Friday, February 14, 2020

11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசுக்கு எதிராக ஓட்டளித்த, பன்னீர்செல்வம் உள்ளிட்ட, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 11 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'சபாநாயகரே முடிவு எடுப்பார்' என கூறி, வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. இதனால், தி.மு.க.,வினரின் எதிர்பார்ப்பு பிசுபிசுத்துள்ளது.
SC,SupremeCourt,OPanneerselvam,OPS,Panneer,MLA,சுப்ரீம்கோர்ட்,ஓபிஎஸ்,பன்னீர்
.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க., இரண்டாகப் பிரிந்தது. பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தனி அணியாகச் செயல்பட்டனர். கடந்த, 2017 பிப்ரவரியில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அரசு மீது, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. இதில், பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 எம்.எல்.ஏ.,க்களும், அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர். ஆனாலும், பழனிசாமி தலைமையிலான அரசு, நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. அரசுக்கு எதிராக ஓட்டளித்த, எம்.எல்.ஏ.,க்கள் மீது, சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே, பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும், பழனிசாமி தலைமையிலான அணியினரும் மீண்டும் ஒன்றிணைந்து, ஒரே அ.தி.மு.க.,வாக செயல்பட்டனர். பன்னீர்செல்வம் துணை முதல்வரானார். இதையடுத்து, அரசுக்கு எதிராக ஓட்டளித்த எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, தி.மு.க., சார்பிலும், அ.ம.மு.க.,வின் வெற்றிவேல் சார்பிலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், 'சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது' என, தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, தி.மு.க., தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

மூன்று ஆண்டு நிலுவையில் இருந்த இந்த வழக்கு, சமீபத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அரசுக்கு எதிராக ஓட்டளித்த, 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கக்கோரும் விஷயத்தில், தமிழக சபாநாயகர் நீண்ட நாட்களாக முடிவு எடுக்காமல் தாமதித்தது ஏன்' என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டனர். இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், 'தகுதி நீக்கம் தொடர்பான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

'கிடைக்கும் பதில்களின் அடிப்படையில் உரிய முடிவை அறிவிப்பார்' என்றார். இதையேற்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சட்டப்படி, சபாநாயகர் உரிய நடவடிக்கையை எடுப்பார் என நம்புகிறோம். இந்த விஷயத்தில், சபாநாயகருக்கு உத்தரவிடவோ, நடவடிக்கை எடுக்கும்படி காலக்கெடு விதிக்கவோ முடியாது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கை, தி.மு.க., தரப்பு பெரிதும் எதிர்பார்த்திருந்தது. 11 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, தி.மு.க.,வினர் நம்பினர். இந்த விவகாரத்தில் மூன்று ஆண்டுகளாக நீடித்து வந்த பரபரப்பு, உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பு மூலம் முடிவுக்கு வந்துள்ளது. எதிர்பார்ப்புடன் காத்திருந்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், அவரது கட்சியினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


சபாநாயகர் அதிகாரம்: கபில் சிபல் வாதம்



இந்த வழக்கில், தி.மு.க., தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறியதாவது: மணிப்பூர் சபாநாயகர் தொடர்பான வழக்கில், ஜனவரி, 21ல், உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி ரோகிங்டன் எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு முக்கிய தீர்ப்பளித்தது. அதில், தகுதி நீக்கம் தொடர்பான விஷயத்தில், சபாநாயகர் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என, கூறப்பட்டது. மேலும், சபாநாயகர் ஒரு கட்சியின் உறுப்பினராக இருக்கும்போது, தகுதி நீக்கம் குறித்த விஷயத்தில், அவரால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியது.

எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை சபாநாயகருக்கு அளிப்பதற்கு பதில், தன்னிச்சையான ஒரு அமைப்பிடமோ, தீர்ப்பாயத்திடமோ வழங்கச் செய்வதற்கு, பார்லிமென்டில் சட்டம் இயற்றலாம் என்றும் நீதிபதிகள் கூறினர். இந்த உத்தரவை, இந்த, 11 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கிலும் நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு, கபில் சிபல் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...