இன்னைக்கு பொழுதுபோக்கு மற்றும் விடுமுறையை அனுபவிக்க சுற்றுலா செல்லும் பழக்கம் மக்களிடம் பெருகியுள்ளது.
வார இறுதி நாட்கள், திருவிழா காலங்கள், பள்ளி விடுமுறைனு எல்லா நாட்களும் சுற்றுலாவுக்கான நாட்களாக மாறியுள்ளது.
காரணம்...
சுற்றுலா தளங்களில் விற்கப்படும் பொருளின் விலை, உணவுகளின் விலை முதல், தங்குமிடம், கட்டண கழிப்பிடம் வரைக்கும் எல்லாவற்றிற்கும் பத்து மடங்கு விலை.
அப்படி அதிக விலை கொடுத்தாலும் தரமான உணவுகளோ, பொருட்களோ கிடைப்பதே இல்லை.
இது தவிர, சில சுற்றுலா தளங்களில் நடக்கும் அபத்தங்களுக்கும், கூத்துக்களுக்கும் அளவே இல்லை.
இதுல ஊர் பாகுபாடு, வியாபாரி பாகுபாடுன்னு எதுவுமே கிடையாது. அநியாய விலை வைக்குறதுலயும், மக்கள்கிட்ட பணத்த ஏமாத்தி சம்பாதிக்கிறதும் எல்லா சுற்றுலா தளங்களின் பொது விதி.
நான் ஒரு முறை #வேளாங்கண்ணி சென்றிருந்தேன்...
காலை 5.30 மணிக்கு நான் பேருந்து நிலையத்தில் இறங்கியதும் ஒரு நாலைந்து பேர் என்னை சூழ்ந்து விட்டனர்.
சார் ரூம் வேணுமா சார், ரூம் சார், எல்லாம் கிடைக்கும் சார்னு இடைவெளியே இல்லாம சொல்லிட்டு இருந்தாங்க.
அதுல ஒரு ஆளு, என் காது பக்கத்துல வந்து.. சார் எல்லா மேட்டரும் உண்டு சார். பிரச்சினை எதும் வராது சார்னு கொஞ்சம் அழுத்தி பேசுனாரு. அவரு சொன்னதுக்கு அர்த்தம் எனக்கு புரிஞ்சுட்டு. உங்களுக்கும் புரிஞ்சிருக்கும்.
வேளாங்கண்ணிக்கு பல நாடுகள், பல மாநிலத்துல இருந்து எல்லாம் குடும்பம் குடும்பமாக வர்றாங்க. அப்படி வர்றவங்க எதுக்கு வருவாங்க..?
நிம்மதியா சர்ச்சுக்கு போயி, மாதாவ கும்பிட்டுட்டு, கடற்கரையில் பொழுது போக்கணும்னு வர்றாங்க. அப்படிப்பட்ட ஊர்ல, வந்து இறங்குனதுமே ஒரு ஆளுகிட்ட என்ன மேட்டர் வேணும்னு கேக்குறதுலாம் என்ன மாதிரியான பொழப்பு?
இதே அனுபவம் எனக்கு #ஒக்கேனக்கல் மற்றும் #ராமேஸ்வரம் ஊர்களிலும் உண்டாயிருக்கு.
அதிலயும், எண்ணெய் மசாஜ் பண்ணி விடுறதுக்கு ஆளுக்கேத்த மாதிரி 200, 300, 500 ரூபா வாங்குவாங்க. அது போக எண்ணெய், சீயக்காய் வாங்குறதுக்கு தனி காசுன்னு நூறு ரூபாய்க்கு மேல் வாங்குவாங்க.
சரி, இவ்வளவு தண்டமா பணம் கொடுத்தும் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. ஆத்துல குளிக்குற பெண்களுக்கு உடை மாற்றும் அறை கூட இல்ல. பெயரளவுல இருக்குறதையும் யாரும் உபயோகிக்கிறது இல்லை.
மேட்டூர் டேம், ஆழியார் டேம்னு மக்கள் குளிக்குறதுக்காக போகும் எந்த சுற்றுலா தளங்களிலும் கழிப்பறை வசதி கூட உருப்படியா இருக்காது. ஆனா சோப்பு, எண்ணெய், ஷாம்புனு எல்லா பொருளுக்கும் டபுள் விலை.
