கண்ணியத் தோரணை, கர்வம் கொண்ட கூரிய பார்வை இவற்றின் அடையாளம் ‘சிவாஜி கணேசன்’ என்ற ஏழு எழுத்துக்கள். வி.சி. கணேசன் என்ற துடிப்பான இளைஞன் தனது நடிப்பாற்றலின் திறனால், உலகமெங்கும் வியாபித்திருக்கும் தமிழரின் மனங்களில், செதுக்கிய எழுத்துக்கள்.
அவர் நடித்த அத்தனை படங்களிலும், எதோ ஒரு வகையில் மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, தாக்கத்தை உண்டாக்கினார் சிவாஜி கணேசன். ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற திரைப்படக் கதாபாத்திரம் தான், அப்படி ஒருவர் இருந்தார் என்பதை இன்றும் நமக்கு நினைவூட்டுகிறது. கட்டபொம்மன் இப்படித்தான் இருப்பான் என்ற பிரமிப்பை உண்டாக்கியது. கர்ணனின் தாழ்வு மனப்பான்மையும், அதை மறைக்க அவன் காட்டும் வீரமும், கம்பீரமும், கொடைத் தனமும் சிவாஜி கணேசன் அன்றி அறிந்திருக்க மாட்டோம். இன்று வரை கர்ணனாக எத்தனையோ பேர் நடித்திருந்தாலும், அவர் காட்டிய கர்ணன் தான் நம் கண் முன் நிற்கிறான்.
திருவிளையாடல்’ சிவன் இப்படித்தான் பல அவதாரங்களில் உலகில் நடமாடுவாரோ என்று நம்மை நினைக்க வைத்தது. நமக்கு இப்படி ஒரு அண்ணன் கிடைப்பானா என்று ‘பாச மலரும்’, இப்படி ஒரு தோழன் கிடைப்பானா என்று ‘ஞான ஒளியும்’, நாட்டுக்கு இப்படி ஒரு காவலதிகாரி இல்லையே என்று ‘தங்கப் பதக்கமும்’, இன்னும் எத்தனையோ பாத்திரங்களில் சராசரி மனிதனைத் தன் நடிப்பின் மூலம் ஏங்க வைத்தவர் சிவாஜி கணேசன் எனும் மாபெரும் நடிகர்.
இன்று ‘பிரமாதம்’ என்று நாம் ஆர்ப்பரிக்கும் அனைத்தையும் தனது வெகு சில படங்களிலேயே நடத்திக் காட்டியவர் அவர். ஒன்பது வேடங்களில் நவரசத்தைக் காட்டி அசத்தினார்.
தொழு நோயினால் பாதிக்கப்பட்ட கதா பாத்திரத்தில் படல் படலாகப் பூசப்பட்டிருக்கும் ஒப்பனை மெழுகை மீறித் தெரியும் உணர்ச்சியை வேறு எந்த நடிகரும் இதுவரை காண்பித்ததில்லை. உயர்தரத் தொழிலதிபரின் நடை உடை பாணிகளை, தன் சரீர பருமனையும் கடந்து வெளிக் காட்டிய ‘புதிய பறவை’ கோபாலை மிஞ்சும் ஸ்டைல் எவரும் செய்ததில்லை.
இப்படிப் பல படங்கள்; பல முதன் முறைகள்; பல சாதனைகள். அந்நாளில் இருந்த பத்திரிகைகள் அவரை ஒரு நடிகனாகப் பார்ப்பதை விட்டு விட்டு, அவரைத் தனி மனிதனாக, அரசியலுடன் சம்பந்தப்படுத்திப் பார்த்து இந்த அற்புத நடிகனின் திறமைகளை கவனித்துப் பாராட்டத் தவறி விட்டது.
இன்றைய தலைமுறையினருக்கு அவரின் பல சாதனைகள் தெரியாமல் போய் விட்டது.
இரண்டு, மூன்று ஆண்டுகள் உடலை வருத்தி, உருவத்தை மாற்றி, இருபது நாட்கள் ஓடக் கூடிய படத்தை கொடுத்தவரல்ல அவர். பிரமாதமான முக ஒப்பனைகள் இன்றி, ஒரே உடல் தோற்றத்துடன் தன் நடிப்பின் மூலமே பாத்திரப் பரிமாணங்களைக் காட்டியவர். சில படங்களில் ஒரு சிறிய ஒப்பனையுமின்றி நடித்தவர்.
