திருச்சி காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்படுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடி, கள்ளிக்குடியில் ரூ.77.6 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மார்க்கெட்டை திறக்க உத்தரவிடக்கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், திருச்சி காந்தி மார்க்கெட்டில் 3000 கடைகளுக்கு மேல் உள்ளன. இங்கு கூட்ட நெரிசலை குறைக்க கள்ளிக்குடியில் புதிதாக மத்திய காய்கறி வணிக வளாகம் கட்டப்பட்டது. கரோனா பரவல் காரணமாக காந்தி மார்க்கெட் மூடப்பட்டு பொன்மலைஜி கார்னர் பகுதிக்கு தற்காலிகமாக மார்க்கெட் மாற்றப்பட்டது.
காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறந்தால் திருச்சியில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும், கரோனா பரவல் அதிகரிக்கும். எனவே காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடவும், கள்ளிக்குடியில் புதிதாக கட்டப்பட்ட மார்க்கெட்டை திறக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெவே விசாரணைக்கு வந்தபோது, காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை விலக்கக்கோரி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் வழக்கறிஞர் வாதிடுகையில், காந்தி மார்க்கெட்டில் 2000 கடைகள் உள்ளன. கள்ளிக்குடியில் 700 கடைகள் மட்டுமே உள்ளன என்றார்.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், கடந்த இரண்டு நாளாக காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள் போராட்டம் நடத்தி
நடத்தி வருகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளது என்றார்.
இதையடுத்து, காந்தி மார்க்கெட்டை தற்காலிகமாக திறக்க அனுமதி வழங்கிய நீதிபதிகள், புதிதாக கட்டப்பட்டுள்ள கள்ளிக்குடி மார்க்கெட்டில் தற்போதுள்ள வசதி மற்றும் தேவைப்படும் வசதிகள் குறித்து அரசு தரப்பில், வியாபாரிகள் சங்கம் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை டிச. 1-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment