திமுக தலைவர் கருணாநிதிக்கு வயதாக வயதாக திமுகவுக்கும் வயதாகிக்கொண்டே வந்தது. திமுக நிர்வாகிகள் பலரும் 20, 30 ஆண்டுகளாக பதவிகளை விட்டுக்கொடுக்காமல் வைத்திருந்ததால், திமுக என்றாலே 70+ வயதானவர்களின், முதியவர்களின் கட்சி என்றானது.
ஆனால் அதிமுகவிலோ அடிக்கடி நிர்வாகிகளை ஜெயலலிதா மாற்றிக்கொண்டே இருப்பார். தேர்தல்களிலும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார். எளிய தொண்டர்கூட பெரிய பதவிகளுக்கு வர முடிந்தது. அதற்கு எடுத்துக்காட்டு தான் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
திமுகவுக்கு ஐடியாமணியாக ஐபேக் நிறுவனம் வந்தபின்னும்கூட திமுக நிர்வாகத்தில் வேறெந்த மாற்றமும் வரவில்லை. கட்சியில் இளைஞர்கள் என்ற பெயரில், பொன்முடி, துரைமுருகன் போன்ற சீனியர்களின் வாரிசுகள் மட்டுமே மீண்டும் பதவிக்கு வருகிறார்கள். இந்நிலையில் மதுரை திமுக மிகப்பெரிய தள்ளாட்டத்தில் இருக்கிறது.
மதுரை மாநகர் திமுகவை இரண்டாகப் பிரித்து இரண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவதாக இருந்தது. அதில் மதுரை தெற்கின் பொறுப்பாளராக தளபதி என்பவரையும், மதுரை வடக்கின் பொறுப்பாளராக 84 வயது பொன்முத்துராமலிங்கத்தையும் நியமித்துள்ளனர். இந்த பொன்முத்துராமலிங்கத்தின் நியமனம் தான் மதுரை மாநகர் திமுகவினரிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்முத்துராமலிங்கம் ஏற்கனவே 30 ஆண்டுகாலமாக மாவட்ட நிர்வாகியாக இருந்தவர். தற்போது வயது மூப்பின் காரணமாக ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து பொறுப்பாளர் பதவி தரப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு ஏற்கனவே முன்னாள் எம்.எல்.ஏ வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலி, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ சரவணன், பொன்முத்துவின் மகன் பொன்.சேது ஆகியோர் போட்டியில் இருந்த நிலையில், வயதானவருக்கு இந்த பதவி கிடைத்திருப்பதால் அவரால் இன்றைய காலத்து அரசியல்வாதிகளுடன் ஆக்டிவாகச் செயல்பட முடியாதே என்று கேள்வி எழுந்துள்ளது. துடிப்பான பலரும் பதவிக்காகக் காத்திருக்கும்போது ஒரு முதியவருக்கு பதவியைக் கொடுத்திருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் இப்போதே மதுரை திமுகவில் கலாட்டா தொடங்கிவிட்டது!
No comments:
Post a Comment