தமிழக காங்கிரஸ் கட்சியின், மேலிட பொறுப்பாளரான தினேஷ்
குண்டுராவ், தி.மு.க.,விடம் நெடுஞ்சாண்கிடையாக, 'சரண்டர்' அடைந்துள்ளார். 'சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்' என்றும், 'தொகுதி பங்கீடு தொடர்பாக, பேரம் எதுவும் பேச மாட்டோம்' என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், அதிகபட்சம், 40; குறைந்தபட்சம், 30 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என, தமிழக காங்கிரஸ் விரும்புகிறது.
பீஹார் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால், ஆர்.ஜே.டி., தலைமையிலான கூட்டணியால், அங்கு ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இது, காங்கிரஸ் கட்சி, நாடு முழுவதும் செல்வாக்கு இழந்து வருவதை காட்டுவதால், தமிழகத்திலும் இது எதிரொலிக்கும் என, தெரிகிறது. எனவே, சுதாரித்த தி.மு.க., தலைமை, காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில், கடுமையாக நடந்து கொள்வது என, முடிவெடுத் துள்ளது. அக்கட்சிக்கு, 20ல் இருந்து, 27 தொகுதிகள் வரையே தர முடியும் என்பதை, தி.மு.க., திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.
நடைமுறை கோணம்
காங்கிரஸ், ம.தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம், 63 தொகுதிகள் ஒதுக்கவும், மீதமுள்ள, 171 தொகுதிகளில் போட்டியிடவும், தி.மு.க., விரும்புகிறது.
அதற்கு மேல், காங்கிரஸ் எதிர்பார்க்குமானால், கூட்டணி கதவுகள் அடைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர், தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி:தி.மு.க., கூட்டணியில், எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து, முடிவு செய்வதற்கான நடவடிக்கைகளை, தமிழக காங்கிரஸ் கட்சி துவக்கி உள்ளது.
வலுவான மற்றும் நல்ல வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆலோசனையும் துவங்கி யிருக்கிறது. நாங்கள், அதை முக்கியமான நடைமுறை கோணத்தில் பார்க்கிறோம்.
தொகுதி வாரியாக உள்ள எதார்த்தங்களை பார்த்து வருகிறோம். மற்ற விஷயங்களை விட, கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம்.பீஹார் தேர்தல் முடிவுகள், எங்களை பாதிக்காது. தமிழகத்தின் அரசியல் களம் வேறு. தி.மு.க.,வுடனான எங்கள் கூட்டணி, ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டுள்ளது.
எதார்த்த அணுகுமுறை
லோக்சபா தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிட்டது போல, சட்டசபை தேர்தலிலும் இணைந்து போட்டியிடுவோம்.பீஹாரில் லோக்சபா தேர்தலில், எங்கள் கூட்டணி தோல்வி அடைந்தது; தமிழகத்தில், எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது.ஓட்டு வித்தியாசம் குறையும் போது, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வலுவூட்ட, காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். கடும் போட்டி நிலவும், 100 தொகுதிகளில், தி.மு.க.,வுக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம். எதார்த்த அணுகுமுறையின்படி தொகுதி பங்கீடு நடக்கும். நேர்மையான மற்றும் வெளிப்படையான பேச்சு நடத்தி, எங்கள் கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்த முயல்வோம். தேவையற்ற பேரங்கள் இருக்காது.
ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலினை, தமிழக முதல்வராக்க, காங்கிரஸ் பணியாற்றும். தமிழகத்தில், ராகுல், பிரசாரம் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, ஆலோசனை நடைபெற்று வருகிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
'தி.மு.க.,விடம் பேரம் பேச மாட்டோம்' என, தினேஷ் குண்டுராவ் கூறிய கருத்து, தமிழக கோஷ்டி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 'தற்போது, அவசர அவசரமாக நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து, தி.மு.க.,விடம் பம்ம வேண்டிய அவசியம் என்ன' என, மூத்த நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
'தி.மு.க.,விடம் எத்தனை தொகுதிகள் கேட்பது; துணை முதல்வர் பதவி, ஆட்சியில் பங்கு குறித்து, கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி விவாதிக்க வேண்டுமே தவிர, குண்டுராவ் சொல்வதை எல்லாம் ஏற்க முடியாது' என்றும், அக்கட்சியில் குமுறல் சத்தம் கிளம்பியுள்ளது.
கட்டுரையால் காங்., அதிருப்தி!
தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழில்,'சில நினைவலைகள்' என்ற தலைப்பில்,ஒரு கட்டுரை, நேற்று முன்தினம் வெளியானது. அதில், ராஜிவ் கொலை தொடர்பாக எழுதப்பட்டு இருந்தது. அதன் விவரம்:'ராஜிவ் கொலையில், விடுதலை புலிகளுக்கு மட்டுமல்ல; தி.மு.க.,வுக்கும் தொடர்பு இல்லை என்று கூற முடியாது' என, நிருபர்களிடம், மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தி கூறினார்.
அதற்கு, 'எந்த அடிப்படையில் இந்த கருத்தை தெரிவிக்கிறீர்கள்' என, நிருபர்கள் கேட்டனர். உடன், வாழப்பாடி ராமமூர்த்தி, 'நேற்று இரவு, சென்னையில், அப்பல்லோ மருத்துவமனை அருகே நடந்த, தி.மு.க., ஊழியர்கள் கூட்டத்தில், ஸ்டாலின் பேசும் போது, இங்கு ஒரு பெரிய கலவரம் நடக்கப் போகிறது; யாரும் இங்கே இருக்க வேண்டாம்; விரைந்து சென்று விடுங்கள் என கூறியிருக்கிறார்' என்று, படுபாதகப் பொய் ஒன்றை கூறியுள்ளார்.
'வாழப்பாடி ராமமூர்த்தி கூறியது, அப்பட்டமான பொய்' என, அப்போதைய, தி.மு.க., இளைஞர் அணி செயலர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டுரை, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன; காங்கிரசை திடீரென தி.மு.க., விமர்சிப்பது ஏன்; வாழப்பாடி ராமமூர்த்தி மீது குற்றம்சாட்டுவது ஏன் என்ற கேள்விகளை, காங்கிரசார் எழுப்பி உள்ளனர்.
No comments:
Post a Comment