அப்படியும் சொல்லலாம். என் அம்மா வானொலியில் செய்தி வாசித்ததை, சிறுவயதில் இருந்தே கேட்டிருக்கிறேன். அதனால், அந்த வாய்ப்பு வந்தபோது, எனக்கு எளிதாக இருந்தது.
முதன் முதலில் செய்தி வாசித்தபோது ஏற்பட்ட உணர்வு...
படிப்பது தானே... எளிதாக தான் இருந்தது.
தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகளை வாசிக்க பிரத்யேக பயிற்சி எடுத்தீர்களா?
தமிழ் உச்சரிப்பின் முக்கியத்துவத்தை பள்ளி நாடகங்களில் நடித்தபோதும், ஆங்கில உச்சரிப்பை, கல்லுாரி பாடத்தின் போதும், நான் ஏற்கனவே உணர்ந்திருந்தேன். எனக்கு எழுத, படிக்கத் தெரிந்த மொழிகளான ஆங்கிலத்தையும், தமிழையும் சரியாக உச்சரிக்கும் போது, நாவில் அமுதுாறுவதாக உணர்வேன்.
அத்துடன், தமிழை ஏற்ற, இறக்கத்துடன் வாசிக்க, என் ஆசிரியர்களும், அம்மாவும் எனக்கு பழக்கி இருந்தனர். ஆங்கில இலக்கியம் படித்தபோது, அதற்கு, என்னை நானே பழக்கிக் கொண்டேன். தமிழ், 'ட' வேறு, ஆங்கிலத்தில், 'ட' உச்சரிப்பு வேறு. மொழிக்கு மொழி இப்படி பல வேறுபாடுகள் உண்டு. ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவம் உள்ளது.
மறக்க முடியாத நிகழ்வுகள்?
பல ஆண்டுகள் செய்தி வாசித்ததால், உயரத்தில் இருந்தவர்களைக் காலச்சக்கரம் புரட்டிப் போடுவதையும், வேறு சிலரைக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏற்றுவதையும் பார்த்த வண்ணம் இருந்தேன். இயற்கையும், அவரவர் வினைப்பயனும், எல்லாவற்றையும், எல்லாரையும் மாற்றியபடியே இருந்ததை, திரைப்படம் பார்ப்பது போல் உள்வாங்கிக் கொண்டேன்.
அரசு சார்ந்த செய்திகளை மட்டுமே வாசித்தது சலிப்பை ஏற்படுத்தவில்லையா? உறுத்தல் இல்லாமல் இருந்ததா?
பி.டி.ஐ., - யு.என்.ஐ., - ராய்டர் செய்திகளை அடிப்படையாக வைத்துத் தான், செய்திகள் தயாரிக்கப்பட்டன. என் அம்மா செய்தி ஆசிரியராகப் பணியாற்றியதால், தன் விருப்பு வெறுப்புகளை விட்டு, வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள், செய்தியின் நம்பகத்தன்மைக்கு முக்கியத்துவம் தந்தனர். செய்தி ஆசிரியரின் இடைச்செருகல் இருக்காது. அந்த தொழில் தர்மம், பிற்காலங்களில் குறைந்து விட்டது.
நான், என் பணியை ஒரு தொழிலாகப் பார்த்தேன். எனக்கு செய்தியில் ஏதேனும் வரிகள் சரியாகப் படாவிட்டால், செய்தி ஆசிரியரிடம் சொல்லி, அவற்றை மாற்றிக் கொள்வேன்; அவ்வளவு தான்.
தாங்கள் விருப்ப ஓய்வு பெற்ற போது, நிறைய சாதிக்க உள்ளதாக கூறினீர்கள். உங்கள் சாதனை பயணம் எப்படி உள்ளது?
அப்படி சொன்னதாக நினைவில்லை; எதையும் சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை. என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று நினைத்தேனோ, நினைக்கிறேனோ, அவற்றை செய்கிறேன். என்னை நான் அறிய வேண்டும் என்ற அவா ஒன்று தான், என்னை சிறுவயதில் ஆக்கிரமித்திருந்தது. அதை என் குருநாதர், டாக்டர் நித்யானந்தம் நிறைவேற்றித் தந்துவிட்டார்.
அதே இளமையும், சுறுசுறுப்பும் தொடர்கிறதே; ரகசியம் என்ன?
நான், பெரிதாக எதையும் அசைபோட மாட்டேன்; திட்டமிடமாட்டேன். செய்ய வேண்டிய பணிகளை, உடனுக்குடன் முடித்து விடுவேன். 25ம் வயதில், யோகா செய்ய துவங்கி விட்டேன்.
தினமும் மாலை, நடைப்பயிற்சியில் ஈடுபடுகிறேன். ஆனால், பெரும்பாலான பெண்கள், தன் குடும்பம், தன் குழந்தை என, பிறருக்காகவே சுழல்வதால், தன்னைப் பற்றி யோசிப்பதில்லை.
