Friday, February 10, 2023

நல்ல வாழ்க்கை கடைசிவரை அமையாது.ஒரு சிலர் விதிவிலக்கு.

 உன்னோட வனப்பு இந்த ஊருல ஒருத்திக்குமில்லேன்னு சொல்லி சொல்லி உசுப்பேத்தியே கூடப்படிக்கறவளுங்க நடிக்கற ஆசையை தூண்டி விட்டாளுங்க.

எடுத்த எடுப்புலேயே கனவுக்கன்னியாகப்போறோம் கைநிறைய சம்பாதிக்கப் போறோம்னு நெனச்சு, திருட்டு ரயிலேறி வந்ததுக்கு தண்டனையா அஞ்சுக்கும் பத்துக்கும் ,ஏதோ ஒரு ஓரமா கொஞ்சம் இந்த மூஞ்சி ஸ்க்ரீன்ல வரதுக்கும்,கண்டவன் கிட்டேயும் அசிங்கப்பட்டு,அசடு வழிஞ்சு,எவனெவன் வக்கிரத்துக்கோ வடிகாலாகி..ச்சீய்
நாய் பொழப்பா இருக்கு எம்பாடு.
கதை டிஸ்கஷன் இருக்கு.மஹாபலிபுரம் கெஸ்ட் ஹவுஸ் வந்துடுங்க..உங்க ரோல் பத்தி டீடெய்லா பொறுமையா பேசிடலாம்னு போற போக்குல சொல்லிட்டு போயிட்டான் அசிஸ்டண்ட்டு..
தனியா போறதா? துணைக்கு யாரையும் கூட்டிட்டு போறதான்னு தெரியல..
என்ன அதட்டலா ஒருமையில பேசறான் அந்த ஆளு. துணைநடிகர்கள் ஏஜண்ட்டை
பகைச்சுக்கிட்டா ஊருக்கு ரயிலேற வேண்டியதுதானாமே..
பெரிய புள்ளையானதும் முட்டி தெரியாராப்புல பாவாடை கட்டினாலே ஊருல பாட்டி திட்டும்..வயித்துப்பொழப்புக்காக இப்போ கா மீட்டர் துணியில மொத்த உடம்பை மூடிகிட்டு ஆடி பாடறதா இருக்கு
இடுப்புல கொஞ்சம் சதை போட்டாலே.. கரைக்கற வரைக்கும் மொத ரோவுல ஆட சான்ஸ் தரமாட்டாங்க.
பின்னாடி தள்ளிடுவாங்க, இல்லாட்டி தூக்கிடுவாங்கன்னு சொல்றாங்க.
நடுராத்திரி விடிகாலைன்னு மாறி மாறி,அந்த மூணு நாள் அடிவயித்து வலின்னு கூட பாக்காம ரிகர்சல் பாத்ததெல்லாம் வீணாயிடுமோன்னு நெனச்சா துக்கம் தொண்டையடைக்குது..
இந்த ஆளு படத்துல நடிக்க வாய்ப்பு குடுக்கறேன்னு சொன்னாரேன்னு அவரு கூப்பிட்ட எடத்துக்கெல்லாம் கம்பெனி குடுத்து உடம்பு நலிஞ்சது தான் மிச்சம்..
எங்கிட்டே எதுவும் எடுப்பா இல்லேன்னு வேற ஒருத்திய ஃபிக்ஸ் பண்ணிட்டாரு.
அதெப்படி உரசி உரசி வழிஞ்சப்போ மட்டும் எல்லாம் எடுப்பா இருக்குன்னு சொன்னான் அந்த ஆளு?
எனக்கு வாய்ச்சவ சரியில்ல..உன்ன வறுமை வாழவிடலே‌.
நானிருக்கேன் உனக்கு கடைசி வரைக்கும்னு தலையில அடிச்சு சத்தியம் பண்ணவன நம்பி, குடும்பம் புள்ளைங்கன்னு ஒருவழியா செட்டிலாயிடலாம்னு நெனச்சு கிடைச்ச ரெண்டு மூணு அட்வான்ஸெல்லாம் திருப்பி குடுத்தது தான் முட்டாள்தனம்.
