"பாவம் கொரூரன்"என்றொரு மலையாள படம், 1984 ல் வெளிவந்து, "ஏ" படம் என்ற தரத்தை ரசிகர்களிடம் பெற்று, "தவறான"படமாக பல வருடம் பேசப்பட்டது.
80s ரசிக கண்மணிகளுக்கு ஞாபகம் இருக்கும்.
இந்த படத்தை பற்றி பின்பு பேசுவோம்.
படம் வந்த கால கட்டத்தில் சில ஞாபகங்கள்....
மலையாள படங்கள் என்றாலே தவறான படங்களாகவே சித்தரிக்கப்பட்ட காலங்கள் அது. இன்றுபோல் அவ்வளவாக மலையாள படங்கள் வெளியில் தெரியாத காலம்.
1921, மூனாம்முறா, இனியும் கதை தொடரும்,ஹரி கிருஷ்ணன்ஸ்,தசரதம், மிருகயா போன்ற பெரிய நடிகர்களின், முக்கியமான படங்கள் மட்டுமே எதாவது ஒரு பெரிய தியேட்டரில் ரிலீஸ் ஆகும்.
பிறகு அதை பார்க்கவே முடியாது.
இது இப்படி இருக்க,
பல தியேட்டர்களுக்கு வாழ்வாதாரமே என்ற பாணியில் பல மலையாள படங்கள் உண்டு.
காலைக் காட்சி மற்றும் ஈவினிங் ஷோவுக்கும் நைட் 10 மணி காட்சிக்கும் இடையே 8 to 9.30 வரை ஒரு காட்சி என "சில" தியேட்டர்களில் படம் ஓடும்.
இவை எந்த மாதிரியான படங்கள் என குறிப்பிட வேண்டியதில்லை.
கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய பிரபலமான தியேட்டர்கள் இருந்தன. எல்லா தியேட்டரிலும் எழுதப்படாத ஒரு விதி உண்டெனில் அது தன் கடைசி காலத்தில், அஞ்சரைக்குள்ள வண்டி, பாவம் கொரூரன், ஷகிலா போன்ற "மலையாள" படங்களை ஓட்டி, தன் மூச்சை நிறுத்தியது தான்.
சனி மற்றும் ஞாயிறு காலை நேரங்களில் இதுக்கெனவே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும்.
எப்படி நல்ல படங்களுக்கு ரசிகர்கள் உண்டோ, அதேபோல் "இந்த" படங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
95 களுக்கு பின்னரே இதுபோன்ற மலையாள படங்கள் திரையிடுவது குறைக்கப்பட்டு, 2000 க்கு மேல் கணிசமான அளவு குறைந்தது.அதுமட்டுமின்றி,
அது போன்ற படங்கள் போடும் தியேட்டர்களும் காணாமல் போயின.
அதன்பின் நல்ல நல்ல மலையாள படங்கள் நம் கண்முன் வலம் வர ஆரம்பித்து, இன்று உடனுக்குடன் பார்த்து மகிழ்கிறோம்.
இன்னுமே மலையாள படம் என்றாலே,
உடனே "பாவம் கொடூரன்" "அஞ்சரைக்குள்ள வண்டி" மாதிரி படமா என கேட்பவர்கள் உண்டு.
அதும் வீட்டு தாய்மார்கள் நல்ல படங்களை கூட, இன்னமுமே மலையாளம்னா "அந்த " மாதிரி படங்களாகதான் என்பது பரிபூரண நம்பிக்கை.
கடந்த வாரம் யூடியூபில் எதையோ தேடப்போய், " பாவம் கொரூரன்" படம் கண்ணில்பட்டது. சட்டென என்னாதான் படம் என, டவுன் செய்து பார்த்தால்,
"சிகப்பு ரோஜாக்கள்" படத்தின் கதையேதான்.
தாமு ஒரு அனாதை. பணக்கார வீட்டின் வேலைக்காரன், பள்ளி லீவில் வரும் அவ்வீட்டின் இளம்பெண், தாமுவை தன் விருப்பத்துக்கு இணங்க வைக்க, தாமு உண்மையாகவே அவளை நேசிக்கிறான்.
இது வீட்டில் உள்ளோருக்கு தெரிந்து, தாமுவை வீட்டை விட்டு துரத்துகிறார்கள்.
அவளை மறக்க முடியாத தாமு, திருமணம் செய்துகொள்ள அவளிடம் கேக்க,
அவளோ தாமுவை திருமணம் செய்து கொள்ள மறுத்து, வீட்டில் பார்த்த வேறொருவனை திருமணம் செய்ய முடிவெடுக்க, இதனால் மனமுடைந்த தாமு,
சைக்கோவாக மாறி, பல இளம்பெண்களை கொலை செய்யும் கொரூரனாக மாற,
போலீஸ் அவனை சுட்டு கொல்வதோடு சுபம்.
இதில் பெரிதாக எந்த ஆபாச காட்சிகளும் தெரியவில்லை. உண்மையில் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் அளவுக்கு கூட சில அலங்கோல காட்சிகள் இந்த படத்தில் இல்லை.
அப்போது, இதை ஏன் "ஏ" படம் என்று ரசிகர்கள் பெரிதாக அழைத்தார்கள் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது.
No comments:
Post a Comment