பத்திரப்பதிவு இறுதி கட்ட பணிகளுக்காக வரும் பொதுமக்கள், ரொக்க பணம் எடுத்து வருவதை தவிர்க்கும்படி, சார் - பதிவாளர்கள் கோருகின்றனர். லஞ்ச ஒழிப்பு துறையின் திடீர் சோதனையே, இதற்கு காரணம் என, கூறப்படுகிறது.
தமிழகத்தில் பத்திரப்பதிவுக்காக சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு, தினமும், 30 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர். இதில், ரொக்க பரிமாற்றத்தை தடுக்க, பதிவுத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ரொக்கமாக எந்த கட்டணத்தையும் செலுத்த முடியாத அளவுக்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சில மாதங்களாக லஞ்ச ஒழிப்பு துறையினரின் திடீர் சோதனையில், பதிவு அலுவலகங்களில் தான், அதிக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பதிவுக்கு வரும் பொது மக்களிடம் இருந்து, பறிமுதல் செய்யப்பட்ட தொகை, வழக்கில் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது:பதிவுத்துறையில், லஞ்ச ஒழிப்பு துறையினர், திடீர் சோதனை நடத்துவதில் தவறில்லை. தற்போது வரை நடந்த சோதனைகளில், உண்மையில் லஞ்சத்தில் கொழிக்கும் பல நபர்கள், லாவகமாக தப்பித்து விடுகின்றனர். சோதனை நடக்கும் போது, பொறுப்பில் இருக்கும் உதவியாளர்களே பெரும்பாலும் சிக்குகின்றனர். அதிலும், பொது மக்கள் வைத்திருக்கும் பணத்தை, லஞ்சம் கொடுக்க கொண்டு வரப்பட்டதாக, சோதனைக்கு வருவோர் கணக்கில் காட்டுகின்றனர்.
இது, லஞ்சத்தில் நாட்டம் இல்லாத சார் - பதிவாளர்களை பாதிக்கிறது. எனவே, பொதுமக்கள் பதிவுக்கு வரும் போது, ரொக்க பணத்தை உள்ளே எடுத்து வர வேண்டாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.சார் - பதிவாளர்கள் அலுவலகத்தில், ஒவ்வொரு பதிவுக்கும் வரும் ஆவணங்களில், நுாற்றுக்கணக்கான தாள்கள் இருக்கும். அவற்றைச் சரிபார்த்துப் பதிவு செய்வதென்றால், நாள் ஒன்றுக்கு, 20 ஆவணங்களே பதிவு செய்ய முடியும்.
ஆனால், தினமும் நுாற்றுக்கணக்கான அல்லது குறைந்தபட்சம் 50 பதிவுகளாவது நடக்கின்றன. ஒவ்வொரு ஆவணத்தையும் சார் - பதிவாளர் படிப்பது இயலாது என்பதால், அருகில் இருக்கும் ஊழியர்களிடம் அல்லது நபர்களிடம் அவை, 'தள்ள'ப்படுகின்றன. அப்படிச் செய்யும்போது, 'உன் ஆவணத்தை முதலில் நகர்த்தணும்னா, இவ்வளவு தொகை 'வெட்டினா' நடக்கும்' என, வெளிப்படையாகக் கூறப்படுகிறது. பொதுமக்களோ, வந்த வேலை முடிந்தால் போதும் என்ற எண்ணத்தில், 'வெட்டல்' வேலையை மேற்கொண்டு, தங்கள் ஆவணங்களைப் பதிவு செய்து கிளம்புகின்றனர்.கண்காணிப்பு கேமரா என்பதெல்லாம், 'ஜுஜுபி' தான்!
No comments:
Post a Comment