அவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க என்ன வேண்டும்..? பணம்..? பதவி ஒரு பெரிய பங்களா..? ஆடம்பர வாழ்க்கை…….
இவை மட்டும் கிடைத்து விட்டால் போதுமா..? காலம் முழுவதும் கவலைகளின்றி சந்தோஷமாக இருந்து விடுவோமா..?
சந்தோஷம் எதில் தான் இருக்கிறது?
ரொம்ப சுலபம்.
நம் “எண்ணத்தில்” தான் அது இருக்கிறது.
1. *எல்லா மனிதர்களையும், எல்லா நிகழ்வுகளையும் கொண்டாடுங்கள்!*
உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு நல்ல விஷயங்களையும் கவனியுங்கள்.. சாலையில் நடக்கும் போது, எரிச்சலை ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசலைப் பார்த்திருப்பீர்கள். அதே சாலையின் ஓரத்தில் பூத்துக் குலுங்கும் மலர்களை ரசித்திருக்க மாட்டீர்கள். உங்களை சுற்றியிருக்கும் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரின் நல்ல விஷயங்களை ரசியுங்கள்.
கொண்டாடுங்கள்.
மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.. குழந்தைகளிடம் இதை நாம் கற்கலாம், எதையுமே ரசித்துப் பார்த்து மகிழ்வது குழந்தைகளின் குணம்.
2. நல்ல நண்பர்களை எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லாமல் சம்பாதியுங்கள்!
உளவியல் ஆய்வின் படி, ஒருவரின் மனதின் மகிழ்ச்சியை அவரைச் சுற்றியிருக்கும் விஷயங்களே முடிவு செய்கின்றன. எனவே, மிகவும் மகிழ்ச்சியான நண்பர்கள், உங்களுக்கு ஊக்கமளிக்கும் நண்பர்கள், உங்களைக் குறை சொல்லாத, உங்கள் நம்பிக்கையை சிதைக்காத நண்பர்களுடனேயே நேரத்தைச் செலவிடுங்கள்..! இது உங்கள் பாசிட்டிவ் எனர்ஜியைக் குறைக்காமல் வைத்திருக்கும்.
3. நம் மனதுக்குபிடித்ததைச் செய்யவும்!
பிடித்த விஷயங்களை செய்யும் போது, மனம் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கும். பலருக்கு, வாழ்க்கையின் மீது வெறுப்பு வர, பிடிக்காத வேலையைச் செய்து கொண்டிருப்பதே காரணமாக இருக்கும். வேண்டாம் எனத் தவிர்க்கவும் பொருளாதார சூழல் இடம் தராது. அதே சமயம் உங்களுக்கு பிடித்த சினிமா பார்ப்பதையோ, புத்தகம் படிப்பதையோ, பயணம் செல்வதையோ யாராலும் தடுக்க முடியாதே? இவற்றை அடிக்கடி செய்யுங்கள்..மகிழ்ச்சி அதிகரிக்கும்.
4. *செய்வதைத் திருந்தச் செய்யவும்!*
நீங்கள் எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அதில் உங்கள் மனமும், உடலும் ஒன்றி இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மனம் தேவையற்ற சிந்தனைகள் பற்றி நினைக்காது. தேவையற்ற சிந்தனைகள் மூளையைக் குழப்பாமல் இருந்தாலே, மகிழ்ச்சியும் குறையாது.
5. *கற்றுக் கொள்வதை எந்த வயதிலும் நிறுத்தாதீர்கள்!*
சில ஆய்வுகளின் படி, புதிய விஷயங்களை கற்றுக் கொண்டே இருப்பதன் மூலம், மூளை எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்குமாம். இதனால் உங்களது துன்ப நினைவுகளை அது அசை போடாது எப்போதும் பிசியாக இருக்க வைக்கும். எனவே மனம் எப்போதும், மகிழ்ச்சியாக இருக்கும்.
6. *தடை..அதை உடை.!*
எப்போதும், எந்த இடத்திலும் பிரச்சினைகளே இருக்கக் கூடாது என நினைக்காதீர்கள். எந்த பிரச்சினை வந்தாலும், அதனைத் தாங்கும் வலிமை வளர வேண்டும் என நினையுங்கள். நீங்கள் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள, எதிர்கொள்ள உங்கள் தன்னம்பிக்கைத் தானாக அதிகரிக்கும். தன்னம்பிக்கையை வளர்த்தலும் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
7. எது நடந்தது, அது நன்றாகவே நடந்தது என்று நினையுங்கள்
நீங்கள் அடிக்கடி கவலைப்படும் நபராக இருந்தால், உங்கள் கடந்த காலத்தில் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். சோக நினைவுகள் வருத்தத்தைத் தந்தாலும், அவை நடந்து முடிந்த விஷயங்கள். அவற்றை மாற்றவும் முடியாது. எனவே இல்லாத, கடந்த காலத்தை நினைத்து, நிகழ்கால மகிழ்ச்சியை இழக்காமல், நிகழ்காலத்தில் வாழுங்கள். நடப்பதை மட்டுமே நினையுங்கள்.. பாதி கவலைகள் பறந்தோடும்.
8. *அடிக்கடி மனம்விட்டு அனைவரிடமும் பேசி சிரியுங்கள்!*
அடுத்த நொடி, என்ன நடக்கும் என்பது கூட தெரியாத, நிச்சயமற்ற வாழ்க்கை தானே நாம் வாழ்வது? இதில் ஏன் இவ்வளவு சிக்கல்களை உருவாக்க வேண்டும்? நகைச்சவை உணர்வு கொண்டவராக மாறி விடுங்கள்.
முடியவில்லையா? ஒரு நகைச்சுவைப் படம் பார்க்கலாம். ஹியூமர் நிரம்பி வழியும் நண்பர்களுடன் பேசலாம்..சிரிப்பு நமக்கு கிடைத்திருக்கும் பரிசு..அதைப் பயன்படுத்துங்கள்.. அது தான் உங்கள் கோபத்தை, விரக்தியை விரட்டும் மருந்து..
9. *மன்னிக்கக் கற்றுக் கொள்வோம்!*
கோபம் என்பது அடுத்தவர்களின் தவறுக்காக, நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் சுயதண்டனை. அதை ஏன் அடிக்கடி அனுபவிக்க வேண்டும்? பதிலாக அவர்களை மன்னித்துப் பாருங்கள்.. உங்கள் மனமும் மகிழும்..உங்கள் குணமும் வளரும்.. தவறு செய்யாதவர்கள் யாருமே இல்லை தானே? எனவே மறப்போம், மன்னிப்போம் என இருந்தால், உங்கள் மதிப்பையும், மகிழ்ச்சியையும் இது இன்னும் அதிகரிக்கும் தானே !
10. *நன்றி சொல்வது, நன்று!*
உங்களை சுற்றியிருப்பவர்களிடம் அடிக்கடி நன்றி சொல்லுங்கள்.அவர்கள் செய்யும் சிறிய உதவியோ, பெரிய உதவியோ அதனைப் பாராட்ட மறக்காதீர்கள். நன்றி சொல்ல மறக்காதீர்கள்.
11. *உறவின் ஆழம் அதிகரிக்கட்டும்!*
வீடு, அலுவலகம், சுற்றம் என சமூகத்தில் பல பேரிடம் நாம் இணைந்தே வாழ்கிறோம். அப்படி நாம் கொண்டுள்ள சொந்தங்களில், நெருக்கமான உறவுகளுடன் நேரம் செலவிடும் போது, அதிக மகிழ்ச்சி அடைகிறோம். அப்படி நெருக்கமான மனிதர்களை அதிகம் வளர்த்துக் கொள்ளுங்கள். உற்சாகம் அதிகமாகும்.
நீங்கள் விரும்புவது போன்று, மனிதர்கள் வேண்டுமென்றால், இந்த உலகில் யாருமே கிடைக்கமாட்டார்கள். எனவே உங்களைச் சுற்றியிருக்கும் எல்லோரையும் அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்தவரை அளவுக்கதிகமாக விரும்புங்கள்.. காரணம் அன்பு செய்தல் அவ்வளவு சுகம் !
உலகில் உங்களது மிகச்சிறந்த காதலன் / காதலி நீங்களாகவே இருக்க வேண்டும். உங்கள் உடலின் மீது உங்களுக்கு மிகுந்த அக்கறை நிச்சயம் தேவை. சுவர் இருந்தால் தானே சித்திரம்? எனவே, உணவு, உறக்கம் என உங்கள் விஷயங்களில், குறிப்பாக உங்கள் உடல் நலனில் அதிக கவனம் இருக்கட்டும்.
நீங்கள் முதலில்உங்களை விரும்புங்கள்.
ரசியுங்கள்……. கொண்டாடுங்கள்…வாழ்க்கை வாழத் தானே!…..
No comments:
Post a Comment