Monday, May 16, 2022

திருக்கோஷ்டியூர் கோவில் தேரில் ஏறிய துர்கா : ஐதீகத்தை மீறியதால் உற்சவம் தடைபட்டதா?

 சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் உள்ள சவுமிய நாராயணர் கோவில் தேர் உற்சவம் மே 14ல் நடந்தது. 'தேர் புறப்பாட்டுக்கு முன், தேரில் ஏறி முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா தரிசனம் செய்தார். அது தெய்வ குற்றம்; வைணவ தலங்களில் தேர் உற்சவத்திற்கு முன், தேரில் ஏறி பெண்கள் தரிசனம் செய்ய கூடாது என்பது ஐதீகம். அதை துர்கா மீறி விட்டார்' என, சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.


இது குறித்து, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில் தீர்த்தகாரரும், கோவிலுக்குள் இருக்கும் உடையார் சன்னதி பட்டாச்சாரியாருமான ராமானுஜம் கூறியதாவது:

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில் நாராயண மந்திரத்தை ராமானுஜர் வெளிப்படுத்திய ஆலயம். 108 திவ்ய தேசங்களில் 95வது தலம். நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே நரசிம்ம கோலத்தை பெருமாள், தேவர்களுக்கு காட்டி அருளிய இடம். இந்திரன் பூஜித்த சவுமிய நாராயணர் விக்கிரகம், உற்சவராக இருக்கும் ஆலயம் என பல்வேறு சிறப்புகள் இந்த கோவிலுக்கு உண்டு.
இந்த கோவிலின் தேர் உற்சவம் ஆண்டு தோறும் மே மாதத்தில் நடக்கும். கோவிலின் அத்யயன பட்டராக இருக்கும் திருக்கோஷ்டியூர் மாதவன் தான், தேர்
உற்சவத்துக்கான நாள் குறித்து கொடுப்பார். கோவிலில் நடக்கும் எல்லா காரியங்களுக்கும் அவர் தான் பொறுப்பு. 'மே 14 மாலை 5:00 மணிக்கு தேர் உற்சவம் நடக்கும்' என, அவர் தான் நாள், நேரம் குறித்து கொடுத்தார்.
என்றைக்கு தேர் உற்சவம் நடக்கும் என அறிவிக்கப்படுகிறதோ, அன்றைய தினம் காலையிலேயே உற்சவர் தேருக்கு வந்து விடுவார். அப்படித்தான், இந்த ஆண்டும் வந்தார். வழக்கம் போல, திருக்கோஷ்டியூர் கிராமத்தில் இருக்கும் ஆண்களும், பெண்களும், தேர் மீது அமைக்கப்பட்டு இருக்கும் படிகள் வழியாக ஏறிச் சென்று பெருமாளை வணங்கினர். அர்ச்சனைகளும் செய்யப்பட்டன.
கிராம மக்களோடு மக்களாக, இந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவும் வழிபட்டார். ஆனால், 'திருகோஷ்டியூர் தேரில் துர்காவை ஏற விட்டதால், தெய்வ குற்றமாகி விட்டது. அதனால், தேர் வீதி உலா, முதல் முறையாக கடும் மழையால் நிறுத்தப்பட்டது. உற்சவர் பெருமாள், இரவு முழுதும் தேரிலேயே இருந்தார். முதல்வர் வெளிப்படையாக ஆதீனங்களை அவமதிக்கிறார். அவர் மனைவி வெளிப்படையாக ஆகம விதிகளை மீறி, ஆணவத்தை வெளிப்படுத்துகிறார். இவர்களுக்கு கட்டுப்பட்ட அறநிலைய துறை செய்வது எல்லாமே தெய்வ குற்றமாகுது' என்று, சமூக வலைதளங்களில் கருத்து பரப்பி வருகின்றனர். இது சரியான தகவல் அல்ல.


latest tamil news



ஹிந்து ஆன்மிக பக்தர்கள், இதில் வேதனைப்பட எதுவும் இல்லை. ஐதீகப்படி அல்லது வழக்கப்படியான நிகழ்வுகள் தான், 14ம் தேதி காலையில் நடந்தது. கோவில் விமானத்துக்கு தங்க முலாம் பூசி, தங்கத் தகடு அமைக்கும் பணி நடக்கிறது. இந்த நேரத்தில், தேர் திருவிழாவுக்கு, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவை அழைத்து வந்தால், விழா சிறக்கும் என்பதோடு, தங்க முலாம் பூசும் பணிக்கு உதவி கிடைக்கும். அவரே நேரடியாக செய்வார் அல்லது நன்கொடையாளர்களை ஏற்பாடு செய்வார் என்பது தான், இதற்கு ஏற்பாடு செய்த திருக்கோஷ்டியூர் மாதவனுடைய எண்ணம். அதில் தவறு ஏதும் இல்லை.
கோவில் காரியம் சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்தார் அவ்வளவு தான். ஆனால், ஆன்மிக விஷயத்தில், அரசியலை நுழைத்து விமர்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில் நிர்வாக அலுவலர் சேவற்கொடியோன் கூறியதாவது:கோவில் தேர் உற்சவத்தை வைத்து, இருவிதங்களில் விமர்சிக்கின்றனர். கோவில் தேரில் பெண்களை ஏற அனுமதிக்க மாட்டோம் என்பது தவறு. காலம் காலமாக நடக்கும் விஷயம் தான். தேர் கம்பி வடத்தின் ஒரு பகுதியை, திருக்கோஷ்டியூரை சுற்றிலும் இருக்கும் மயில்ராயன் கோட்டை நாட்டார்களும், இன்னொரு பகுதியை பட்டமங்கலம் நாட்டாரும் தான் சேர்ந்து இழுப்பர். அவர்களில் ஒரு சிலர், தேர் கம்பி வடத்தின் மேல் ஏறி நின்று தேரை இயக்க, துண்டை அசைத்து சைகை கொடுப்பர். அதன் பின் தான் தேர் இயக்கப்படும். இது தான் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. அதே வகையில் தான் இந்த ஆண்டும் நடந்தது.
தேர் இயக்கப்படுவதற்கு முன், நாட்டார் குடும்பத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் தேர் மேல் ஏறி உற்சவர் பெருமாளை வணங்குவது வாடிக்கை. அது இந்த ஆண்டும் நடந்தது. இந்த ஆண்டு, முதல் முறையாக, துர்கா தேரில் ஏறி சுவாமி தரிசனம் செய்தார். அவரோடு, ஜமீன் பரம்பரையின் மதுராந்தகி நாச்சியாரும் தரிசனம் செய்தார்.

ஜமீன் பரம்பரைக்கு சொந்தமான கோவில் என்பதால், அந்த பரம்பரையை சேர்ந்தவர்களுக்கு, கோவில் விழாக்களில் இன்றளவிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல... துர்கா தேர் ஏறி சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்ற பின், அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா குடும்பத்துடன், தேரில் ஏறி வழிபாடு செய்தார். அவர், ஆண்டுதோறும் தேர் ஏறி வழிபடுவது வாடிக்கை.

மாலையில் தேர் கிளம்பும் நேரத்தில் கடுமையான மழை பெய்தது. தேர் செல்லும் வீதி முழுதும் மழை நீரால் சூழப்பட்டது. தேரை பத்திரமாக செலுத்த வசதியில்லை என்றதும், தேரை இயக்கும் நாட்டார்கள், 'தேரை நாளை காலை இயக்கலாம்' என, கூறி விட்டனர்.
அதையடுத்தே, மாலையில் புறப்பட வேண்டிய தேர் வீதி உலா நிறுத்தப்பட்டது. மறுநாள் காலையில், 9:00 மணிக்கு தேர் புறப்பட்டு, 11:00 மணிக்கு நிலையை அடைந்தது. இதுபோன்று, கடந்த, 2012லும் மழை காரணமாக தேர் புறப்பாடு, ஒரு நாள் கழித்து நடந்திருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...