*இதற்கு ஒரு உண்மை கதையை கூறி விளக்கலாம் என்று நினைக்கிறேன்*
*சங்கர் அந்த மடத்திற்குள் நுழைந்து யாரையோ தேடிக்கொண்டிருந்த போது ஒரு முதியவர் அவனிடம் வந்து* என்ன வேண்டும் என்று கேட்டார். அவர் *பார்ப்பதற்கு ஒரு மிகவும் வயதானவராகவும், உடலில் தளர்வும், கண்களில் கனிவும்* உள்ளவராகவும் தெரிந்தார். அவர் ஒரு ஏழை *ப்ராஹ்மணன் என்று அவரை பார்த்தவுடன் புரிந்துகொண்டான். அவரின் ஆடைகள்* அழுக்காக இருந்ததால் சங்கர் அவரிடம் பேச சற்று அருவருப்புபட்டான், இருந்தாலும் அங்கு பதில் சொல்ல ஒருவரும் இல்லாததால் வேறு வழி இன்றி அவரிடம் பேசினான்.
என் அம்மாவிற்கு இரண்ய ஸ்ரார்த்தம் பண்ணனும் அதனால் இங்கே யாராவது பிராமணாள் கிடைப்பாளான்னு பார்க்க வந்தேன் என்றான்.
ஏன் இரண்ய ஸ்ரார்த்தம், ஹோமம் பண்ணி ஸ்ரார்த்தம் பண்ணவேண்டியது தானே என்றார் முதியவர்....(இரண்ய ஸ்ரார்த்தம் என்பது அரிசி வாழைக்காய், தக்ஷனை என்று கொடுத்து மிகவும் எளிமையாக ஸ்ரார்த்தம் செய்வது கூடியமட்டும் இரண்ய ஸ்ரார்த்தம் செய்வது ஏற்புடையது அல்ல என்பதால் அனைவரும் ஹோமம் செய்து சரியான முறையில் ஸ்ரார்த்தம் செய்வார்கள்)...
இல்லை, போன மாசம் தான் ஸ்ரார்த்தம் பண்ணவேண்டிய காலம் அது தப்பிடுத்து அதனால இந்த மாசம் இப்படி தான் பண்ணனும்ன்னு எங்க ஆத்து வாத்தியார் சொல்லிருக்கார்.
ஓ, உங்க ஆத்து வாத்தியார் சொல்லிருக்காறா? அவருக்கு ஸ்ரார்த்தம் தப்பி போன காரணம் தெரியுமா? இரண்ய ஸ்ரார்தத்தை அவரே வந்து பண்ணிவைக்க வேண்டியது தானே ? என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார் பெரியவர்.
இவர் கேள்விகளும் அவனுக்கு பிடிக்கவில்லை இவரையும் அவனுக்கு பிடிக்கவில்லை....
அவன் விறுக்கென்று நடையை கட்டினான்....
அம்பி ஒரு நிமிஷம் நில்லுப்பா என்றார் பெரியவர்......
அவன் அடுத்த நொடி அவன் காரில் ஏறிவிட்டான்....கார் ஸ்டார்ட் ஆகவில்லை, மக்கர் செய்தது....
அவர் மெல்ல ஊன்று கோலுடன் அவன் கார் அருகில் வந்தார்....
ஸ்ரார்த்தம் வேறு வழியில்லாமல் தப்பினால் இரண்யம் செய்யலாம், வேண்டுமென்றே தப்பினால் இப்படி இரண்யம் செய்து தப்பிக்க முடியாது....ஏற்கனவே ஒனக்கு வேலை போச்சு இன்னும் என்னவெல்லாம் போகவேண்டும்? இரண்டு நாட்களாக உன் மனைவி உன்னுடன் சண்டை போட்டுகொண்டு அவள் பிறந்தகத்திற்கு உன் குழந்தையுடன் சென்று விட்டாள், இந்த நிலையில் நீ இரண்யம் செய்தால் அவள் உன்னை விவாகரத்தே செய்து விடுவாள்....அதனால் நீ ஹோமம் செய்து ஸ்ரார்த்தம் செய் என்றார் பெரியவர்....
சங்கருக்கு பேச்சு மூச்சு இல்லை....ஏனெனில் அவர் அவன் வாழ்வில் நடந்ததையும் நடந்துகொண்டிருப்பதையும் நேரில் பார்த்தது போல சொல்கிறார்.
அவன் காரை விட்டு கீழே இறங்கினான்....அவர் காலில் விழுந்தான், மன்னிப்பு கேட்டான்.
அவர் சிரித்துக்கொண்டே எழுந்திருப்பா, எழுந்திரு என்று அவனைஎழுப்பிவிட்டார்....
எனக்கு ஏன் இப்படி வேலை போச்சு, எனக்கு ஏன் இப்படி என் மனைவியுடன் சண்டையானது திடீரென்று? எனக்கு ஒன்றும் புரியவில்லை....
ஏன் புரியவில்லை? புரியவேண்டுமே, புரிந்தால்தான் நீ துவிஜன் (இருபிறப்பாளான் )....நாம் செய்யும் தவறும், சரியும் அதற்கான பலன்களை நமக்கு அன்றாடம் தந்துகொண்டிருக்கின்றது, சில தவறுகளுக்கான தண்டனைகள் நமக்கு கிடைக்க காலம் ஆகிறது சிலது உடனே வந்துவிடுகிறது....அப்படி உடனே வந்தது தான் உன் வேலை போனதும், உன் மனைவி உன்னை விட்டு பிரிந்து போனதும் என்றார்....
நான் என்ன தவறு செய்தேன், புரியவில்லையே எனக்கு என்றான் சங்கர்....
நீ கடந்த மாதம் உன் அன்னையின் ஸ்ரார்தத்திற்கு முதல் வந்த அமாவாசைக்கு முந்தின நாள் எங்கே உணவருந்தினாய் என்றார் பெரியவர்....
அது வந்து அது வந்து என்று இழுத்தான் சங்கர்.....
ஆகாய விமானத்தில் தானே என்றார்?
ஆமாம் என்றான் சங்கர்.....நான் வெளிநாட்டில் இருந்து திரும்ப வந்துகொண்டிருந்தேன் அப்போது வேறு வழியில்லை பசியால் ஆகாய விமானத்தில் தரும் உணவை உண்டேன்....
உன் மனம் உன்னை எச்சரித்ததா?
ஆம் ஒரு நிமிடம் எச்சரித்தது ஆனால் என் பசி அந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்தது....நான் சாப்பிட்டேன்.....ஆனாலும் சைவ உணவை தானே சாப்பிட்டேன்
சரி பசியால் சாப்பிட்டாய், வந்து ப்ராயச்சித்தமாவது செய்திருக்கலாமே?
நாம் உண்ணும் உணவே நம் மதியை கட்டுப்படுத்துகிறது. அதனால் அடுத்த நாள் ஊர் திரும்பியதும் பரதேச பிரயாணம் செய்த பிராயச்சித்த சங்கல்ப ஸ்னானமும் நீ செய்யவில்லை, அமாவாசை தர்ப்பணத்தையும் நீ செய்ய செய்யவில்லை இவையெல்லாம் சாப்பிட கூடாத இடத்தில் சாப்பிட்டதால் வந்த புத்தி மாற்றம்.
நீ பசியால் சாப்பிட்டாய் புரிகிறது.....பசி எடுக்கும் போது எல்லாம் பறந்து போகும்....ஆனால் ஒரு நிதானத்திற்கு வந்த பிறகு இறைவனை நினைத்து பிராயச்சித்தம் செய்துவிடவேண்டும். அது தான் விவேகம்....
உன் புத்தி மாற்றம்....கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த கட்டமாக, உன் நித்ய கர்மாவான ஸந்த்யாவந்தனத்தையும் உன் சிவ பூஜையும் செய்ய விடாமல் செய்தது....
சந்தியாவந்தனம் தான் புத்தியை தெளிவாக வைத்திருக்கின்றது. ஒரு நாளைக்கு ஆயிரம் ஆயிரம் முடிவுகளை எடுக்கின்றோம். அத்தனையையும் சரியாக எடுக்க உதவுவது சந்தியாவந்தனம் தான். அது தான் நம் அறிவை தெளிவாக வைத்து அனைத்தையும் பகுத்து அறிந்து பார்க்க வைக்கிறது. உண்மையான பகுத்தறிவை ஸந்த்யாவந்தனமே தருகிறது.நீ ஸந்த்யாவந்தனத்தை விட்டதனால், உன் சிவ பூஜையும் விட்டுவிட்டாய், அதனால் உன் அன்னைக்கு செய்ய வேண்டிய ஸ்ரார்தத்தையும் உன் அலட்சியம் காரணமாக விட்டு விட்டாய்....இவையெல்லாம் உடனே உன்னை சுட்டுவிட்டது.....உன் வேலை போய், உன் மனைவி உன்னை விட்டு பிரிந்து போய் எல்லா வேதனையும் உடனே நீ அனுபவிக்கும் படி ஆனது என்றார்.....
இப்போது நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள் செய்கிறேன் என்றான் சங்கர்....
போ, போய் உன் அகத்து வாத்தியாரிடம் இந்த ஹோமம் பண்ணி சரியான முறையில் உன் அன்னைக்கு ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும் என்று கேள், அவர் உதவுவார்.....பணமும் படிப்பும் எல்லாம் தந்துவிடாது அம்பி....வாழ்வின் பல விஷயங்கள் இன்னும் நமக்கு புரியாத நிலையில் தான் இருக்கின்றது.....அதை புரிந்து கொள்ள ஆன்மீக முன்னேற்றம் அடைய வேண்டும்...அதற்கு அன்றாடம் இறைவனை தொழுதல் வேண்டும், புரிந்ததா என்றார் பெரியவர்
நீங்கள் யார், எனக்கேன் இப்படிப்பட்ட நிலையில் வலுவில் வந்து உதவுகிறீர்கள் என்றான் சங்கர்.....
நான் நீ செய்த சிவ பூஜையின் புண்ணிய பலத்தால் உனக்கு இந்த நிமிடம் அறிவுரை வழங்குகிறேன்.....மேலும் நீ நல்லவன் அதுவும் ஒரு காரணம் என்றார்.....
ஆனால் நீங்கள் யார் என்று சொல்லவில்லையே என்று சங்கர் கேட்பதற்குள்....
அவனை பார்த்து குறும்பாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் அந்த பெரியவர்.....
ஒரு நிமிடத்தில் அவர் மறைந்தும் போனார்.
( நம்மைப் பெற்ற தாய் தந்தையராக இருப்பினும் பித்துரு லோகத்திற்கு அவர்கள் சென்று விட்டால் அவர்களுக்கு தேவையான உணவை நீரை முறையாக அளிக்கத் தவறினால் அவர்கள் விடும் பெருமூச்சு போதும் நம்மை நம் வம்சத்தை தண்டிப்பதற்கு) .
*
*மஹா* *பெரியவா அடிக்கடி சொல்லும் வார்த்தை நித்ய கர்மாக்களை விடாதே. அது உன்னை எப்போதும் காப்பாற்றும். குருவே சரணம்* .*
No comments:
Post a Comment