஷ் சகோதரர் வினோத், மாஜிஸ்திரேட் முன், வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கிடையே, விக்னேஷ் மரணம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். டி.எஸ்.பி., சரவணன் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் பதிவான, 'சிசிடிவி கேமரா' பதிவுகளை, போலீஸ் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அதில், போலீசார், விக்னேஷ் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
திருவண்ணாமலை சம்பவம்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே, தட்டரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி,54; சாராய வியாபாரி. இவரையும் போலீசார் அடித்து கொன்றதாக, புகார் எழுந்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இவர், வலிப்பு ஏற்பட்டு இறந்தார். 'மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், என் தந்தையை விடுவிக்க, என்னிடம், 2 லட்சம் ரூபாய் கேட்டனர். இறுதியாக, 1 லட்சம் ரூபாய் கேட்டனர். என்னிடம் அவ்வளவு தொகை இல்லை என்றதும், என் தந்தையை அடித்து கொன்று விட்டனர்' என, தங்கமணியின் மகன் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
'தங்கமணி, நல்லவர் கிடையாது. இவர் மீது விஷ சாராயம் காய்ச்சியது உட்பட, 18க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கைதானபோது உடல் நலம் சரியில்லாமல் தான் இருந்தார். உரிய சிகிச்சை அளித்து, சிறையில் அடைத்தோம்' என, போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். இச்சம்பவம் குறித்தும், சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, தாராசுரத்தை் சேர்ந்த ரவுடி சிலம்பரசன், 30, என்பவரையும், போலீசார் அடித்துக் கொன்று விட்டதாக புகார் எழுந்துள்ளது. அந்தளவுக்கு பொது மக்களிடம் போலீசாரின் அணுகுமுறையும் கரடுமுரடாகத் தான் உள்ளது.
இந்நிலையில், காவல் நிலையங்களில், 'லாக் - அப்' மரணங்களை தவிர்க்க, போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகளை, டி.ஜி.பி., பிறப்பித்துள்ளார்.
அதன் விபரம்:
* இரவு நேர வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார், மக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது
* அதே நேரத்தில், ரவுடிகளை பிடிக்கும்போது, தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் தக்க பாதுகாப்புடன் செயல்பட வேண்டும்
* எக்காரணத்தை முன்னிட்டும் கைதானவர்களிடம், காவல் நிலையங்களில், அதுவும் இரவு நேரங்களில் விசாரணை நடத்தக் கூடாது
* அவர்களின் உடல் நலன் எப்படி உள்ளது என்பதை கவனத்தில் வைக்க வேண்டும். தேவை ஏற்பட்டால், உடனடியாக அரசு மருத்துவனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ய வேண்டும்
* குற்ற வழக்குகளில் சிக்குவோரிடம், மாலைக்குள் விசாரணை முடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க வேண்டும்
* அவர்களை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. அறிவியல் ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்
* குற்றவாளிகள், தாங்கள் தப்பிக்க, பல்வேறு உத்திகளை கையாளுவர். அதற்கு ஏற்ப, புத்தி கூர்மையுடன் செயல்பட்டு, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்.இவ்வாறு டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:விக்னேஷ் மரண விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, எஸ்.ஐ., புகழும்பெருமாள் உள்ளிட்ட மூவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். தங்கமணி மரணம் குறித்தும் விசாரணை நடக்கிறது. அவரது மகனிடம், போலீசார் பேரம் பேசினரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். தவறும் செய்யும் போலீசார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கைதான நபர்கள் மற்றும் குற்றவாளிகளிடம் எப்படி விசாரிக்க வேண்டும் என, போலீசாருக்கு டி.ஜி.பி., பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment