காஞ்சிக்கு அருகிலுள்ள *கூரம்* என்ற ஊரில் அவதரித்தவர், *ஶ்ரீவத்சாங்கர்* என்ற *கூரத்தாழ்வான்*!
ஶ்ரீரங்கம், ஶ்ரீபெரும்புதூர் என்ற இரண்டு திவ்யதேசங்களிலும் உடையவர் சன்னதி இரண்டு பக்கமும் சித்தர ரூபத்தில் வலது புறத்தில் கூரத்தாழ்வானையும், இடது புறத்தில் முதலியாண்டானையும் சேவிக்கலாம்!
திருக்கோஷ்டியூர் நம்பியை சேவிக்க ராமானுஜர் 18 முறை முயன்றார் என்பது பிரஸித்தம். கடைசியில், *தண்டமும், பவித்ரமுமாக நீர் மட்டும் நாளை வாரும்* என்று சொல்ல, அடுத்த முறை உடையவர் ஆழ்வானையும், முதலியாண்டானையும் உடன் அழைத்து சென்று தண்டனிட்டார்!
நம்பி, "ஒருவர் மட்டும் என்றேன், இவர்களையும் அழைத்து வருவானேன்?" என்று கேட்க, ராமாநுஜர் *முதலியாண்டான் எனக்கு த்ரிதண்டம், கூரத்தாழ்வான் என் பவித்ரம்* என்றார்!
இராமாநுச நூற்றந்தாதியில் கூரத்தாழ்வானைப் பற்றிய இரண்டு வரிகள்..
*மொழியைக் கடக்கும் பெரும்புகழான்,*
*வஞ்ச முக்குறும்பாம்*;
*குழியைக்கடக்கும் நம் கூரத்தாழ்வான்*
*முக்குறும்பு* என்பது கல்வி செருக்கு, செல்வச் செருக்கு, குலச் செருக்கு - இந்த மூன்று கர்வத்தையும் கடந்தவர், கூரத்தாழ்வான்!
ஆழ்வான் காலஷேபத்தின் போது, திருவாய்மொழியின் முதல் பாசுரமான "உயர்வற உயர்நலம் உடையவன்" என்று தொடங்கியதுமே நம்மாழ்வார் பெருமாளுடைய கல்யாண குணங்களை பேசுகிறாரே என்று ஆழ்ந்து, அந்த அனுபவத்தில் அப்படியே மயங்கி மோகித்துவிட்டார். எல்லோரும் இதை ராமாநுஜரிடம் தெரிவிக்க, அவரும் ஓடிவந்து இது போலத்தான் "எத்திரம் உரலினோடு, இணைத்திருந்து ஏங்கிய எளிவே" என்று நினைத்தவாறே நம்மாழ்வார், பெருமானுடைய குணத்தை வியந்து ஆறு மாதம் மயக்க நிலையிலேயே இருந்தாராம் என்று சொல்லி, நம் கூரத்தாழ்வானும், நம்மாழ்வாரைப் போலே பகவத் அனுபவத்தில் மோகித்திருப்பதைக் கண்டு பரவசப்பட்டு *ஆழ்வான்! ஆழ்வான்!!* எழுந்திரும் என்றாராம்!
*அதனால் தான் இவர், ஆழ்வான் என்பதுடன் இவர் அவதரித்த 'கூரம்' பெயரையும் சேர்த்து, "கூரத்தாழ்வான்" என்ற திருநாமத்துடன் அழைக்கலானார்!*
ஒரு சமயம் நாலூரான் என்னும் அமைச்சரின் தந்திரத்தால் மதியிழந்த உறையூர் சோழன், ராமாநுசரை கொல்ல ஆணையிட்டான். இதையறிந்த ஆழ்வான், ராமாநுசரை போல வேடம்பூண்டு அரசனிடம் செல்ல, அவரது கண்களைத் தோண்ட அரசன் ஆணையிட, கண்கள் இழந்த நிலையில் 12 ஆண்டுகள் திருமாலிருஞ்சோலை சென்று அங்கு கைங்கர்யம் செய்து வந்தார்.
சோழன் மறைவுக்கு பின் திருவரங்கம் திரும்பிய கூரத்தாழ்வான், இராமாநுஜரின் ஆக்ஞைப்படி காஞ்சி வரதனிடம் சென்று பிரார்த்தித்து இழந்த நேத்ரத்தை மீண்டும் பெற்று அரங்கனுக்கு கைங்கர்யம் செய்து வந்த நிலையில், தனது 123வது வயதில் திருநாட்டுக்கு எழுந்தருளினார்! வருத்தமுற்ற ராமாநுஜரிடம், ஆசார்யனை (இராமாநுசரை) வரவேற்க தாம் முன்னரே திருநாடு செல்வதாக கூறிச் சென்றார்!
*இவர் கூரேசர், கூராதிபர், கூராதிபதி, கூரநாதர், ஶ்ரீவத்ஸ்சிஹனர் என்ற திருநாமங்களாலும் போற்றப்பட்டார்!*
இவர் அருளிய க்ரந்தங்கள்: ஶ்ரீஅதிமானுஷ ஸ்தவம்
ஸுந்தரபாஹு ஸ்தவம்
ஶ்ரீவரதராஜ ஸ்தவம்
ஶ்ரீஸ்தவம்
ஶ்ரீவைகுண்ட ஸ்தவம்
தாடீபஞ்சகம்
No comments:
Post a Comment