பல வியாபாரங்கள் செய்து தோற்றுவிட்ட
ஒருவன் கடைசியில் என்ன வியாபாரம்
செய்வதென்றே தெரியாத நிலையில் அந்த
ஊருக்கு வந்த சந்நியாசி ஒருவரை சென்று
சந்தித்து தனது நிலைமையை சொல்லி
புலம்பினான்.
"நீ வியாபாரம் செய்யவேண்டும் என்று
முடிவு செய்தது தவறல்ல. என்ன வியாபாரம்
செய்யவேண்டும் என்று முடிவு செய்ததில்
தான் தவறு. மக்களுக்கு எது அன்றாடம்
தேவைப்படுகிறதோ எது வாங்க வாங்க
தீர்ந்துபோகிறதோ அதை நீ வியாபாரம்
செய் உன் பிரச்சனை முடிவுக்கு வரும். நான்
வடக்கே யாத்திரை செல்கிறேன்.
இரண்டொரு மாதங்களில் திரும்ப
வருவேன். அப்போது வந்து என்னை
மீண்டும் பார்" என்று ஆசி கூறிவிட்டு
சென்றார்.
இவனுக்கு அப்போது தான் உண்மை
புரிந்தது. மக்களின் தேவையை
அறிந்துகொள்ளாமல் நமக்கு சுலபமாக
இருக்கிறதே என்று நாம் முடிவு செய்து
இத்தனை நாள் வியாபாரம் செய்துவந்தோம் அதனால் தான் தோல்வி
ஏற்பட்டது என்று உணர்ந்துகொண்டான்.
தொடர்ந்து தனது மனைவி மற்றும் நலம்
விரும்பிகளுடன் ஆலோசித்து, அந்த ஊரில்
ஒரு காய்கறி கடையை திறந்தான். பக்கத்து
ஊர்களுக்கு சென்று காய், கனி வகைகளை
வாங்கி வந்து தனது கடையில் நியாயமான
விலைக்கு விற்றான்.
இதைத் தொடர்ந்து
வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
அவனுக்கு வாடிக்கையாளர்கள் பெருகினர்.
துறவியின் வாக்கு பலித்ததை எண்ணி
அகமகிழ்ந்தவன் அவருக்கு மானசீகமாக
நன்றி சொன்னான்.
இந்நிலையில், இவனது வியாபாரத்தை
பற்றி கேள்விப்பட்ட பக்கத்து ஊர்
செல்வந்தர் ஒருவர், இவனது கடைக்கு
எதிரே இருந்த ஒரு காலி நிலத்தை வாங்கி
அந்த இடத்தில் மிக பிரமாண்டமான கட்டிடம்
ஒன்றை கட்ட ஆரம்பித்தார். தனது கடைக்கு
எதிரே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்படுவதை
பார்த்த இவன் என்ன ஏது என்று
விசாரித்தபோது, மிகப் பெரிய பல சரக்கு
கடை ஒன்று அங்கு வரப்போவதாகவும்,
அங்கு காய்கறி முதல் மளிகை சாமான்கள்,
வீட்டு உபயோக வரை அனைத்தும்
கிடைக்கும் என்றும் கூறினார்கள்.
அதைக் கேட்ட இவனுக்கு அடிவயிறு
கலக்கியது. இத்தனை ஆண்டுகள்
நஷ்டத்தில் வணிகம் செய்து வந்தோம்.
இப்போது தான் ஓரளவு வியாபாரம்
ஆகிறது. இந்நிலையில் இப்படி ஒரு
போட்டியா? இந்த கடை கட்டி
முடிக்கப்பட்டால், எல்லோரும் இதற்கு செல்லவே விரும்புவார்கள்... என் கடையை
யார் எட்டிப் பார்ப்பார்கள்? இறைவா இது
என்ன சோதனை என்று கலங்கித்
தவித்தான்.
இந்நிலையில், அந்த சந்நியாசியும் தனது
யாத்திரை முடிந்து திரும்பினார். அவரிடம்
சென்று நடந்ததை விளக்கி, "நான்
இப்போது என்ன செய்யவேண்டும்?"
என்றான்.
"ஒன்றும் வேண்டாம். நான் சொல்வதைப்
போல செய். தினமும் காலை உன் கடையை
திறக்கும்போது, *'இன்று எனக்கு வியாபாரம் நன்றாக நடக்கவேண்டும்'* என்று கடவுளை
பிரார்த்தனை செய். அப்படியே எதிர்புறமும்
திரும்பி *அந்த புதிய கடையிலும் நன்றாக வியாபாரம் நடக்க வேண்டும்'* என்று
பிரார்த்தனை செய். ஒப்புக்காக
பிரார்த்திக்காமல் மானசீகமாக அதை
விரும்பு. நல்லதே நடக்கும்" என்றார்.
"என்னது எனது போட்டியாளரும் நன்றாக
இருக்கவேண்டும்? அவருக்கும் நன்கு
வியாபாரம் நன்கு நடக்கவேண்டும் என்று
பிரார்த்திப்பதா?"
"ஆமாம்... நீ அவருக்கு கூறும் ஒவ்வொரு
வாழ்த்தும் நல்லெண்ணமும் உனக்கே
பன்மடங்கு திரும்ப வரும். அதே போல அதே
போல அவருக்கு தீமை நினைத்தால்
அதுவும் உனக்கே திரும்ப வரும்" என்றார்.
"அதே போல அவரை எங்கேனும் சந்திக்க
நேர்ந்தால், ஒரு போட்டியாளரை பார்ப்பது
போல பார்க்காது, ஒரு நண்பரை நலம்-
விரும்பியை பார்ப்பது போல பார்த்து ஒரு
புன்னகை செய்." என்றார்.
அந்த சந்நியாசி மீதும் அவரது
வார்த்தைகள் மீதும் இவனுக்கு பெரு மதிப்பு
உண்டு என்பதால் அவர் கூறியதைப்
போலவே தினமும் முழு மனதுடன்
தனக்காகவும் அந்த எதிர்
கடைக்காரருக்காகவும் பிரார்த்தனை
செய்து வந்தான். அந்த எதிர்கடைக்காரரை
பார்க்கும்போதெல்லாம் புன்னகை செய்தும்
வந்தான்.
இதன் பயனாக நாளடைவில் இருவரிடமும்
ஒரு வித நட்பு ஏற்பட்டுவிட, தனது கடைக்கு
காய்கறிகளை கொள்முதல் செய்யும்
பொறுப்பை இவரிடம் விட்டுவிட்டார் அவர்.
விளைவு இவனுக்கு பன்மடங்கு பிஸ்னஸ்
கிடைத்தது.
நாளடைவில் இவன் கடையும் வளர்ந்து ஒரு
மிகப் பெரிய காய்கறி சந்தையாக
மாறிவிட்டது. மெல்ல மெல்ல அந்த பகுதி
முழுக்க வளர்ந்து அந்த பகுதியே ஒரு மிகப்
பெரிய வணிக சந்தையாக மாறிவிட்டது.
ஒரு நேர்மறையான அணுகுமுறை,
மனோபாவம் எந்தளவு அவரது
வாழ்க்கையை மாற்றியிருக்கிறது
பார்த்தீர்களா?
*நாம் இந்த உலகத்தில் தனியாக இல்லை .*
*ஒவ்வொரு விஷயமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை.* நமது
எண்ணங்கள் தான் நமது எதிர்காலத்தை
தீர்மானிப்பதில் மிகப் பெரிய பணியை
செய்கின்றன. *ஒருவரைப் பற்றி நமக்கு ஏற்படும் நல்ல சிந்தனையோ கெட்ட சிந்தனையோ அவரை தீர்மானிப்பதில்லை நம்மையே தீர்மானிக்கின்றன.* எனவே
வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புகிறவர்
என்றும் எப்போது நல்ல நேர்மறையான
சிந்தனையையே
வளர்த்துக்கொள்ள வேண்டும். ...
No comments:
Post a Comment