Sunday, July 2, 2023

#மக்கள் திலகத்துட‌ன் அவ‌ர‌து ச‌ம்ப‌ந்தியும், இய‌க்குன‌ருமான கே. ச‌ங்க‌ரின் அனுப‌வ‌ங்க‌ள்#

 M.G.R. சொந்தமாக மூன்று படங்களை தயாரித்தார். ‘நாடோடி மன்னன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய இரண்டு படங்களை அவரே இயக்கினார். மற்றொரு படமான ‘அடிமைப் பெண்’ படத்தை அவர் இயக்கவில்லை. தானே சிறந்த இயக்குநராக இருந்தும் தனது சொந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை வேறு இயக்குநருக்கு கொடுத்தார். அந்தப் பெருமையைப் பெற்றவர் இயக்குநர் கே.சங்கர்.

‘நல்லவன் வாழ்வான்’ படப்பிடிப்பு மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்தபோது, முதன்முதலாக எம்.ஜி.ஆரை சந்தித்தார் கே.சங்கர். தான் பணியாற்றிய படங்களைப் பற்றி கே.சங்கர் கூறினார். ஒவ்வொரு படத்திலும் சிறந்த காட்சிகளையும் ‘ஷாட்’களையும் குறிப்பிட்டு எம்.ஜி.ஆர். பாராட்ட, இந்த அளவுக்கு தனது படங்களை கவனித்திருக்கிறாரே என்று வியந்துபோனார் கே.சங்கர்.
ஜி.என்.வேலுமணி தயாரிப்பில் தான் நடிக்கும் ‘பணத்தோட்டம்’ படத்தை கே.சங்கர் இயக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பினார். சங்கர் அதுவரை எம்.ஜி.ஆர். பாணியிலான படங்களை இயக்கியதில்லை. இந்த தயக்கத்தால், கதையை காரணம் காட்டி படத்தை தட்டிக் கழிக்க விரும்பினார். ஆனால், கதையை மாற்றும்படி எம்.ஜி.ஆர். கூறிவிட்டதால், கள்ள நோட்டு பிரச்சினையை மையமாக வைத்து 18 நாட்களில் தயாரிக்கப்பட்டது ‘பணத்தோட்டம்’ படம்.
‘‘எம்.ஜி.ஆர். படங்களில் வேலை செய்தால் நிறைய குறுக்கீடுகள் இருக்கும். தொந்தரவுகள் இருக்கும் என்று படவுலகில் பயமுறுத்தியிருந்தார்கள். ஆனால் அது உண்மையல்ல. அவர் நல்ல ரசிகர். ஒவ்வொரு காட்சியையும் கேமரா கோணத்தில் கண்டு மகிழ்வார்’’ என்று சங்கர் பின்னர் தனது அனுபவத்தைக் குறிப்பிட்டார். ‘பணத்தோட்டம்’ பட வெற்றிக்குப் பின், சங்கரிடம் எம்.ஜி.ஆர். , ‘‘என் படத்தை டைரக்ட் செய்யத் தயங்கினீர்களே? இப்போது என்ன சொல்கிறீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு சங்கரின் பதில், ‘‘என்னை மன்னித்து விடுங்கள்.’’
பின்னர், ‘கலங்கரை விளக்கம்’, ‘சந்திரோதயம்’, ‘குடியிருந்த கோயில்’, ‘உழைக்கும் கரங்கள்’, ‘பல்லாண்டு வாழ்க’, ‘இன்று போல் என்றும் வாழ்க’ என்று இருவர் கூட்டணியில் வெற்றிப் படங்கள் ப‌ல வந்தன. தனது சொந்தத் தயா ரிப்பான ‘அடிமைப் பெண்’ படத்தை இயக்கும் வாய்ப்பை சங்கருக்கு எம்.ஜி.ஆர். கொடுக்கும் அளவுக்கு இருவரின் நட்பும் பலப்பட்டது. படத்தை ஜெய்ப்பூரில் எடுக்கலாம் என்று யோசனை சொன்னதே சங்கர்தான். அதை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார்.
சாதாரணமாகவே எம்.ஜி.ஆர். செலவு செய்வார். தனது சொந்தப் படம் என் றால் கேட்கவே வேண்டாம். படத்துக்காக மட்டுமின்றி, படப்பிடிப்புக் குழுவினருக்கும் எந்த குறையும் வைக்காமல் தாராளமாக செலவு செய்தார். பாலைவனப் பகுதியில் குடிநீர் கிடைப்பது கஷ்டம் என்பதால் ‘கோக கோலா’ வேனையே கொண்டுவந்து நிறுத்தினார்.