பெண்கள், தங்களின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சியை வழக்கமாக்கினாலே, உடல் சுறுசுறுப்பாக இருக்கும். சில ஆண்டுகளாக, நான், 'தாய்ச்சி' என்கிற, தற்காப்பு கலையை பயின்று வருகிறேன். ஆக, உடலுக்கு உடற்பயிற்சி, மனதுக்கு தியானம். இவற்றை தவிர, என்னிடம் வேறெந்த ரகசியமும் இல்லை.
திடீரென ரஜினிக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளீர்கள். அவர் கட்சியின் முக்கிய பொறுப்பில் உங்களை எதிர்பார்க்கலாமா?
ரஜினியின் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும், ரஜினியைப் போல், 'நடந்த, அந்த உண்மையைச் சொன்னதற்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன்' என்று யார் சொல்லியிருந்தாலும், நான் அன்று செய்ததைத் தான் செய்திருப்பேன்.
அவர் சொன்ன உண்மை எனக்கும் தெரிந்திருந்ததாலும், அந்த உண்மை எனக்கு மிகுந்த கோபத்தையும், ஆற்றாமையையும் விளைவித்த ஒரு சமூகக் கேடு என்பதாலும், அதை என்றும் என்னாலும் மன்னிக்க முடியாது. அதனாலும், 'பயப்படாமல் ரஜினி மன்னிப்பு கேட்கமாட்டேன்' என்று சொன்னதாலும், நான் ரஜினிக்கு ஆதரவாக அந்த, முகநுால் பதிவை வெளியிட்டேன்.
ஆழ்வார்களும், நாயன்மார்களும் இருந்த மண் இது. தேம்பாவணியும், சீறாப்புராணமும் மலர்ந்த மண் இது. மதங்களையும் கட்சிகளையும் கடந்தது இறை உணர்வு. சாதாரண அரசியல் கட்சிகள், இந்த மண்ணின் மணத்தில் திளைத்திருக்கும் இறையன்பர்களைப் புண்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்வதா...
என்னைப் பொறுத்தவரை ராமனும், இயேசுவும், அல்லாவும் ஒருவனே, ஒருத்தியே! யாருக்குச் செருப்பு மாலை போட்டிருந்தாலும் வெகுண்டிருப்பேன்.
கட்சியில் சேர்ந்து அரசியல் செய்வதில், எனக்கு நாட்டமே கிடையாது. காற்றைப் போல் சுதந்திரமாக இருக்கும் நான், எதனாலும் கட்டுண்டுவிட மாட்டேன். நேர்மையான அரசியல்வாதிகள் வரவேண்டும். சத்தியமும், தர்மமும் தழைக்க வேண்டும். இந்த விழைவைத் தவிர, எனக்கு எந்த அரசியல் நோக்கமும் கிடையாது.
உங்களுக்கு எழுத்தார்வம் வந்ததெப்படி?
தமிழ், ஆங்கில மொழிகளை நான் ஓரளவுக்கு பயின்றிருப்பதால், அந்த மொழிகளில் என் எண்ணங்களையும், உணர்வுகளையும் பதிவு செய்கிறேன். இதையும், எந்த ஆதாயமும் கருதி நான் செய்யவில்லை. என் எழுத்தாலும், நான் இறைவனையே அர்ச்சிக்க விரும்புவதால் அழகற்ற சொற்களையோ, சத்தியத்துக்கு முரணானவற்றையோ எழுதுவதை தவிர்க்கிறேன்.
தமிழில் எப்போது எழுத போகிறீர்கள்?
தமிழிலும் எழுதிக் கொண்டு தான் இருக்கிறேன். நான் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஆங்கில நாவலை, தமிழில் எழுதி, தொடர்கதையாக வெளியிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் எழுதியுள்ள, 'தி ஆஸ்பிஷஸ்' நாவல் எதைப் பற்றியது?
அது ஒரு, 'த்ரில்லர்' நாவல். சிலை கடத்தும் மாபியா கதை. வாசிக்கும் போது, விறுவிறுப்பாக இருக்கும்.
பாகீரதி நதிக்கரையில் துவங்கி, கேரள நதிக்கரையில், நாவலின் இந்த முதல் பாகம் முடிகிறது. பிரதமர், மத்திய அமைச்சர், முதல்வர் என, பலரை கதையில், கதாபாத்திரங்களாக உருவாக்கி கொண்டது.
எனக்கு தெரிந்த மனிதர்களும், இப்படித் தான் இருப்பரோ என்று நான் நம்பும் மனிதர்களும், இந்திய மண்ணின் வாசனையும் அதன் இயற்கை அழகும், பலவிதமான நம்பிக்கைகளும், அவற்றுக்கு அடித்தளமான, அதன் பாரம்பரியமும் இந்த நாவலில் நிறைய உள்ளன.
No comments:
Post a Comment