வங்க கடலில் உருவான, 'நிவர்' புயல், நேற்று அதி தீவிர புயலமாக உருவெடுத்து, மாமல்லபுரத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையே சுற்றி சுழன்று, கோர தாண்டவம் ஆடியது. மணிக்கு, 150 கி.மீ.,க்கு மேல் வீசிய சூறாவளி காற்றின் ஆக்ரோஷத்தால் மரங்கள்,மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன; ஏராளமான கட்டட மேற்கூரைகள் காற்றில் பறந்தன. சென்னை, செங்கல்பட்டு, கடலுார் உள்ளிட்ட பல மாவட்டங்கள், துவம்சம் ஆனதால்,இன்றும், 16 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை உட்பட பல மாவட்டங்கள், தண்ணீரில் தத்தளிக்கின்றன.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை என்றாலே, புயல் வீசும் பருவமாகவே உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலடுக்கு சுழற்சி என்று, பல்வேறு நிலைகளில் மழை பெய்கிறது. பல நேரங்களில், புயல் தாக்குதலில் இருந்தும் தப்புவதில்லை.இம்மாதமும், 16ம் தேதி, குமரிக்கு தென் கிழக்கில், இலங்கைக்கு கிழக்கில், வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது, படிப்படியாக வலுப்பெற்று புயலாகவும், பின் அதி தீவிர புயலாகவும் உருவெடுத்தது. இதற்கு, 'நிவர்' எனப் பெயரிடப்பட்டது.
இரண்டு நாட்களாக, தமிழக கடற்பகுதிக்கு அருகே மையம் கொண்டிருந்த, நிவர் புயல், காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே, புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என, அறிவிக்கப்பட்டது. நேற்று நண்பகல் அல்லது பிற்பகலில் புயல் கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.
150 கி.மீ., வேக சூறாவளி
ஆனால், கடலில் காற்று வீசும் சூழல் மாறியதால், புயலின் நகர்வு வேகம், 4 கி.மீ., ஆக குறைந்தது. இதன் காரணமாக, நள்ளிரவு அல்லது இன்று அதிகாலை தான் புயல் முழுவதுமாக கரையை கடக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மைய, தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்திருந்தார்.கடலுக்குள் இருந்து வரும்போது, முதலில், 4 கி.மீ., வேகத்தில் நகர்ந்த புயல், பின், மணிக்கு, 11 கி.மீ., வேகமாக அதிகரித்தது.
இந்நிலையில், நேற்று மதியம், 2:30 மணி முதல், கடலுார் முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வரை, புயலின் வௌிப்புற பகுதி நுழைய துவங்கியது.புயலின் வெளிப்பகுதி கரைக்குள் நெருங்கியதில் இருந்து, காற்றின் வேகம், மணிக்கு, 40 கி.மீ., வேகம் முதல், 150 கி.மீ.., வரை அதிகரித்து, சூறாவளியாக சுழன்றடித்தது. மொத்தம், 40 மீட்டர் விட்டம் உடைய, புயலின் மைய கண் பகுதி, புதுச்சேரியை நெருங்கியது.
10 மணி நேரத்துக்கு மேல் ஆட்டம்
புயலின் வெளிப்புற சுவர், மதியம், 2:30 மணிக்கு நில பகுதியை தொட துவங்கியதில் இருந்து, 10 மணி நேரத்துக்கு மேலாக, மழை விட்டு விட்டு பெய்தது. பின், அசுர பலத்துடன் கரையை நெருங்கியது. இதன் காரணமாக, பல இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கன மழையும் பெய்தது. புயலின் கோர தாண்டவத்தில் தாக்கு பிடிக்க முடியாமல், பெரும்பாலான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன; மின் கம்பங்கள் சாய்ந்தன; விளம்பர பலகைகள் துாக்கி எறியப்பட்டன.கடல் அலைகள், 30 அடி உயரம் வரை, ஆக்ரோஷமாக எழுந்தன. கரைகளில் இருந்து, பல கி.மீ., துாரத்துக்கு கடல் நீர், தாழ்வான இடங்களுக்குள் புகுந்தது.
சென்னையில், மெரினா முதல் கிழக்கு கடற்கரை சாலையின் பெரும்பாலான பகுதிகளில், கரைகளில் கடல் நீர் தேங்கி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.பல இடங்களில் பெரும் இரைச்சலுடன் சூறாவளி காற்று வீசியது. குடியிருப்பு பகுதிகள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், மரங்கள் முறிந்தன. நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சேதமடைந்தன. வீடுகள், அலுவலகங்களில் இருந்த ஜன்னல் கதவும், கண்ணாடி கதவுகளும் உடைந்து விழுந்தன.