புகைப் பழக்கமுள்ள கதாபாத்திரங்களில் அவர் காட்டிய ஸ்டைல் தான் எத்தனை; ‘போலீஸ்’ என்று சராசரி பாத்திரங்களிலும், ‘பொலிஸ்’ என்று படித்த, மிடுக்கு நிறைந்த பாத்திரங்களிலும் அவரின் உச்சரிப்புப் பிரயோகங்கள் என்ன! கோவை வட்டார மொழி பேசிய முதல் நடிகரும் அவர் தான்!
தமிழின் ஒரு எழுத்தைக் கூட பிறழாமல் உச்சரித்த ஒரே நடிகரும் அவர்தான். கௌரவம் படத்தில் உடன் நடித்த ஒய்.ஜி. மகேந்திரன் ‘அந்தக் காலத்தில் செட்டிங் செலவுகளை மிச்சப்படுத்த இரட்டை வேடத்தில் நடித்த சிவாஜியைக் காலையில் மகன் பாத்திரத்தையும், மதியத்துக்கு மேல் தந்தை பாத்திரத்தையும் நடிக்கச் செய்வார்கள்.
காலையில் சிற்றுண்டி இடைவேளையின் போது ‘மகன்’ பேசும் அமைதியான, பயத்தினால் பாதிச் சொல்லைக் கூட விழுங்கும் தொனியிலேயே மற்றவர்களுடன் உரையாடுபவர், மதிய உணவு இடைவேளையில் தந்தை வேடத்தைப் போட்டுக் கொண்டு வந்து ‘தந்தை’ பாத்திரம் பேசும் அதே மிடுக்குப் பாணியில் அனைவருடனும் பேசுவார். படப்பிடிப்பு இல்லாத போதும், தான் நடிக்கப் போகும் பாத்திரத்தில் கவனம் வைத்திருப்பார் அவர்’ என்று குறிப்பிடுகிறார்.
ஒரே ஆண்டில் அவர் கதாநாயகனாக நடித்த பல படங்கள் வெளியானதைப் பற்றி அறிவோம். ஆனால் காலை, மாலை இரவு என மூன்று முரண்பட்ட கதாபாத்திரங்களில், மூன்று வேளையும் நடித்தவர். காலை 8 முதல் 1 மணி வரை கர்ணன், 2 மணி முதல் 6 வரை பச்சை விளக்கு இரவு 9 மணிக்கு மேல் ஆண்டவன் கட்டளை என்ற படங்களில் நடித்தாலும் மூன்றுமே வெள்ளி விழாப் படங்களாக அமைந்தன.
அந்த மூன்று பாத்திரங்களில் வேறுபாட்டை நினைத்துப் பாருங்கள். வீரமான பாத்திரம் ஒன்று; குடும்பச் சிக்கல்களை எதிர் நோக்கும் சமூகப் பாத்திரம் ஒன்று; எல்லாவற்றையும் வெறுத்துத் தேடல் கொண்ட பாத்திரம் ஒன்று. ஒவ்வொன்றிலும் எத்தனை வீச்சு!
அது மட்டுமல்லாமல் ஏழு முறை, ஒரே நாளில் அவரது இரண்டு படங்கள் வெளியாகி இரண்டும் நூறு நாட்களைத் தாண்டியதுண்டு. ‘சொர்க்கம் – எங்கிருந்தோ வந்தாள்’ ; ‘ஊட்டி வரை உறவு – இரு மலர்கள்’ என வசூல் சாதனைப் படங்களும் அதில் அடங்கும். ஒரு சமயத்தில் சென்னையில் மட்டும் அவரது 20 படங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
அவர் நடிப்பின் மீது கொண்டிருந்த பக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு – சிவாஜி கணேசனின் குடும்பத்தோடு பல தலைமுறைகளாக நட்பு பாராட்டி வரும் குடும்பத்தைச் சார்ந்த நடிகர் மோஹன்ராம் நடிகர் திலகத்துடன் உரிமையோடு பழகக் கூடியவர்.
அவர் ஒரு முறை ‘அப்பா நீங்க எப்ப ரிடையர் ஆகப் போறீங்க?’ என்று கேட்ட பொழுது சிரித்து, பின் சில வினாடிகள் யோசித்து ‘நான் என்னைக்கு ஷூட்டிங்குக்கு லேட்டா போறேனோ, அன்னைக்கு ரிடையர் ஆயிடுவேண்டா’ என்று சொல்லி விட்டு எழுந்து நடந்து சென்றவர், நின்று திரும்ப வந்து ‘அன்னைக்கு நான் செத்துடுவேண்டா’ என்றாராம்!!
நடிப்புக் கலையின் மீது அவர் கொண்டிருந்த பற்றையும், காதலையும் உலகம் உணரும் வண்ணம் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment