:அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்களாக பன்னீர்செல்வம், பழனிசாமி நியமிக்கப்பட்டது செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதற்காக கட்சி விதிகளை திருத்தியதை எதிர்த்த மனுவை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், கட்சியின் பொதுச்செயலருக்கான அதிகாரங்களை, ஒருங்கிணைப்பாளர்களுக்கு அளித்ததை, தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது சரியே என்றும் தீர்ப்பு அளித்துள்ளது.
திருச்செந்துாரைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:நான், அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர். அ.தி.மு.க., விதிகளின்படி, புதிய பதவிகளை உருவாக்கவோ, பொதுச் செயலர் என்ற பதவியை மாற்றவோ, பொதுச் செயலருக்கு உள்ள அதிகாரங்களை மாற்றவோ, பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை.
பொதுக்குழு முடிவு
கடந்த 2017 செப்., 12ல் நடந்த பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என புதிதாக இரு பதவிகளை உருவாக்கி, பொதுச் செயலருக்கு உள்ள அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. இந்த பொதுக்குழு முடிவுகளின்படி, திருத்தப்பட்ட கட்சி விதிகளை, தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.
தேர்தல் ஆணையம் வசம், ஜெயலலிதாவால் அளிக்கப்பட்டிருந்த கட்சி விதிகளின்படி, இந்த விதிகள் திருத்தம் செய்யப்பட்டதா என்பதை, ஆணையம் பரிசீலித்திருக்க வேண்டும். அதன் பிறகே, திருத்தப்பட்ட விதிகளை ஏற்றிருக்க வேண்டும்.எனவே, 2017 செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படி, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோருக்கு பொதுச் செயலருக்கான அதிகாரங்களை அளித்து, அதற்காக கட்சி விதிகள் திருத்தப்பட்டதை, தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது தவறு.
இதுகுறித்து, 2018 மே 4ம் தேதி, தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். 2016 டிசம்பர் 5ல், ஆணையத்தில் இருந்த அ.தி.மு.க., கட்சி விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற, கட்சி நிர்வாகிகளுக்கு ஆணையம் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சங்கர் ஆஜராகி, ''திருத்த விதிகளை, தேர்தல் ஆணையம் ஏற்றது சரியல்ல; அவற்றுக்கு அங்கீகாரம் அளித்திருப்பது தவறானது,'' என்றார்.
உத்தரவு
இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:அ.தி.மு.க., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை, தேர்தல் ஆணையம் ஏற்றதை எதிர்த்து, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி, சில மாதங்களுக்கு முன் வரை, ஆட்சியில் இருந்துள்ளது.கடந்த 2018 மே மாதத்துக்கு பின், 2019 லோக்சபா தேர்தலிலும், 2021 சட்டசபை தேர்தலிலும், இந்த கட்சி போட்டியிட்டுள்ளது; இடைத்தேர்தலிலும் போட்டியிட்டுள்ளது. தாமதமாக, இந்தப் புகாரை மனுதாரர் எழுப்பி உள்ளார்.பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் நிர்வாகி, அந்த கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பினால், சாதாரணமாக ஆணையம் ஏற்கத் தான் செய்யும். கட்சி எடுத்த முடிவை, அதன் அனுமதிக்கப்பட்ட பிரதிநிதி ஆணையத்திற்கு தெரிவித்து
உள்ளார்.
சிவில் வழக்கு
இதில், தேர்தல் ஆணையம் தன் மனதை செலுத்தவோ, அந்த ஆவணம் சரிதானா என்பதை ஆராயவோ தேவையில்லை. மனுதாரருக்கு இதில் ஏதும் பிரச்னை இருந்தால், சிவில் வழக்கு தொடரலாம்; கட்சி அமைப்புக்குள்ளும் எழுப்பலாம்.இந்த வழக்கில் பொது நலன் இருப்பதாக தெரியவில்லை. இது, ஒரு அரசியல் கட்சி சம்பந்தப்பட்டது. எனவே, அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அனுப்பிய ஆவணங்களை, தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது, முரணாக தெரியவில்லை.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment