ராஞ்சி ஜார்க்கண்டில் நடந்த சட்டசபை தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்., கூட்டணி அபார வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள, 81 தொகுதிகளில், 45ல் வெற்றி பெற்று, இந்த கூட்டணி அசத்தியுள்ளது. ஜே.எம்.எம்., செயல் தலைவர் ஹேமந்த் சோரன், 44, முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்த தோல்வியை அடுத்து, கடந்த ஒரு ஆண்டில் மட்டும், ஐந்து மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியை இழந்துள்ளது.
ஜார்க்கண்டில், நவ., 30ல் துவங்கி, டிச., 20 வரை, ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல்கள் நடந்தன. இதில், பா.ஜ., ஒரு அணியாகவும், ஜே.எம்.எம்., எனப்படும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன.
மொத்தம் உள்ள, 81 தொகுதிகளில், பா.ஜ., 79 தொகுதிகளில் தனித்து களம் இறங்கியது. ஜே.எம்.எம்., 43 தொகுதிகளிலும், காங்கிரஸ், 31 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஏழு தொகுதிகளிலும் போட்டியிட்டன.
அனல் பறந்த பிரசாரத்தில், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் பிரசாரம் செய்தனர்.
ஜே.எம்.எம்., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல், ஹேமந்த் சோரன், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று காலை எண்ணப்பட்டன. இதற்காக, 24 மாவட்ட தலைநகரங்களிலும் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஓட்டு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே, பா.ஜ.,வுக்கும், ஜே.எம்.எம்., தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் இழுபறி நிலவியது.
மாலைக்கு பின், ஜே.எம்.எம்., கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான, 41 தொகுதிகளை விட, கூடுதல் தொகுதிகளில் முன்னணியில் இருந்தது. இதைத் தொடர்ந்து, ஜே.எம்.எம்., கூட்டணி, 45 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில், ஜே.எம்.எம்., 30 தொகுதிகளிலும், காங்கிரஸ், 14 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. பா.ஜ., 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகள் ஆதரவுடன், ஜே.எம்.எம்., கட்சியின் ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
ஏற்கனவே, 2013ம் ஆண்டிலும், காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தள ஆதரவுடன், இவர் முதல்வராக பதவி வகித்தார். இந்த தேர்தலில், ஆளும் கட்சியான பா.ஜ., தோல்வியை சந்தித்ததுடன், ஆட்சியையும் பறி கொடுத்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், பா.ஜ., ஆட்சியை இழந்திருந்தது. தற்போது, ஜார்க்கண்டிலும் தோல்வியை சந்தித்து, ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
நம்பவில்லை
ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவரான ஆர்.பி.என்.சிங் கூறியதாவது:
மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளோம். காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆதரவுடன், ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்பார். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், தங்களின் தேர்தல் பிரசாரங்களின் போது, மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, பல்வேறு விஷயங்களை பேசினர். ஜார்க்கண்ட் மக்கள், அவர்களை நம்பவில்லை. பா.ஜ., தலைவர்களின் ஆணவ போக்கிற்கு, ஜார்க்கண்ட் மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையே, ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ், தன் ராஜினாமா கடிதத்தை, கவர்னர் திரவுபதி முர்முவிடம், நேற்று இரவு வழங்கினார். கவர்னரின் உத்தரவின் படி, புதிய ஆட்சி அமையும் வரை, ரகுபர் தாஸ், முதல்வர் பதவியில் நீடிப்பார்.
எங்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. மாநிலத்தில் நிலையான ஆட்சியை அமைப்போம். இந்த வெற்றியை பெற உதவிய என் தந்தை சிபு சோரன், கூட்டணி கட்சி தலைவர்களான சோனியா, லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு நன்றி.
ஹேமந்த் சோரன்செயல் தலைவர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்கவுள்ள ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்துக்கள். தோல்வி அடைந்தாலும், ஜார்க்கண்ட் மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்காகவும், பா.ஜ., தொடர்ந்து சேவையாற்றும். நரேந்திர மோடிபிரதமர்மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த, பா.ஜ., ஆட்சிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி. களைப்பின்றி, சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றிய பா.ஜ., தொண்டர்களுக்கு நன்றி.
அமித் ஷாதேசிய தலைவர், பா.ஜ.,
ரகுபர் தாஸ் வீழ்ந்தது ஏன்
?
ஜார்க்கண்ட் முதல்வரான, பா.ஜ., வைச் சேர்ந்த ரகுபர் தாஸ், தேர்தல் பிரசாரங்களின் போது, 'ஜார்க்கண்ட் மக்களுக்காக பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். கண்டிப்பாக வெற்றி பெறுவோம்' என, கூறியிருந்தார். ஆனால், பா.ஜ., வால், மீண்டும் ஆட்சி அமைக்க முடியவில்லை.
தான் போட்டியிட்ட ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியிலும், சுயேச்சை வேட்பாளரும், பா.ஜ., அதிருப்தி தலைவருமான சரயு ராயிடம், 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில், ரகுபர் தாஸ் தோல்வி அடைந்தார்.
இது குறித்து நேற்று அவர் கூறுகையில்,''ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையால் தோல்வியை சந்தித்துள்ளோம். ஆனாலும், மக்களின் தீர்ப்பை மதிக்கிறேன்; இது, பா.ஜ., வுக்கு கிடைத்த தோல்வி அல்ல; தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைத்த தோல்வி,'' என்றார்.
ரகுபர் தாசுக்கு, பா.ஜ., வுக்குள்ளேயே கடும் எதிர்ப்பு இருந்தது. கட்சியின் சக தலைவர்களுடன் சுமுகமான நட்பு வைத்துக் கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு, அவர் மீது சுமத்தப்பட்டாலும், அதை அவர் பொருட்படுத்தவில்லை.
எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், கட்சி நிர்வாகிகளை அழைக்காமல், தனியாகவே செல்லும் பழக்கத்தை வைத்திருந்தார். இதனால், கட்சிக்குள் கடும் அதிருப்தியை அவர் சம்பாதிக்க நேர்ந்தது.
தேர்தலின் போது, கட்சியின் முக்கிய நிர்வாகிகள், போதிய ஒத்துழைப்பு தராமல், அவரை கவிழ்த்து விட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
பா.ஜ.,வின் கூட்டணி கட்சியாக இருந்த ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் கட்சியினரிடமும், அலட்சிய மனப்பான்மையுடன் ரகுபர் தாஸ் செயல்பட்டதால், சட்டசபை தேர்தலுக்கு முன், கூட்டணியிலிருந்து, அந்த கட்சி வெளியேறியது.
குறைகிறதா பா.ஜ., ஆதிக்கம்?
கடந்த, 2014ல், மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், 'காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்' என, அந்த கட்சி தலைவர்கள் கோஷங்களை முன் வைத்தனர். அதற்கு ஏற்ப, பெரும்பாலான மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில், பா.ஜ.,வே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
கடந்த, 2017ல், பா.ஜ., வின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்தது. குறிப்பாக, ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் பெரும்பாலானவை, பா.ஜ., வசம் வந்தன. அப்போது, நாட்டின் மொத்த நிலப்பரப்பில், 71 சதவீதம், பா.ஜ., ஆட்சி நடக்கும் பகுதிகளாக இருந்தன. தற்போது இந்த சதவீதம், 35 ஆக குறைந்து விட்டது. இதற்கு பின், இந்தாண்டு மத்தியில் நடந்த லோக்சபா தேர்தலிலும், பா.ஜ., அபார வெற்றி பெற்றாலும், சட்டசபை தேர்தல்களில் வீழ்ச்சியையே சந்தித்துள்ளது.
இதற்கான காரணம் குறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:
பல மாநிலங்களில், பா.ஜ., வின் முதல்வர் வேட்பாளர்களாக, சம்பந்தபட்ட மாநிலங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் சமூகத்தினரை முன் நிறுத்தாமல், பிற சமூகங்களை சேர்ந்தவர்களை, பா.ஜ., மேலிடம் முன் நிறுத்துகிறது. இதில், ஒரு சில நேரங்களில் வெற்றி கிடைத்தாலும், பெரும்பாலான தேர்தல்களில் தோல்வியே கிடைத்துள்ளது.
இதனால் தான், ஜாட், மராத்தா, பழங்குடியின ஓட்டுகள், பா.ஜ., விட்டு, மற்ற கட்சிகளுக்கு போயின. ஆனால், இந்த விஷயத்தில், எதிர்க்கட்சிகள், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, வெற்றி பெற்றன. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மகுடம் சூடும் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் மாநிலத்தில், மிக இளம் வயதில் முதல்வராக பதவியேற்றவர் என்ற பெருமை, ஹேமந்த் சோரனுக்கு உண்டு. காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆதரவுடன், 2013ல் முதல்வராக பதவியேற்றபோது, இவருக்கு, 38 வயது தான். 14 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும், அரசு வேலையில் பெண்களுக்கு, 50 சதவீத ஒதுக்கீடு போன்ற முற்போக்கான திட்டங்களை அறிவித்தார்.
நக்சலைட் ஆதிக்கத்திலிருந்து மாநிலத்தை மீட்க, மாநிலம் முழுவதும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தினார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, பழங்குடியின மக்களின் நிலங்களை விவசாயம் அல்லாத நடவடிக்கைகளுக்காக, மற்றவர்கள் பயன்படுத்தும் வகையில், பா.ஜ., அரசு சட்டம் இயற்றியது. அதை எதிர்த்து கடுமையாக போராட்டங்களை நடத்தினார்.
கடந்த, 2013ல், ஜார்க்கண்டில் பட்டினி கொடுமையால், 11 வயது சிறுமி பலியானதை கண்டித்து, தீவிரமான போராட்டங்களை நடத்தினார். இது குறித்து, சி.பி.ஐ., விசாரிக்கக்கோரியும் போராட்டங்களை நடத்தினார்.
இவரது தந்தையும், முன்னாள் முதல்வருமான சிபுரோன், வழக்குகளில் சிக்கியதை அடுத்து, தீவிர அரசியலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தந்தையின் அரசியல் வாரிசாக களத்துக்கு வந்த ஹேமந்த் சோரன், கூட்டணி கட்சிகளுடன் அனுசரித்து போகும் மென்மையான குணத்தால், தற்போது இரண்டாவது முறையாக, முதல்வராக மகுடம் சூட உள்ளார்.
ராஞ்சியில் உள்ள கல்லுாரியில், மெக்கானிகல் இன்ஜியரிங் படித்த ஹேமந்த் சோரன், அதில் தேர்வாகவில்லை. இந்த தேர்தலில், தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலுமே, ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார். தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில், நேற்று, தன் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில், உற்சாகமாக சைக்கிளில் பயணித்தார்.
ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்கவுள்ள ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்துக்கள். தோல்வி அடைந்தாலும், ஜார்க்கண்ட் மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்காகவும், பா.ஜ., தொடர்ந்து சேவையாற்றும். நரேந்திர மோடி, பிரதமர்
எங்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. மாநிலத்தில் நிலையான ஆட்சியை அமைப்போம். இந்த வெற்றியை பெற உதவிய என் தந்தை சிபு சோரன், கூட்டணி கட்சி தலைவர்களான சோனியா, லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு நன்றி. ஹேமந்த் சோரன்செயல் தலைவர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா.
No comments:
Post a Comment