Tuesday, July 11, 2023

பஞ்சு அருணாச்சலம் - அன்னக்கிளி - இளையராஜா .

 நம்மில் பலருக்கு பரிட்சயமான அல்லது மிகவும் பிடித்த பெயர்கள் இவை.

தமிழ் திரையிசை வரலாற்றில், 1976ல் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய பெயர்கள் என்றும்கூட சொல்லலாம்.
நல்லவேளையாக இளையராஜா என்னும் ஓர் இசைமேதை நமக்குக் கிடைத்துவிட முக்கிய காரணமாக இருந்தவர், பஞ்சு அருணாசலம் அவர்களே ஆவார்.
ஆம், ‘நல்லவேளை’யாகத்தான் நமக்கு இளையராஜா என்னும் இசைமேதை கிடைத்தார்.
காரணம்,
இளம் இளையராஜா அவர்கள் திரைத்துறையில் அறிமுகமாவதற்குப் பல தடங்கல்கள் இருக்கவே செய்தன.
பஞ்சு அருணாசலம் அவர்கள் மட்டுமே புது இசையமைப்பாளரை (ராசய்யா-ராஜா-இளையராஜா) எப்படியாவது தன் தயாரிப்பில் உருவாகும் (அன்னக்கிளி) படத்தில் அறிமுகம் செய்து விடுவது என்று பிடிவாதமாக இருந்தார்.
அவரது தம்பியின் பெயரில் தயாரிப்பு கம்பனி நடத்திக் கொண்டிருந்தார், பஞ்சுசார். அவரது தம்பிக்கு இவ்வாறு புதுமுகத்தை அறிமுகப் படுத்துவது அறவே பிடிக்கவில்லை. காரணம் அந்தக் காலக்கட்டத்தில் அதாவது, 1974, 1975, 1976- களில், கன்னட திரைப்பட இசையமைப்பாளர் ‘விஜயபாஸ்கர்’ அவர்கள் தமிழ்திரையிசைத்துறையில் நுழைந்து கலக்கிக் கொண்டிருந்த சமயம் அது.
விஜயபாஸ்கர் போன்றோர் இருக்கும்போது ஏன் புதுமுக இசையமைப்பாளரை தங்கள் படத்திற்கு ‘ரிஸ்க்’ எடுத்து அறிமுகப் படுத்த வேண்டுமென தன் அண்ணன் பஞ்சுசாரிடம் என்னென்னவோ சொல்லி இளையராஜா அவர்களின் அறிமுகத்தைத் தடுக்க அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டார், பஞ்சுசாரின் தம்பி. ஆனாலும்,
தம்பியின் நச்சரிப்பு மற்றும் சிலரின் வற்புறுத்தலின் காரணமாக, இளையராஜா அவர்களை சோதிப்பதற்காக, அன்னக்கிளி பாடல்கள் அனைத்தையும் ஒத்திகை (rehearsal) பார்ப்பதற்காக, ஒரு கல்யாண மண்டபம் ஒன்றைப் பிடித்து அங்கே ரெக்கார்டிங் ஒத்திகை நடைபெற்றது.
முதல் பாடலுக்காக இளையராஜா அவர்கள் ஒன், டு, த்ரி சொல்ல, அந்த நேரத்தில் சொல்லி வைத்தாற்போல் ‘பவர் கட்’ ஏற்பட்டுவிட்டது. கூட்டத்தில் சலசலப்பு, ‘நல்ல சகுனம்தான் போ’,
‘ரெக்கார்டிங் ஆனா மாதிரிதான் போ’, என்றெல்லாம் முணுமுணுக்க ஆரம்பித்தனர். அப்போதும்,
சரி, பாடல்களின் பகுதிகள் துண்டு துண்டாக இசையமைத்து ஒத்திகை பார்த்த பிறகு, பிழைகள் எல்லாம் சரி பார்க்கப்பட்டு, முழு பாடலுக்குமான இசையமைப்பு நடத்தப்பட்டு டேப்ரெக்கார்டரில் பதிவு செய்யப்பட்டது.
முடிவில் அவ்வாறு பதிவு செய்யப்பட்ட பாடலைப் போட்டுக் கேட்பதற்காக டேப் ரெக்கார்டரின் ‘ப்ளே’ பட்டனை அழுத்தினால் ஒரு சத்தமும் வரவில்லை. பாடல் பதிவின்போது டேப்ரேக்கார்டரை ‘ஆன்’ செய்யவில்லையா அல்லது பழுது இருந்ததா தெரியவில்லை. பாடல் பதிவாகவில்லை. முகம் சுளித்தனர் ‘இளையராஜா வேண்டாம்’ என்று சொன்ன கோஷ்டியினர். எனினும்
