மக்களை அச்சுறுத்திய, 'நிவர்' புயல், பெரும் பாதிப்பை ஏற்படுத்தாமல் கரையைக் கடந்துள்ள நிலையில், வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது வலுப்பெற்று, புயலாக மாற வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தப் புயலுக்கு, 'புரெவி' என, பெயரிடப்பட உள்ளது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல், நவம்பர், 26ல், புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. பெரும் பாதிப்பை ஏற்படுத்துமோ என, மக்கள் அஞ்சியிருந்த நிலையில், அரசு எடுத்த முன்னேற்பாடுகளால், பெரிய பாதிப்பு இன்றி தமிழகம் தப்பியது.
இதனால், தமிழக மக்கள் நிம்மதி அடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் மீண்டும் ஒரு புயல் சின்னம் நாளை உருவாக உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தென்கிழக்கு வங்கக் கடலில், நாளைக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த பகுதி, மேலும் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
பின்னர், அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்த மண்டலம், வரும், 2ம் தேதி தமிழகம், புதுச்சேரியை நெருங்கும். இதன் காரணமாக, டிச., 1, 2, 3ல், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யும்.தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும், வங்கக் கடலின் தெற்கு, தென்கிழக்கு, மத்திய தென் கிழக்கு, குமரிகடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளிலும், நாளை முதல், டிச., 3 வரை, சூறாவளி காற்று மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் வீசும்; கடல் அலைகள் கொந்தளிப்பாக காணப்படும்.இவ்வாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.
புயலாக மாற வாய்ப்பு
புதிய புயல் சின்னம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:தெற்கு வங்கக் கடலில், நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தற்போதைய நிலவரப்படி, புயலாக மாற வாய்ப்பு உள்ளது; தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து, புயலாக மாறினால், அதற்கு, மாலத்தீவு அளித்துள்ள, 'புரெவி' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. புரெவி என்றால், மாலத்தீவின் தேசிய மொழியான திவேஹியில், 'கறுப்பு சதுப்பு நிலங்கள்' என, பொருள்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, கடல் சீற்றம் இருக்கும் என்பதால், இன்று, தெற்கு ஆந்திரா, தென்கிழக்கு வங்கக் கடல்; நாளை, தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதி; நாளை மறுதினம், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகள் மற்றும் டிச., 1 முதல், 3 வரை, குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என, மீனவர்களுக்கு, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வலுவிழந்தது நிவர்
வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவான நிவர் புயல், கடலுார் மற்றும் புதுச்சேரி இடையே, 25ம் தேதி நள்ளிரவில் கரையைக் கடந்தது.இது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களையும், பின், வேலுார், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களையும் கடந்தது. இதையடுத்து, ஆந்திராவின் தென் பகுதியில் நுழைந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், பின் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும் வலு குறைந்து, மீண்டும் வங்கக் கடலை நெருங்கியுள்ளது. இன்று, மேலும் வலுவிழந்து விடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சோளிங்கரில் 23 செ.மீ., கொட்டியது
நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேர மழை அளவு வருமாறு:
சோளிங்கரில், 23 செ.மீ., மழை கொட்டியது. திருப்பத்துார் மாவட்டம், வடபுதுப்பட்டு, 16; பொன்னை அணை, வேலுார், 14; ஆம்பூர், ஆர்.கே.பேட்டை, 13; ஆலங்காயம், காட்பாடி, 12 செ.மீ., மழை பெய்துள்ளது. வாணியம்பாடி, திருபுவனம், காவேரிபாக்கம், 9; வாலாஜா, குடியாத்தம், விருஞ்சிபுரம், 8; தேவகோட்டை, வெம்பாக்கம், 7; திருமங்கலம், அதிராம்பட்டினம், சிவகங்கை, ஆரணி, புதுக்கோட்டை, 6; விருதுநகர், பள்ளிப்பட்டு, காரைக்குடி, திருவாடானை, மணமேல்குடி, மீமீசல், ஆற்காடு, 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில், ௧ முதல் 4 செ.மீ., வரை மழை பெய்துள்ளது.
No comments:
Post a Comment