தமிழக ஆளுநர் ரவி, ஏற்கெனவே ஐ.பி-யில் பணியாற்றியவர். அவருக்குத் தமிழகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களும் தெரியும்
தமிழக பா.ஜ.க தலைவரும், தமிழக முதல்வரும் அடுத்தடுத்த நாள்களில் தமிழக ஆளுநரைச் சந்திக்க... அது அரசியல் களத்தில் பல்வேறு வியூகங்களுக்கு வித்திட்டுள்ளது. உண்மையில், இரண்டு தரப்பினரும் எதற்காக ஆளுநரைச் சந்தித்தார்கள், அவரிடம் என்ன பேசினார்கள்...
தமிழக ஆளுநராக ரவி நியமிக்கப்பட்டபோதே மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே மத்திய அரசு அவரை நியமித்திருக்கிறது என்கிற பேச்சுகள்...
திமுகவின் கூட்டணி கட்சியினராலும் இவர்களால் விலைக்கு வாங்கப்பட்ட ஊடகங்களாலும் செய்திகள் பரப்பப் பட்டன. இந்த நிலையில்தான் அக்டோபர் 12-ம் தேதியன்று தமிழக பா.ஜ.க தலைவர், ஆளுநரைச் சென்று சந்தித்திருக்கிறார். அவருடன் பா.ஜ.க மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, பா.ஜ.க சட்டமன்றக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சென்றிருக்கிறார்கள்.
இந்தச் சந்திப்பு பற்றிப் பேசும் அரசியல் பார்வையாளர்கள், “தற்போது அ.தி.மு.க-வின் செயல்பாடுகளில் தீவிரம் இல்லாததால், அரசியல்ரீதியாக அந்த இடத்தைக் கைப்பற்ற பா.ஜ.க நினைக்கிறது. அதற்கு தி.மு.க-வுக்கு எதிரான பிம்பத்தை கட்டமைக்கத் திட்டமிடுகிறது. குறிப்பாக, ‘தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே சட்டம், ஒழுங்கு சரியில்லை’ என்கிற பொதுக்கருத்து நிலவும். அந்தக் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில்தான் தற்போது ஆளுநரைச் சந்தித்து ‘தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை’ என்று புகார் அளித்திருக்கிறார்கள். இது வழக்கமான பாலிடிக்ஸ்தான்” என்றார்கள்...
பா.ஜ.க-வினருக்கும் ஆளுநருக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்து கமலாலயம் தரப்பில்... “பா.ஜ.க மாநிலத் தலைவர் சார்பில்தான் ஆளுநரிடம் நேரம் கேட்கப்பட்டது. சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்ட பிறகு, ஆளுநரை மாநிலத் தலைவர் மட்டுமே சந்தித்தால், அது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திவிடும் என்பதால், சீனியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆளுநரைச் சந்தித்த பா.ஜ.க டீம், கொலை வழக்கு, கொலை மிரட்டல் வழக்கில் சிக்கிய இரண்டு தி.மு.க எம்.பி-க்கள் பற்றியும், அவர்கள்மீது தி.மு.க பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பற்றியும் புகாராகக் கூறியிருக்கிறது. மேலும், ‘தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை’ என்ற புகாரை வாசித்தவர்கள், சமீப நாள்களாக, தமிழகத்தில் என்.ஐ.ஏ நடத்திவரும் சோதனை களையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இறுதியாக ஆளுநர், ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்.
ஆளுநர் அலுவலக அதிகாரிகளோ, “ஆளுநர் ரவி, ஏற்கெனவே ஐ.பி-யில் பணியாற்றியவர். அவருக்குத் தமிழகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களும் நன்கு தெரியும். அதேசமயம், ஓர் ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதும் அவருக்குத் தெரியும். அரசியல் கட்சியினர் ஆளுநரைச் சந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை. அந்த அடிப்படையில் பா.ஜ.க-வினரும் ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டனர். ஆளுநரும் நேரம் ஒதுக்கினார். இந்தச் சந்திப்புக்கு வேறு எந்தச் சிறப்புக் காரணமும் இல்லை” என்றார்கள்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் ஆளுநருடன் சந்திப்பை முடித்த மறுதினம், அக்டோபர் 13-ம் தேதி மாலை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆளுநருடன் சந்திப்பு நடத்தினார். இந்தச் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் இடம்பெற்றனர். முன்னதாக அக்டோபர் 11-ம் தேதியே ஆளுநரைச் சந்திக்க முதல்வர் தரப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சந்திக்கலாம் என்று முதல்வர் தரப்பிலிருந்து சொன்ன பிறகே 13-ம் தேதி சந்திப்பு நடந்துள்ளது.
“இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது?” என்று முதல்வர் அலுவலகத் தரப்பில்....
“தமிழக பா.ஜ.க தலைவர் ஆளுநரைச் சந்தித்ததற்கும், முதல்வர் ஆளுநரைச் சந்தித்ததற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ‘தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும்’ என்று மட்டுமே தமிழக அரசு சார்பில் ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும், தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலை பற்றியும், அது தொடர்பாக தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பற்றியும் மேலோட்டமாகச் சொல்லப்பட்டது. ஆளுநரும் அதை அமைதியாகக் கேட்டுக்கொண்டார். மற்றபடி முதல்வர் - ஆளுநர் சந்திப்பில் விசேஷமாக ஒன்றும் இல்லை” என்றார்கள்.
மாநில அரசின் சில அதிகாரிகளோ, “முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி அக்டோபர் 6-ம் தேதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ‘தமிழகக் கோயில் நிர்வாகத்தை அரசே நிர்வகிக்க வேண்டும்’ என்கிறரீதியில் எழுதிய ஒரு கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்தும் ஆளுநர் தரப்பில், ‘தமிழக அரசின் நிர்வாகத்தில் அசோக் வர்தன் ஷெட்டிக்கு என்ன ரோல்?’ என்று விசாரிக்க... தமிழக அரசு தரப்பிலிருந்து சில விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். முதல்வர் - ஆளுநர் சந்திப்பு நடப்பதற்கு முன்பே அக்டோபர் 11-ம் தேதி மாலை தமிழக அரசின் மூத்த அதிகாரிகள் இருவர் ஆளுநரைச் சந்தித்துள்ளனர். அந்தச் சந்திப்பிலும் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது” என்றார்கள்.
No comments:
Post a Comment