நானும் புஃபே என்றாலே இவ்வளவு பணம் கொடுக்கிறோமே, அந்த பைசா வசூல் செய்வது எப்படி என்று தெரியாமலே இருந்தேன்.
ஏதோ இயந்திரம் போல் சூப், ஸ்டார்டர் அதான் அந்த பன்னீர் பக்கோடா, சின்ன முக்கோண சமோசா போன்றவை, சாப்பிட்டு விட்ட கையோடு தட்டைத் தூக்கிக் கொண்டு நாண், ரொட்டி எடுத்துக் கொண்டு, என்ன என்று கூடப் பார்க்காமல் ஏதோ திரவங்களை ஊற்றிக் கொண்டு, அதை முடித்து புலவ் வகையறா இருக்கா என்று பார்த்து அதை வாரிக்கொண்டு, பின் வெள்ளை சாதம் சாம்பார், ரசம் உள்ளதா என்று பார்த்து அப்பளம் வடாத்துடன் அதையும் தொண்டைக் குழிக்குள் இறக்கி, கடைசியில் 'தயிர் சாதம் சாப்பிடலைன்னா என் ஜென்மம் கடைத்தேராது' என்று அதையும் மோர்மிளகா வற்றல், வத்தக்குழம்புடன் இறக்கி, இவற்றுக்கு இடையில் மானே, தேனே என்பது போல் சாலட், முளை கட்டிய பயறு இருந்தால்அதற்கும் மதிப்புக் கொடுத்து சாப்பிட்டு விட்டு, சிறிது ஆசு வாசப் படுத்திக் கொண்டு டெசர்ட் இருக்குமே, என்னது என்று ஓடி அதையும் ஒவ்வொரு ரகத்தைச் தட்டில் கடத்தி, இவ்வளவும் போக ஐஸ்க்ரீமுக்கு இடம் ஏற்படுத்தி ஒருவழியாய் பைசா வசூல் பண்ணி விட்டோம் என்று நினைக்கும் பொழுது மனைவி என்னங்க அங்க நூடுல்ஸ் வைச்சிருந்தாங்களே பார்க்கலையா என்னும் பொழுது ஆஹா அதை ஒளிச்சு வைச்சு ஹோட்டல்காரன் நம்மளை ஏமாத்திட்டான் பார்த்தியா என்று, இனிமேல் போய் சாப்பிட முடியாதே என்ற கையறு நிலையை எப்படி விளக்க முடியும்.
நானும் பல தோல்விகளுகக்கு பின் பல ஆராய்ச்சிகள் செய்து பைசா வசூல் செய்வது எப்படி என்று கண்டு கொண்டேன்.
புஃபே யைப் பொறுத்த வரை அவசரம் கூடாது. அந்தக் கால டிராவிட் மாதிரி ஆட வேண்டும் என்று கண்டு கொண்டேன்.
முதலில் ஹோட்டலுக்குள் நுழையும் பொழுது மிகுந்த பசியுடனும் இருக்கக் கூடாது, பசி இல்லாமலும் இருக்கக் கூடாது. மிதமான பசி வேண்டும்.
நமக்கு எவ்வளவு நேரம் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அதை முதலில் சூப் ஸ்டார்டர் ஸ்லாட், மெயின் கோர்ஸ் ஸ்லாட், டெசர்ட் ஸ்லாட் என்று பிரித்துக் கொள்ள வேண்டும்.
சூப் ஸ்டார்டர் ஸ்லாட்டில் சூப் அநேகமாக அவர்களே கொண்டு வைப்பார்கள். ஸ்டார்டர் நாம் போய் எடுத்துக் கொண்டு வர வேண்டும். அவைகளில் ரகத்துக்கு ஒன்று என்று எடுத்துக் கொண்டு அமர வேண்டும்.அவக்கை மாதிரி அள்ளிப் போட்டுக் கொண்டு விடக் கூடாது. சோத்தை அடைச்சிடும்(நமக்குள் சொல்லிக் கொள்ள வேண்டும்)
மெதுவாக சூப் ஸ்டார்டரை உள்ளிறக்க வேண்டும். அவசரம் கூடாது. அது முடிந்த பிறகு ஒரு ட்ரிங்க்ஸ் இடை வேளை கொடுக்க வேண்டும். சிறிது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் அளவளாவ வேண்டும. ஆனால் காரியத்தில் கண் இருக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து வயிறாரிடம் கேட்க வேண்டும். என்ன மெயின் கோர்ஸ் போலாமா என்று. அவர் கப கப என்று ஜீரண அமிலத்தை சுரந்து பசிக் கொடி காட்டுவார்.