‘‘ஜெய்ப்பூர் அரண்மனையில் ஆறா வது மாடியில் உள்ள மன்னரின் அறையில் காட்சிகளை படமாக்கினால் நன்றாக இருக்கும். ஆனால், தரையில் உள்ள விரிப்புக்கு பதிலாக சன்மைக்கா பதித்து காட்சிகளை எடுத்தால் சிறப்பாக இருக்கும்’’ என்பது சங்கரின் யோசனை. சன்மைக்கா அறிமுகமான சமயம் அது. எம்.ஜி.ஆர். உடனே, டெல் லிக்கு ஆள் அனுப்பி விமானம் மூலம் சன்மைக்காவை வரவழைத்தார். அந்த நாளிலேயே அதன் மதிப்பு ரூ.40 ஆயிரம். படத்தின் காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, அரண்மனையில் தன் செலவிலேயே சன்மைக்காவை பதித்துவிட்டார் எம்.ஜி.ஆர்.! ‘ஆயிரம் நிலவே வா…’ பாடலின் இறுதியில் வரும் காட்சிகள் அந்த அறையில்தான் படமாக்கப்பட்டன.
‘கலங்கரை விளக்கம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, தன் மகளுக்கு வரன் பார்த்து வரும் விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் சங்கர் சொன்னார். ‘‘கல்யாண வயதில் உங்களுக்கு மகள் இருக்கிறாளா? கொஞ்சம் இருங்கள்’’ என்று கூறிய எம்.ஜி.ஆர்., உடனே தனது அண்ணன் சக்ரபாணிக்கு போன் செய்து, ‘‘சங்கரின் பெண்ணை நம்ம ராமுவுக்கு (சக்ரபாணியின் மகன் ராம மூர்த்தி) பார்த்தால் என்ன?’’ என்று கேட்டார். சங்கருக்கோ தயக்கம் ஒருபக்கம், மகிழ்ச்சி மறுபக்கம். ‘‘சார் ஏன் அவசரப் படுறீங்க?’’ என்றார்.
அதற்கு, ‘‘ராமுவை நான்தான் வளர்த்து படிக்க வைத்தேன். அவன் என் பையன். அவனுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். சங்கர் அவரது சம்பந்தியானார். ஐயப்ப பக்தரான சங்கர், ‘‘எம்.ஜி.ஆர். படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது மட்டு மின்றி, அவருக்கே சம்பந்தியாக என்னை ஆக்கியது ஐயப்பனின் கருணை’’ என்று சிலிர்த்துப் போனார்.
‘இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மணிப்பாலில் நடந்தது. அந்த சமயத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயி லுக்கு முதன்முதலில் எம்.ஜி.ஆரை சங்கர் அழைத்துச் சென்றார். கோயிலுக்கு பின்புறம் சங்கரபீடம் இருக்கிறது. அங்கே தான் ஆதிசங்கரர் தவம் செய்து பின்னர், மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்தார். சிறப்பு அனுமதி பெற்று சங்கரபீடத்தின் உள்ளே எம்.ஜி.ஆர். தனிமையில் தியானம் செய்ய சங்கர் ஏற்பாடு செய்தார். ஒரு மணி நேரத் துக்கு பின் வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ‘‘நிம்மதியாக இருந்த இந்த தருணத்தை வாழ்க்கையில் மறக்கவே முடியாது’’ என்று கூறியிருக்கிறார்.
சங்கர் வீட்டில் மற்றொரு திருமணத்தின்போது, அவருக்கு பண உதவி செய்வதாக கூறியவர்கள் கடைசி நேரத்தில் கைவிட்டனர். திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது. அது முடிந்தவுடன் வேலை செய்தவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருந்தார் சங்கர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., மணமக்களை வாழ்த்திவிட்டு சங்கர் கையில் இரண்டு பாக்கெட்களை திணித்தார். அவற்றில் சங்கருக்குத் தேவையான பணம் இருந்தது.
‘‘மகாபாரதக் கர்ணன்கூட கேட்டவர்களுக்குத்தான் கொடுத்தான். கேட்காமலேயே
மற்றவர்களுக்கு கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.!’’
மேலே உள்ள ப‌ட‌ம் ச‌ங்க‌ர் இய‌க்குவ‌தாக இருந்து பின் த‌லைவ‌ர், முத‌ல்வ‌ரானதால் கைவிட‌ப்ப‌ட்ட "வெற்றிப்பாதை"யில் க‌ராத்தே வீரராக எம்ஜிஆர் ந‌டிக்க இருந்து பின்ன‌ர் கைவிட‌ப்ப‌ட்ட‌து.
இப்ப‌ட‌ம் தெலுங்கில் என்.டி.ஆர், ல‌தா ந‌டிக்க கே.ச‌ங்க‌ர் இய‌க்க‌த்தில் சிருங்கார‌ ராமுடு என்ற‌ பெய‌ரில் வெளியாகி வெற்றி பெற்ற‌து..
May be an image of 2 people and people performing martial arts
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...