மேட்டுர் டேம்ல குளிச்சிட்டு வந்தா, அங்க பக்கத்துல வரிசையா இருக்குற கடைங்கள்ல வாங்க வாங்கனு சாப்பிட கூப்பிடுவாங்க உள்ள போய் உட்கார்ந்தா, நாம கேட்காமலேயே மீன் குழம்பு, பொறிச்ச மீன்னு தனித்தனி விலை. சாப்பாடு விலை 70 ரூபா இருக்கும். அவங்க வச்ச குழம்பு மீனு, பொறிச்ச மீனுக்கு தனியா 110 ரூபா பில். என்ன கொடுமை சார் இது..?
இதுக்கெல்லாம் உச்சகட்டம்..
நெடுஞ்சாலை பயணங்கள்ல நாம் சாப்பிட இறங்கும் மோட்டல் கொள்ளை.
ராத்திரி நேரம் நாம அசந்து தூங்குறப்பதான் பஸ் ஏதாவது ஒரு நெடுஞ்சாலை மோட்டல்ல (ஹோட்டல்) போய் நிக்கும்.
ஒரு ஆளு பஸ்சுக்கு வெளியில இருந்து டம்மு டம்முனு தட்டுவாரு. அந்த நட்ட நடு ராத்திரியில் கல்யாண வீடு மாதிரி சீரியல் லைட்டு போட்டு , இரைச்சலா பாட்டு சத்தம் வேற.
தப்பித் தவறி நாம பஸ்ஸ விட்டு இறங்கி சாப்பிட போயிட்டோம்னா சோலி முடிஞ்சுது. நம்ம கையில , கழுத்துல கிடக்குறத வச்சுதான் பில்லு கட்டணும்.
(இந்த கொடுமைய எல்லாம் இந்தப் பதிவுல எழுதல, இதுக்கு தனியா ஒரு பதிவே எழுதலாம்னு இருக்கேன்.)
இப்படி நாம் சுற்றுலா செல்லும் எல்லா ஊர்களிலுமே தொட்டதுக்கெல்லாம் பணம், அதுவும் அநியாய விலை.
என் சொந்த ஊர் #திருச்செந்துர்ல ஆரம்பிச்சு, #திருநெல்வேலி , #கன்னியாகுமரி, #மதுரை , #திருச்சி, #சேலம் , #கோவை, #சென்னைனு எல்லா ஊரிலும் இதுதான் நிலை.
எனக்கு மட்டுமல்ல, இங்க வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்லும் அனைவருக்கும் இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும்.
சென்னையில் பெரு வெள்ளம் வந்த நேரத்துல, எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உயிர பணயம் வச்சு மக்களுக்கு உதவி செஞ்சவங்கள நாம இன்னைக்கும் பெருமையா பேசுறோம்.
ஆனா அதே வெள்ளம் வந்த நேரத்துல, எந்த பொருளும் கிடைக்காத நேரத்துல, பால், பிஸ்கெட், டீ, காய்கறிகள், பழங்கள், சாப்பாடுனு எல்லா பொருளுக்கும் அநியாய விலை வச்சு வியாபாரம் பண்ணாங்க. கிடைச்ச வரைக்கும் லாபம்னு நினைச்ச அந்த வியாபார மிருகங்களும் இருந்தாங்க.
எல்லா ஊரிலும் இப்படி அநியாய விலையில் வியாபாரம், தொழில் செய்யும் ஆட்கள் கிட்ட நான் சொல்ல விரும்புவது ஒன்று மட்டும்தான்..
உங்க ஊருல நீங்க எப்படி அநியாய விலை வச்சு வியாபாரம் பண்ணுறீங்களோ, அதே மாதிரி எல்லா ஊரிலும் வியாபாரிங்க இருக்காங்க.
என்னைக்காவது ஒருநாள் அந்த ஊர்களுக்கு நீங்க உங்க குடும்பத்தோட போகுறப்ப உங்களுக்கும் இதே நிலைதான்.
ஏன்னா இப்படிப்பட்ட வியாபாரிகள பொறுத்த வரைக்கும் லாபம் மட்டும்தான் நோக்கம் தவிர. மனிதம் அல்ல.
இதனால் கெட்டப்பெயர் அந்த வியாபாரிகளுக்கு மட்டுமல்ல, அந்தந்த ஊர்களுக்கும்தான். இதற்காக மக்கள் நிச்சயம் கவலைப் படவேண்டும்.
ஏனென்றால் ஒரு ஊரின் பெயர் கெடும் பொழுது, அது அந்த ஊர் மக்களையும் பாதிக்கும்.
ஒரு ஊர் என்பது வெறும் தனிப் பெயர் அல்ல. அது அங்கு வாழும் மக்களின் அடையாளம்
No comments:
Post a Comment