சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கேரள தலைமை செயலர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கொரோனா காரணமாக சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வார நாட்களில் ஆயிரம், சனி, ஞாயிறு தினங்களில் இரண்டாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் வருமானம் குறைந்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தவிக்கிறது. இதனால் தினசரி பக்தர்களின் எண்ணிக்கையை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்று தேவசம்போர்டு சார்பில் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. இதுதொடர்பாக முடிவு எடுக்க கேரள அரசின் தலைமை செயலாளர் விஸ்வாஸ்மேத்தா தலைமையில் உயர்மட்ட கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இதில் அனைத்து துறை செயலாளர்களுடன் தேவசம்போர்டு தலைவர் வாசு, ஆணையர் திருமேனி ஆகியோர் கலந்து கொண்டனர். சுகாதாரத்துறை எதிர்ப்பு தெரிவித்தாலும், மெஜாரிட்டி அடிப்படையில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு எவ்வளவு பக்தர்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து இன்று முதல்வர் பினராயி விஜயனுடனான ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து கூடுதல் பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கும்.
No comments:
Post a Comment