தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, 'பிரசாந்த் கிஷோர், எங்களின் வேலைக்காரர்' என கூறியுள்ளதால். பிரசாந்த் குழுவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சமீபத்தில், தனியார், 'டிவி'க்கு, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்தார். அப்போது, 'தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், தி.மு.க.,வின் மூளையாக செயல்படுகிறாரா' என, கேட்கப்பட்டது.
அதற்கு, ஆர்.எஸ்.பாரதி அளித்த பதில்: உட்கட்சி விஷயங்களை, வெளியே சொல்ல வேண்டிய அவசியமில்லை. உறுப்பினர் அட்டை அச்சிட, ஐ.டி., எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளோம். அதேமாதிரி தான், தேர்தல் பிரசார பணிகளுக்காக, பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துடன், ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதை, நாங்கள் மறைக்க வேண்டிய அவசியமில்லை.
கட்சி கொள்கைகளை, பிரசாந்த் கிஷோர் வகுத்து தர மாட்டார். தி.மு.க.,வின் மூளையாக, பிரசாந்த் கிஷோர் செயல்படவில்லை. அவரின் மூளையை பயன்படுத்தியா, கட்சியை வளர்த்தோம்; சமூக வலைதளங்களில் பதிலடி கொடுப்பதற்கு, எங்களுக்கு அப்படியொரு நிறுவனம் தேவைப்படுகிறது. விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி, கட்சி பணிகளையும் மாற்றிக் கொள்கிறோம்.
பிரசாந்த் கிஷோர், எங்களுக்கு வேலைக்காரர்; அவருக்கு நாங்கள் பணம் தருகிறோம். எங்களுக்கு முதலாளி யாரு என்றால், தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு தான். டாக்டரிடம் மருத்துவ ஆலோசனை கேட்கிறோம்; அதற்கு, கட்டணம் கொடுக்கிறோம். அதேபோல், பிரசாந்த் கிஷோர், எங்களின் ஆலோசகர்.இவ்வாறு, அவர் கூறினார்.
இவரது பேட்டி, பிரசாந்த் கிஷோர் குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டி விவகாரம், கட்சியிலும் சலசலப்பை உருவாக்கி உள்ளது.
No comments:
Post a Comment