******************************
'60 களில் அதிகம் உடுப்பி ஹோட்டல் என்ற பெயர் இருக்காது. .......ஒரு பெயர் கூடவே காப்பி ஹோட்டல் என்றும் பிராமணாள் கபே என்றும் இருக்கும் .
சிமெண்ட் தரை ...சுத்தம் என்று சொல்ல முடியாது. நுழைவில் ஒரு கல்லாப்பெட்டி டேபிள் அதன் மேல் பில் குத்தி வைக்கும் ஒரு குத்தூசி, ஒரு ஹார்லிக்ஸ் மற்றும் ரகோடின் பாட்டில் /டப்பி இருக்கும் .பின்னால் சில சாமி படம், அதில் அழுது வடியும் ஸிரோ வாட்ஸ் பல்பு.. கதம்பம் பூ இருக்கும் . படம் இருத்தி வைத்த கட்டையில் ஊதுவத்தி சொருகி இருக்கும். சாப்பிட வருபவர்கள் உக்கார பெரும்பாலும் மர டேபிள், அதன் மேல் ஒரு வெள்ளை கல், உக்கார மர சேர் ,அவைகள் எல்லாம் விரைவில் உயிர் விட்டுவிடுவேன் என்று சொல்லாமல் சொல்லும் நிலையில் இருக்கும் .
ஒரு கண்ணாடி வைத்த ஷோ கேஸ் ...அதன் ஓரம் கொஞ்சம் வழி...அது வழியாக சமையல் அறைக்கு போக வேண்டும் .ஒரு மூலையில் கை கழுவும் இடம் ...வெகுவாய் அதை சுற்றி சுத்தம் இருக்காது.
ஷோ கேஸ் கீழே ஒரு பெரிய மர பென்ச் இருக்கும். அதில் மந்தார இலை இருக்கும். அல்லது ஷோ கேஸ் உள்ளே ஒரு மூலையில் இருக்கும் . அப்போதிருந்த மந்தாரை இலை பற்றி ஒரு காவியம் எழுத வேண்டும். அற்புத வாசனை இருக்கும் . அதில் கட்டித் தரும் பகோடா பொட்டலம் ,(பட்டிணம் பகோடா ) வாசம் வேறு லெவல். பார்சல் மசால் தோசை ,இந்த மந்தாரை இலையில் சுருட்டப்பட்டு, கூடவே கெட்டி தேங்காய் சட்னி ..ம்ம்ம் இன்றும் நினைவில். எப்போதாவது வாங்கி வந்தால், வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் பங்கு போட்டு -ஆளுக்கு ஒரு துண்டு - இப்படி கிடைத்ததே ஒரு அற்புதம் .
காலை நேரம் ஷோ கேசில் மெது வடை, இட்லி ஒரு அலுமினிய டிரேயில் இருக்கும். அப்போதெல்லாம் ஒரு தேங்காய் சட்னி மட்டுமே. கூடவே ஒரு சாம்பார் உண்டு . சின்ன வெங்காயம் சாம்பார் ,அதன் வாசம், சுவை ஒரு அற்புதம்.
உள்ளே சமையல் அறையில் பெரும்பாலும் ஒரு கனவு காட்சி போல புகை மண்டலம் இருந்து கொண்டே இருக்கும். அப்போதெல்லாம் கட்டை அடுப்புதான் . அவ்வப்போது, சை ..என்று தோசைக்கல் சத்தம் இருக்கும் . சமையலறை மூலையில் ஒரு மேடை .அங்கே ஒரு திரி ஸ்டவ் , அதில் பால் காய்ந்து கொண்டிருக்கும். ஒரு அலுமினிய ட்ரே ,அதில் பித்தளை டவரா செட் சிலது இருக்கும். ஒரு எவர்சில்வர் கிண்ணம் ...அது தேய்த்து பல யுகம் ஆகி இருக்கும். அதில் தான் சக்கரை இருக்கும். அதில் இருக்கும் ஸ்பூனில் பாதி சக்கரை ஈஷிக்கொண்டு இருக்கும் . கீழே தரையில் பித்தளை பில்டர். அதில்தான் காபி டிகாக்க்ஷன் இருக்கும். அதை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் கொட்டி வைத்திருப்பார்கள். எப்போதாவது ஹார்லிக்ஸ் , ஓவல் ,என்று ஆர்டர் வந்தால், டபரா செட் கெல்லா பெட்டி பக்கம் போய், முதலாளி ஏதோ தர்மம் போடுவது போல அதில் ஸ்பூனால் எடுத்து போடுவார். மறுபடி சமையலறை வந்து, அதற்கு பால் அபிஷேகம் ஆகி ,சக்கரை சேர்ந்து ஒரு ஆத்து , கூடவே டவராவில் கொஞ்சம் பால் ஊற்றி பின் டேபிளுக்கு வரும் .
பதினோரு மணிமேல் கொஞ்சம் மந்தம் தான். மதியம் சாப்பாடு உண்டு . பெரும்பாலும் அளவு சாப்பாடு தான். இலை போட்டு,கூட்டு பொரியல் எல்லாம் இரண்டாம் தரமும் உண்டு. சாதம் மட்டும் ஒரு பட்டை கூடவே ஒரு அப்பளம் ....பித்தளை டம்பளரில் குடிக்க தண்ணீர்.
பில் என்றால், உள்ளங்கை அளவில் ஒரு சிறு புத்தகம், வேட்டியை (அழுக்கு) மடித்து கட்டி, மேல் பட்டன் போடாது, காதில் சொருகிய பென்சில் ,..என்ன ,எத்தனை பேர் சாப்பிட்டாலும், அற்புதமாய் கூட்டி பென்சிலில் கிறுக்கி கொடுத்திடுவார். டாக்ட்ர் சீட்டை படிக்கும் பார்மசி ஊழியர் போல, கல்லாவில் இருப்பவர் ,சுலபமாய் இதை புரிந்து கொள்வார்.
மாலை மெதுபக்கோடா, மைசூர் போண்டா, தோசை ,கிச்சடி என்று ஒரு களை கட்டும். இந்த மெது பகோடா கூடவே கெட்டி தேங்காய் சட்னி ....அதுவும் போண்டா சூடாக இருக்க, ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்ற ஒரு உணர்வு ...இரவு சாப்பாடும் உண்டு .
இந்த வெஜிடேரியன் ஹோட்டல்களில் ஸ்வீட் கிடைக்கும். மைசூர் பாக் , பாதுஷா, அம்மி குழவி போல, குலாப் ஜாமூன் ...இவைகள் சில நாள் அந்த ஷோ கேசில் கொலு விருக்கும் . காலை வேலை சேமியா பாயசம் கிடைக்கும். எது எப்படி இவர்கள் மெனு லிஸ்டில் வந்தது என்று தெரியவில்லை ....அனால் கிடைக்கும். அவை எல்லாம் அன்று எங்களுக்கு ஒரு எட்டாத கனவு போல .கொஞ்சம் இன்னும் சற்று பெரிய ஹோட்டல்களில் பாஸந்தி கிடைக்கும்.
நான் இதை எழுத வந்ததின் முக்கிய காரணம் ..மந்தார இலை;. எங்கே பேய்க்கரும்பு இனிக்கும் என்று பட்டினத்தார் தேடினாரோ, நானும் அது போல ,அந்த வாசம் உள்ள மந்தார இலையை இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன் . இன்னொன்று, அந்த கண்ணாடி ஷோ கேஸ் ....அதன் உள்ளே ஒரு தகர டப்பா அதில் இருந்து வரும் நூல், ஒரு திரௌபதி சேலை போல வந்து கொண்டே இருக்கும்.
என்ன சாபிடறீங்க ? என்று கைவிரல் எல்லாம் அந்த பித்தளை டம்ளரில் நனைத்து ,"நங் " என்று வைத்துவிட்டு, "ஒரு மாசால் தோசை " என்று குரல் கொடுக்க, உடனே ஒரு வாழை இலை உங்கள் டேபிளுக்கு வந்து விடும் .
இவை எல்லாம் இன்று இல்லை; அவைகள் எல்லாம், நம் வீட்டில் இருந்த வயதான பெரியவர்கள் இல்லாது போனது போல ,காணாது போய்விட்டது. அவர்கள் இல்லை என்றாலும், அவர்கள் பற்றிய நினைவு இன்னும் உள்ளே இருக்கிறது, இந்த , அந்த நாட்கள் ஹோட்டல்கள் போல .ஒரு மறக்க முடியாத சுவை அன்று அந்த உணவில் இருந்தது ..அந்த மந்தார இலை வாசனை போல. ஒரு தக்காளிக்காய் பொரிச்ச கூட்டு ...தண்ணியாகதான் இருக்கும். ஆனால் அந்த சுவை இன்னும் தொண்டையில் இருந்து கொண்டு இருக்கிறது . பொடி போட்ட கத்தரிக்காய் பொரியல், சாம்பார், ரசம் எல்லாமே ஒரு அற்புதம்.
பின்னால் கால போக்கில் சமையலே படிப்பாக கொண்டு வேலையும் அதன் தொடர்பாய் ஆகிட, இப்போதும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் முப்பது வருடமாய் பல நூறு கல்யாணம் செய்து கொடுத்த அற்புத அனுபவம் அமைந்தது போல, வாழ்வில் , அந்த பழைய கால ஹோட்டல்களின் நினைவுகள் என்றுமே ஒரு அற்புதம் .
No comments:
Post a Comment