இப்படியாக,
பஞ்சு அருணாசலம் என்னும் ஒரு தீர்க்கதரிசி எதற்கும் அசைந்து கொடுக்காமல், ‘ராஜா’ என்ற பெயரை மாற்றி ‘இளையராஜா’ என்ற புதுப் பெயரில், அன்னக்கிளி படத்தில் நம்பிக்கையுடன் அறிமுகம் செய்துவைத்தார்.
இளையராஜா அவர்களும் துவண்டுவிடாமல் பாடல்களை இசைக் கலைஞர்களை வைத்து மீண்டும் பதிவு (re-recording) செய்யச் செய்தார்.
இவ்வாறான தடங்கல்களைக் கடந்து அன்னக்கிளி வெளிவந்தது.
அப்போதெல்லாம் ஆனந்த விகடன் வார இதழில் வரும் ‘விகடன் சினிமா விமர்சனம்’ வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதில் ‘அன்னக்கிளி’ படத்தின் ‘சினிமா’ விமர்சனத்தில் படத்தில் உள்ள எல்லா அம்சங்களையும் விமரசித்த அந்த குழுவினர், இளையராஜா அறிமுகம் பற்றியோ, அவரது இசை அல்லது பாடல்கள் பற்றியோ ஒரு வார்த்தைகூட இல்லாதபடி அப்படத்தை விமரசித்திருந்தனர்.
இது பலரை வியப்பில் ஆழ்த்தியது.
பார்த்தீர்களா இளம் இளையராஜா அவர்களுக்கு எவ்வளவு தடைகள் (discouragements) என்று.
அதனால்தான் சொன்னேன், ‘நல்லவேளை இளையராஜா நமக்குக் கிடைத்துவிட்டார்’, என்று.
இன்று, நமக்கான இசைக்காகவே ஓர் இளையராஜா அதிர்ஷ்டவசமாக நமக்குக் கிடைத்த மேற்சொன்ன நிகழ்வுகள்பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போது, என்னில் தோன்றிய எண்ணங்கள் இதன்கீழ்:
1). முதல் தடங்கல் ‘பவர் கட்’ என்றாலும் இன்று இளையராஜா என்பவர் இசையில் ஒரு ‘பவர்ஃபுல் மேஸ்ட்ரோ’ ஆவார்.
2). அவரது முதல் இசை ஒத்திகை நடந்த இடம் கல்யாண மண்டபம்.
இன்று எந்த கல்யாண மண்டபத்தில் விசேஷம் என்றாலும், அங்கு ஒலிபெருக்கியிலோ அல்லது இசைக் கச்சேரியிலோ மிகுதியாக பாடப்படுவது இளையராஜா இசையில் வந்த பாடல்களே.
3). ஒரு நிகழ்வில் ரெக்காரடிங் சமயத்தில் டேப் ரெக்கார்டரில் பழுது ஏற்பட்டாலும்,
ஒரு காலக்கட்டத்தில், நினைத்தவுடன் இளையராஜா இசையில் பாடல்களைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே டேப் ரெக்கார்டர்களை மக்கள் வாங்க ஆரம்பித்தார்கள்.
கேசட்டுகள் மற்றும் டேப்ரெக்கார்டர்களின் விற்பனை தமிழகத்தில் அதிகமானது இளையராஜா இசையினால்தான் என்றால் அது மிகையாகாது.
4). இவைபோலவே re-recording விஷயத்திலும்.
அவர் ‘ரீரெக்கார்டிங்’ செய்வதில், அதாவது படங்களுக்கு பின்னணியிசை அமைப்பதிலும் இளையராஜா அவர்கள் ‘நம்பர் ஒன்’ ஆகத்தானிருக்கிறார்.
5). விகடன் இதழில் அவரது முதல் படத்தின் விமர்சனத்தில் அவரைப் பற்றியோ, அவரது இசைபற்றியோ ஒரு வார்த்தைகூட இல்லையென்றாலும், இன்று ஒவ்வொரு பத்திரிக்கையும், அவரது பெயரை பிரசுரிப்பதில் பெருமைகொள்கின்றன.
பதிவு நீண்டு கட்டுரையாகிவிட்டது. இருந்தாலும் உங்களுடன் பகிர்ந்துவிட வேண்டும் என்பதற்காக, இந்தப் பதிவு 🙏.
இப்படிக்கு,
இளையராஜா இசைப்பிரியன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...