தேர்தலில் போட்டியிடாத அரசியல்கட்சியை ஒரு கட்சியாகச் சட்டப்படி ஏற்கக்கூடாது
தமிழகத்தில் அஇஅதிமுக, திமுக, தேமுதிக என்ற 3 கட்சிகளே மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப் பெற்றுள்ளன. இந்தியா அளவில் 7 தேசியக் கட்சிகளும், 24 மாநிலக் கட்சிகளும் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இவை தவிர்த்து, ம.தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் பலவும் பதிவு மட்டுமே செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்து அங்கீகாரம் பெறாத கட்சிகளாகத் தமிழகத்தில் 154 கட்சிகள் உள்ளனவாம். இந்தியாவில் 2044 கட்சிகள் உள்ளனவாம்.
காகிதக் கட்சிகள் - அதாவது தமிழ்நாட்டில் 3 கட்சிகளைத்தவிர 154 கட்சிகள் காகிதத்தில் மட்டுமே உள்ள ( letter pad ) கட்சிகளாகும். அதுபோல் இந்திய அளவில் 7 கட்சிகளைத் தவிர 2044 கட்சிகள் காகிதக் கட்சிகளாக உள்ளன.
தேர்தலுக்குத் தேர்தல் இத்தகைய காகிதக் கட்சிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. ஆவூன்னா ஆளாளுக்கு ஒரு கட்சி ஆரம்பித்துப் பதிவு செய்து கொண்டு அரசியல் செய்ய முற்படுகின்றனர். இவ்வாறு கட்சிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வதால் நாட்டின் நலனுக்கு என்ன நன்மைகள் ஏற்பட்டுள்ள? இவ்வாறு ஆயிரக்கணக்கான பேப்பர் கட்சிகளைப் பதிவு செய்து வைத்துள்ளதால் இந்தியமக்களுக்கு உறுப்படியாக ஏதும் ஆகப் போவது இல்லை. இந்தக் காகிதக்கட்சிகள் எல்லாமும் தேர்தல் கூட்டணி என்ற பெயரில் குதிரைபேரத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
இந்தக் காகிதக்கட்சிகள் பாராளுமன்ற சட்டமன்றத் தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்துவது கிடையாது. எப்போதாவது நடைபெறும் இடைத்தேர்தல்களிலும் வேட்பாளர்களை நிறுத்துவது கிடையாது.
அரசியல்கட்சி என்று பதிவு செய்து கொண்ட பின்னர், அந்தக்கட்சி அதனுடைய வேட்பாளரைத் தேர்தலில் நிறுத்தி அரசியல் செய்ய வேண்டுமல்லவா?
தேர்தலில் போட்டியிடாத, அரசியல்கடமை செய்யாத, அரசியலுக்கு வராத ஒரு கட்சியை, ஒரு அரசியல்கட்சியாக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
அரசியல் கட்சியாகப் பதிவு செய்துள்ள ஒருகட்சியானது, பதிவு செய்த பின்னர் நடைபெறுகின்ற தேர்தலில் அவசியம் போட்டியிட வேண்டும். இல்லையென்றால், அந்தக் கட்சியைக் காகிதக்கட்சியாகக் கருதிட வேண்டும். அந்தக் கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும். ஒருவர் பெயரில் துவங்கப்பட்ட ஒரு கட்சியை மீண்டும் அவரது பெயரில் பதிவு செய்தி அனுமதிக்கக் கூடாது
பயணம் நன்முறையில் அமைய வேண்டும் என்றால், ஓட்டுநரும், வண்டியும், பாதையும் நல்லபடியாக இருக்க வேண்டும். நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டுமானால் தேர்தலில் குதிரைபேரம் நடத்தும் கூட்டணிகளும் பணப்புழக்கமும் இருக்கக்கூடாது. அதற்குத் தேர்தலில் போட்டியிடாத காகிதக் கட்சிகளின் பதிவைத் தேர்தல்ஆணையம் நீக்க (ரத்து செய்ய) வேண்டும்.
No comments:
Post a Comment