தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது, அக்கட்சிக்கு ஐ.டி., அணி துவக்கப்பட்டதும், அந்த அணியின் மாநில செயலராக தியாகராஜன் நியமிக்கப்பட்டார். தி.மு.க., ஆட்சி அமைந்ததும், தியாகராஜனுக்கு நிதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அரசின் நிதித்துறை வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்திய தியாகராஜன், ஐ.டி., அணியின் நிர்வாகத்தில் சரிவர கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
ஐ.டி., அணிக்கு ஆலோசகராக, கவிஞர் மனுஷ்யபுத்திரன் நியமிக்கப்பட்டார். இதனால், தியாகராஜன் அதிருப்தி அடைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்த மகேந்திரனுக்கு, ஐ.டி., அணி இணைச் செயலர் பதவி வழங்கப்பட்டதும் தியாகராஜனுக்கு, 'செக்' வைப்பதாக கருதப்பட்டது.இதையடுத்து, ஐ.டி., அணி செயலர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை, பொங்கலுக்கு முன் கட்சி தலைமையிடம், தியாகராஜன் வழங்கி உள்ளார். அவரது ராஜினமா ஏற்கப்பட்டு, அப்பதவியில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார். தியாகராஜன் வகித்த ஐ.டி., அணி மாநில செயலர் பதவி, மன்னார்குடி எம்.எல்.ஏ.,வும், அயலக அணிச் செயலருமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, டி.ஆர்.பி.ராஜா வகித்த அயலக அணிச் செயலர் பதவி, ராஜ்யசபா எம்.பி., அப்துல்லாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் நேற்று வெளியிட்டார்.
No comments:
Post a Comment