உறவா நெனச்சு பழகறான்னு நெனச்சா உமட்டலுக்கு தொட்டுக்கற ஊறுகாயா வச்சிருக்கான் பாவி.
ஓகோன்னு கொடிகட்டி பறக்காட்டாலும் ஓரளவுக்கு சம்பாதிச்சப்போ காக்கா கூட்டம் மாதிரி அறிஞ்சவன் தெரிஞ்சவன்னு நாலுசனம் சுத்திவந்திச்சு..
மார்கட்டும் , மார்க்கெட்டும் ஒட்டுக்க சரிஞ்சு ஒண்டியா நிக்கற நேரத்துக்கு, இருக்காளா செத்தாளான்னு பாக்க ஒரு நாதியில்ல.
எத்தன நாளைக்குத் தான் தூக்கமாத்திரைய துணைக்கு வச்சிக்கிட்டு தூங்கறது?
படிப்பைக்காட்டிலும் நடிப்பில் நாட்டம்,
திறமை மட்டும் போதும் துறையின் உச்சத்தை அடைய என வெள்ளெந்தியான நம்பிக்கை,
பாதியில் விட்டுச்சென்ற அப்பா,
இளமையில் வறுமை, தவறான வழிகாட்டுதல்,பாலியல் கொடுமை, என ஏதோ ஒன்று முட்டித்தள்ளியதால் கனவுத்தொழிற்சாலையின் கதவை ஓயாமல் தட்டி உள்ளே சென்றவர்கள் ஏராளம்..
நினைப்பதெல்லாம் அங்கே நடப்பதில்லை.
அனுசரிப்புகளுக்குப் பழகினால்
ஆளுமைகளாகலாம்
இருட்டுக்குள் இயைந்து போனால் தாரகையாய் ஜொலிக்கலாம்...
காமதேசத்து தூதுவர்களுக்குத் தான் கால்சீட்டுகள் கிராக்கி என்பது போக போகத்தான் புரியவரும்..
அதிர்ச்சி அழுகை ஏமாற்றம் அவமானம் என ஆரம்பப்பயணம் கரடுமரடாய் மிரட்ட,விட்டொழித்து வெளியே வரலாம் எனில் ,
இதைத்தவிர வேறென்ன தெரியும்?
பாதியில் விட்ட படிப்பு எப்படி கறி சமைக்க உதவும்?
சுலபமா வாடகைக்கு ஒரு வீடு எடுக்க முடியுமா?
கனவு லோக தேவதையாய் பார்க்கும் என நினைத்த சமுகம் "தே"........ முத்திரை கொடுத்து "வதை" செய்யும்...
சொச்சமிச்சம் தெம்பு இருக்கும்வரை புட்டாமாவும் அரிதாரமும் துணை என மீண்டும் அதே இடத்திற்கு யூ டர்ன்..
பளபள உடை , பளிச்சிரிப்பு ஊடக வெளிச்சம் ,கைதட்டல்,மாலை ,மரியாதை வெறியர்கூட்டம் .ரசிகர் பட்டாளம்,கடை திறப்பு,நகை ,புடவை வளையல், சமையல்,எண்ணெய் சீயக்காய் விளம்பரம் தொடங்கி சோப்பு, ஷாம்பூ உள்ளாடை ஆணுறை என சகலமும் இவர்களை சந்தையில் தேவதைகளாய் நமக்குக் காட்டினாலும்,
நெருப்புப்பந்துகளை நித்தம் நித்தம் விழுங்கித்தான் இவர்கள் தாரகைகளாய் ஜொலிக்கிறார்கள் என்பது தான் உண்மை..
"சினிமாக்காறிங்க இவளுகெல்லாம்..அப்படித்தான் இருப்பாளுக."
....நாக்கு மேல பல்லைப்போட்டு எவ்வளவு சுலபமாய் சொல்லிவிடுகிறோம் ......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...