மின் கம்பங்கள், வாகனங்கள் சேதம்
சென்னையில், 90 கி.மீ.,க்கு மேல் சூறாவளி வீசியதால், பல இடங்களில் மரங்கள் முறிந்தன. கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
பல இடங்களில் வாழை மரங்கள் சாய்ந்தன; தென்னைகள் முறிந்தன. ஓட்டு வீடுகளில் கூரைகள் துாக்கி எறியப்பட்டன. கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது, மரக்கிளைகள் விழுந்து சேதமாகின.சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், தாழ்வான இடங்கள் மற்றும் ஏரிகளை சுற்றிய பகுதிகளில், மழை நீர் புகுந்து, குடியிருப்புகளை வௌ்ளம் சூழ்ந்தது.மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் கம்பங்களும் பல இடங்களில் சாய்ந்தன. சில இடங்களில் வீடுகளின் மேல் இருந்த, பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் பறந்தன.
ஒருவர் பலி
சில இடங்களில் மின் கோபுரங்கள், மொபைல் போன் கோபுரங்கள் சாய்ந்தன. கேபிள் 'டிவி' மற்றும் தனியார் இணையதள இணைப்பு கேபிள்களும் அறுந்து விழுந்தன. போலீஸ் சிக்னல் கம்பங்கள், சாலைகளில் இருந்த விளம்பர பதாகைகள், சாலைகளின் வழிகாட்டு பலகைகள் மாயமாகின.சென்னை, ஐஸ் அவுஸ் பகுதி, பெசன்ட் ரோடில், மரம் முறிந்து விழுந்ததில், அந்த வழியே நடந்து சென்ற, 50 வயது மதிக்கத்தக்கது நபர், நேற்று மாலை உடல் நசுங்கி இறந்தார்.
புயலின் கோர தாண்டவத்தை, வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெரும்பாலான இடங்களில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. அதனால், மின் விபத்துகள் தவிர்க்கப்பட்டன.நிவர் புயலின் தாக்கம் காரணமாக, அலைகள் கொந்தளித்ததால், நேற்று காலை முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதி சசாலைகள் மூடப்பட்டன; வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கடலுார், புதுச்சேரி, நாகை, செங்கல்பட்டு மாவட்ட கடலோர பகுதிகளில், பொது மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டிருந்தது. போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டதால், உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.
16 மாவட்டங்களுக்கு விடுமுறை
கன மழை காரணமாக, 16 மாவட்டங்களுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, நேற்று உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அதை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று நேரில் பார்வையிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
'நிவர்' புயல், புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரசு சார்பில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், அரசு முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். சென்னையில் உள்ள, 200 வார்டுகளிலும், முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை, 400 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அச்சப்பட வேண்டியதில்லை
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரை, படிப்படியாக திறக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 6,000 கன அடி நீர், அடையாறில் செல்கிறது. 60 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லக் கூடிய அளவிற்கு, ஆற்றின் அகலம் உள்ளது. எனவே, பொது மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை.
சென்னை மாநகரத்தில், 30 தாழ்வான பகுதிகளில், தண்ணீர் தேங்கியுள்ளது. அதை வெளியேற்றும் பணி நடக்கிறது. புயலால் மக்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
புயல் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், பெரம்பலுார், அரியலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் ஆகிய, 16 மாவட்டங்களுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்படுகிறது. புயலால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நிவர் - 2வது புயல்!
இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை காலத்தில் உருவான, இரண்டாவது புயல், நிவர். ஏற்கனவே, குமரி கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, தென் மாவட்டங்களில் மழையை கொட்டியது. பின், மாலத்தீவு அருகே அரபி கடல் வழியாக கடந்து சென்று, 'கேட்டி' என்ற புயலானது. இந்த புயல், இந்திய கடல் பகுதியில் இருந்து விலகி சென்றதால், தமிழக பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இதன்பின் உருவான, இரண்டாவது புயல், நிவர், தமிழக பகுதி வழியே கரை கடந்ததால், பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
எட்டு ஆண்டுக்குப் பின்!
வடகிழக்கு பருவ மழை காலத்தில் உருவான, நீலம் என்ற புயல், 2012ம் ஆண்டில், மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இந்த புயல், தமிழக கடற்பகுதி வழியே கடந்து, ஆந்திராவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில், 100 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்படுத்தியது.
அதன்பின், தற்போது நிவர் புயல், மாமல்லபுரத்தில் கரையை கடந்துள்ளது. சேத விபரம், ஓரிரு நாளில் முழுமையாக தெரிய வரும்.
No comments:
Post a Comment