உடன் தட்டை எடுத்துக் கொண்டு பிட்சை ஆய்வு செய்யும் பேட்ஸ்மேன் போன்று என்னென ஐட்டங்கள் இருக்கின்றன என்று ஆய்வு செய்ய வேண்டும். அநேகமாக நாண், ரொட்டி, அவைகளுக்குத் தோதா இரண்டு வெஜிடபிள்ஸ் இருக்கும். பின் புலவ், வெங்காயம் அல்லது வெள்ளரிக்காய் ரைத்தா இருக்கும். பின் நூடுல்ஸ், இடியாப்பம் இருக்கும். அவற்றிற்கு சாஸ், குருமா இருக்கும். வெள்ளை வெளேர் சாதம், உடலுக்கு நல்லது என்று மோதியும் டாக்டரும் சிறு தானியம் சாப்பிடுங்கள் என்றால் யார் கேட்கிறார்கள்.
அதற்கு அடுத்து சாம்பார், இரசம், அப்பளம் வடாம்.பிசைந்த தயிர்சாதம் மோர் மிளகாய் வற்றலுடன் மாங்காய் ஊறுகாய் அல்லது புளிக்காய்ச்சல் தொட்டுக் கொள்ள.
அங்கிருந்து சாலட், முளை கட்டிய பயிறு, மற்றும் மின்ட் ஜுஸ் பக்கம் கண்ணைச் சுழற்ற வேண்டும். டெசர்ட்டைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். அது டி20 கடைசி ஓவர், அடித்து ஆடலாம்.
மெயின் கோர்ஸ்ல நம்ம சாய்சுக்கு முக்கியத்துவம். கொடுக்கணும். அடிச்சு ஆடறதா அதாவது ஏதாவது சில ஐட்டங்களை வெளுத்து வாங்குவதா, இல்லை நிதானமாக எல்லாப் பந்துகளிலும் ரன் எடுப்பது போல் எல்லா ஐட்டங்களையும் சிறிது சிறிதாக ரசித்துச் சாப்பிட வேண்டுமா என்று யோசித்து ஆட வேண்டும், அதாவது சாப்பிட வேண்டும்.
மிண்ட் ஜூஸ் அப்ப அப்ப இறக்கிக் கொள்ள வேண்டும். ஐட்டங்கள் எல்லாம் அந்தக் கால விஸ்வநாத் ஸ்கொயர் கட் பவுண்டரி மாதிரி வயிற்றுக்குள் ஸ்மூத்தாக இறங்க உதவும்.
பின் சிறிது அதிக ட்ரிங்க்ஸ் இடை வேளை விட வேண்டும்.
வயிறு ஸ்கோர் கார்ட் எழுதி முடிக்க டைம் கொடுக்க வேண்டும்.
என்ன வயிறாரே ஏதாவது மெயின் கோர்ஸ்ல டவுட் இருக்கா இல்ல தேர்ட் அம்பயர் கிட்ட கேட்கணுமா, ரீப்ளேக்காக என்று. அவர் ஏதாவது ஐட்டம் ரீப்ளே என்றால் அதை மட்டும் இரண்டாவது ரவுண்ட் கட்டலாம்.
பின் உள்ளே உள்ள எல்லா ஐட்டங்களும் ஜீரண அமிலத்துடன் கலக்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். சிறிது நேரம் நல்ல சாய்ந்து உட்கார்ந்து இளைப்பாற வேண்டும். ஏன் என்றால் லாஸ்ட் ஓவருக்கு தயார் ஆக வேண்டுமே.
பின் டி20 லாஸ்ட் ஒவர் அதான் டெசர்ட். இதில் சிலர் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். மற்ற ஐட்டங்களையாவது மிஸ் பண்ணுவார்கள் இதில் ஒன்றையும் மிஸ் பண்ண மாட்டார்கள். எல்லா பாலும் பவுண்டரி மாதிரி எல்லா ஐட்டங்களையும் தட்டில் அடுக்கி விடுவார்கள். ஏன்னா உங்களுக்கு சுகர் பாத்து என்ற கேப்டன் அதுதான் மனைவி, சொல்லி யாரும் கேட்க மாட்டார்கள். கடைசியில் ஐஸ்க்ரீமையும் ஒரு கை பார்த்து விட வேண்டும்.
எல்லாம் முடிந்து ஸ்டம்ஸ் அதான் ஒரு லெமன் சோடாவுடன் மங்களம் பாட வேண்டும்.
அங்குள்ள சூப்பர்வைசர் அப்ப நம்மள ஒரு பார்வை பாப்பாரு பாருங்க, அடப்பாவி டி20 ல இந்தியன் டீம் ஃபர்ம்ல இருக்கும்போது விளையாடின மாதிரி நிதானம் காட்டி பைசா வசூல் பணுணிட்டானே என்பது போல் இருக்கும்.
இதைத்தான் அன்னிக்கே சொல்லிட்டாங்க,
பிராமணா போஜனப்ரியா என்று.
No comments:
Post a Comment