Wednesday, December 25, 2019

ஜெ., சொத்து முழுதும் என்னுடையதே! சொந்தம் கொண்டாடுகிறார் சசிகலா.

 'மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் முழுவதும் என்னுடையது தான்' என, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் உள்ள, சசிகலா சொந்தம் கொண்டாடுகிறார். இது தொடர்பாக, சசிகலா அளித்த விளக்கம் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வருமானவரித் துறை தாக்கல் செய்த அறிக்கை, மிக தாமதமாக கசிந்துள்ளது. தினம் தினம் வெளியாகும் விபரங்கள் அனைத்தும் உண்மை தான் என்பதால், வருமான வரித் துறையும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் உள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், சசிகலா குடும்பத்தினர், உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட, அவருக்கு தொடர்புடைய, 187 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை, 2017 நவம்பரில் நடந்தது.

ரகசிய புத்தகம்


அதேபோல, சென்னை, போயஸ் கார்டனில் உள்ள, ஜெ., வீட்டில் சோதனை நடந்தபோது, வருமான வரித் துறை, ஒரு புத்தகத்தை கைப்பற்றியது. அந்த புத்தகத்தில், பல்வேறு நிறுவனங்களின் கணக்கு, வழக்குகள் குறித்து விபரங்கள் இடம் பெற்றிருந்தன.இந்த சொத்துக்கள் வாங்கியது, பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராக இருப்பது குறித்து, விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு, 2017 அக்.,15ல், வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி இருந்தது. இதற்கு, சசிகலா சிறையில் இருப்பதால், பதில் அளிக்க அவசாகம் கேட்டனர்.

அதன் பின், சசிகலா தரப்பு ஆடிட்டர், 2017 டிச., 11ல், நோட்டீசுக்கு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையை வருமான வரித்துறையினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த அறிக்கை குறித்த விபரங்கள், மிக தாமதமாக கசியத் துவங்கி உள்ளன.


அறிக்கையில் என்ன?


சசிகலா, 1,600 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கியது எப்படி; எங்கெங்கே சொத்துக்கள் உள்ளன; பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, 237 கோடி ரூபாய்க்கு, புதிய நோட்டுக்களை சசிகலா தரப்பினர் மாற்றினர் என்பது போன்ற தகவல்கள் வெளியாகின. தற்போது, இது தொடர்பான கூடுதல் விபரங்கள் வெளியாகி உள்ளன.

கோடநாடு எஸ்டேட், ராயல் வேலி புளோரிடேல் எக்ஸ்போர்ட், கிரீன் டீ எஸ்டேட், ஜெயா பப்ளிக்கேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ், ஜெயா பார்ம் ஹவுஸ், ஜெயா ஹவுசிங் டெவலப் மென்ட் ஆகிய நிறுவனங்களில், ஜெ.,வும், சசிகலாவும் பங்குதாரராக இருந்துள்ளனர்.மேலும், இந்தோ தோகா கெமிக்கல் நிறுவனம், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் ஆகிய நிறுவனங்களில் சசிகலா பங்குதாரராகவும், ஜாஸ் சினிமாசில், 41.66 லட்சம் பங்குகளை சசிகலா வைத்துள்ளார்.

அரே லேண்ட் நிறுவனத்தில், 3.6 லட்சம் பங்குகள், மாவிஸ் ஷேட் காம் நிறுவனத்தில், 7.2 லட்சம் பங்குகள், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் நிறுவனத்தில், 36 ஆயிரம் பங்குகளையும் சசிகலா வைத்து உள்ளார்.

எனக்கே சொந்தம்


இவற்றின் வாயிலாக, ரியல் எஸ்டேட் வணிகம் உள்ளிட்ட வகையில் இருந்து, சசிகலாவிற்கு வருவாய் கிடைத்துள்ளதாக, தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், 1,900 கோடி ரூபாய்க்கு செல்லாத நோட்டுக்கள் மாற்றியதாக கூறிய குற்றச்சாட்டுகள், தவறானவை என, சசிகலா தரப்பில் மறுக்கப்பட்டுஉள்ளது.

நமது எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயா பிரிண்டர்ஸ் ஆகியவற்றின் உரிமையாளர் நான் தான் என, சசிகலா தெரிவித்து உள்ளார்.ஜெ.,வின் கோடநாடு எஸ்டேட் மற்றும் இதர நான்கு நிறுவனங்களில் பங்குதாரராக இருந்த சசிகலா, ஜெ., இறந்த பின், அந்த நிறுவனங்களின் பங்குதாரர் உரிமையை கலைத்து, உரிமையாளர் ஆனார். மேலும், நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருந்த போதும், தனித் தனியே வரி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜெ., இறந்த பின், உரிமையாளரான சசிகலா, வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இருந்தாலும், 2016 டிச., 6 முதல், 2017 மார்ச், 31 வரை, வணிகத்தில் தீவிரம் காட்டவில்லை என, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இந்த வகையில், ஜெ.,வின் சொத்துக்கள் முழுவதும் என்னுடையது தான் என, சசிகலா சொந்தம் கொண்டாட துவங்கி உள்ளார். சசிகலா தொடர்பாக தினம் தினம் வெளியாகும் தகவல்கள் அனைத்தும் உண்மை தான் என்பதால், வருமான வரித் துறையும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் உள்ளது. தொடர்ந்து வரும் தகவல்களால், சசிகலா தரப்பினர் கலக்கம் அடைந்து உள்ளனர்.
jayalalitha,sasikala,ஜெ.,சொத்து,சொந்தம்,சசிகலா

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...