1954ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். ஆனால் அவர் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லை. அதனால் ஆறு மாத காலத்திற்குள் அவர் ஏதேனும் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். அல்லது மேலவை உறுப்பினராக ஆக வேண்டும்.
காமராஜருக்கு குறுக்கு வழியில் மேலவை உறுப்பினராகி முதல்வராவதில் விருப்பம் இல்லை. மக்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டே முதல்வராக பதவி வகிக்க வேண்டும் என விரும்பினார்,
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினராக அப்போது இருந்த திரு அருணாசலம் என்பவர் காமராஜருக்காக பதவி விலக முன்வந்தார். இடைத்தேர்தல் வந்தது.
அவருக்கு தொடர்பே இல்லாத குடியாத்தம் தொகுதியில் காமராஜர் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கோதண்டராமன் என்பவர் போட்டியிடுகிறார். இருவரிடையே கடுமையான போட்டி.
அப்போது அந்த தொகுதியில் ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அந்த தொகுதி மக்கள் காமராஜரிடம் கோரிக்கை விடுக்கிறார்கள். காமராஜர் அப்போது முதல்வர். சரி என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் மக்கள் ஓட்டினை அள்ளியிருப்பார்.ஆனால் அவர் அப்படிச்செய்யவில்லை. அப்படியெல்லாம் செய்யமுடியாது என மறுத்துவிட்டு வருகிறார்.
அவருடன் இருந்தவர்கள் “என்ன அய்யா, இப்படி செய்துவிட்டீர்கள். செய்கிறேன் என்று ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா? அவர்களது கோரிக்கை நியாயமானதும் கூட எல்லோரும் நமக்கே ஓட்டு போட்டிருப்பார்களே…” என்று குறைபட்டுக்கொண்டனர்.
அப்போது காமராஜர் ”மக்கள் வைத்த கோரிக்கை நியாயமானதுதான், தேர்தலுக்கு பிறகு செய்து கொடுத்துவிட வேண்டியதுதான். ஆனால் அதைச் சொல்லி நான் ஓட்டு கேட்கக் கூடாது. நான் இதைச்சொல்லி வாக்கு கேட்டால், எதிர்கட்சி வேட்பாளர் என்ன சொல்லி வாக்கு கேட்பார்?அவரிடம் அதிகாரமில்லையே? நான் எனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகத்தானே அமையும். இது எப்படி ஜனநாயகமாகும்? “ என்று சொல்லி மறுத்துவிட்டார்.
காமராஜர் 64344 வாக்குகள் பெற்றார். கோதண்டராமன் 26132 வாக்குகள் பெற்றார். காமராஜர் வெற்றி பெற்று முதல்வரானார்,
இன்று எவ்வளவோ வாக்குறுதிகள். இலவசங்கள். அன்பளிப்புகள். வெற்றி பெற எல்லாவித சாகசங்கள். என்ன சொல்ல?
No comments:
Post a Comment