ஒரு முறை ராமருக்கும்,ராவணனுக்கும் போர் நடந்தது.இதில் ராவணன் நிராயுதபாணியானான்.இதனால் ராமர் ராவணனை கொல்ல மனமின்றி,"இன்று போய் நாளை வா' என திருப்பி அனுப்பிவிட்டார்.ராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்குத்தான் என்பதை ராவணன் உணரவில்லை.மீண்டும் ராமருடன் போர் செய்ய நினைத்த ராவணன்,"மயில் ராவணன்' என்ற மற்றொரு அசுரனது துணையுடன் போருக்கு கிளம்பினான்.
ராமரை அழிப்பதற்காக மயில் ராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான்.இந்த யாகம் நடந்தால் ராம-லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விபீஷணன்,யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்பும்படி ராமரிடம் கூறினான்.
ராமர் கூறியதன் பேரில் ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர்,வராகர்,கருடன்,ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.இந்த தெய்வங்கள் அனைவரும் போரில் அனுமன் வெற்றி பெற தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர்.இதன் மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மனித குல வாழ்விற்காக மயில் ராவணனை அழித்தார்.
சிறப்புகள்
இப்படி பஞ்ச முகத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால்,பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக "பஞ்சமுக ஆஞ்சநேயர்' விளங்குகிறார்.அத்துடன் வெற்றியையும் வளத்தையும் குறிக்கும் வகையில் "ஜய மங்களா' என்றும் அழைக்கப்படுகிறார்.
பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் எடுத்த காரியங்களில் வெற்றியும்,லட்சுமி கடாட்சமும்,ஹயக்கிரீவரின் அருளால் உண்மையான அறிவாற்றல், ஆன்மிக பலமும்,
வராகரின் அருளால் மனத்துணிவும்,கருடனின் அருளால் அனைத்து விதமான நஞ்சின் ஆபத்து விலகும் தன்மையும்,ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதியும்,சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தோஷம் நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை படைத்தவர்.இவரது முகங்களான கருடமுகம் பிணி நீக்கும்,வராகமுகம் செல்வம் அளிக்கும்,அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லா நலமும் தரும்,நரசிம்மமுகம் தீமையைப் போக்கும்,ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் தரும்.
பக்தர்கள் வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர்.இவரது தாடை நீண்டு இருக்கும்.
நரசிம்ம முகம்,
கருடன் முகம்,
வராஹ முகம்,
அனுமன் முகம்,
ஹயக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடிவில் ஒருங்கிணைந்து உள்ளார்.
கிழக்கு முகம் ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம்."பிரதிவாதி முகஸ்நம்பி'' என்ற சுலோக வரியினால் அனுமனை வேண்டினால் எதிரிகள் விலகுவர் என பொருள் தரும்.
தெற்கு முகம் நரசிம்ம முகம்.இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள்,பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம்.
மேற்கு முகம் கருடன் முகத் தரிசனம் சரும நோய்,விஷ நோய்,ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும்.
வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம்.தீராத கடன்,பொருள் இழப்பு,விஷ சுரம்,மர்ம நோய்கள் முதலியனவற்றை அழித்து சாந்தியும்,நிம்மதியும் தரவல்லது.பொருளாதார மேன்மை உண்டாகும்.
மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும்,சிறந்த ஞானத்தையும்,சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர்.
அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது நமக்கு சொல்வன்மை,ஆரோக்கியம்,எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும்.
ஜெய் ஆஞ்சநேயா
இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்யமாக அமைதியாயக அமோகமாகஅமைய
வாழ்த்துகள்.
No comments:
Post a Comment