தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பில், 2019 ஏப்., 21ல், 'ஈஸ்டர்' தினத்தில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.இதில், 359 பேர் கொல்லப்பட்டனர்; 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இந்த தாக்குதலை ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சஹ்ரான் தலைமையில், ஒரு பெண் உட்பட ஒன்பது பேர் நடத்தியது தெரிய
வந்தது. வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சஹ்ரான், தமிழகத்தில் சென்னை மண்ணடி, கோவை; கேரள மாநிலத்தில் பல இடங்களில் தங்கியிருந்ததும், சமூக வலைதளங்கள் வாயிலாக, ஐ.எஸ்., அமைப்புக்கு ஆட்களை திரட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக, தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ., அதிகாரிகள், 112 பேரை கைது செய்துள்ளனர் என ராஜ்யசபாவில், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டியும் கூறியிருந்தார். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவான, அல் - ஹிந்த் சார்பில், தென் மாநிலத்தில் சில சதி வேலைகளை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. இந்த அமைப்பை கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த காஜா மொய்தீன் என்ற பயங்கரவாதி, டில்லியில் தங்கி வழிநடத்துவது, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதையடுத்து, காஜா மொய்தீன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
சமீபத்தில், பயங்கரவாத செயலுக்கு ஆட்களை திரட்டி வந்த மதுரையை சேர்ந்த முகமது இக்பால் என்ற செந்தில் குமார் கைது செய்யப்பட்டார். பின், இவரது கூட்டாளிகள் கைதாகினர். இவர்களிடமிருந்து சதி திட்டம் குறித்த 30 புத்தகங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்நிலையில், கவர்னராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவியை, டி.ஜி.பி., சைலேந்திர பாபு நேற்று காலை சந்தித்து பேசினார். இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆர்.என்.ரவி, ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். உளவுத் துறையில் சிறப்பு இயக்குனர் உட்பட பல பொறுப்புகளை வகித்தவர். ஒருங்கிணைந்த உளவுத்துறை இயக்குனராகவும்
இருந்தவர். கவர்னர் - டி.ஜி.பி., சந்திப்பின் போது, தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து வருவது குறித்து, முக்கிய அம்சமாக பேசப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment